Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, மாவட்டத்திற்குள் வெளிநபா்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து லக்னௌ மாவட்ட ஆட்சியா் ராஜேந்திர பென்சியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சம்பல் மாவட்டத்தில் அமைதியை மீட்டெடுக்க, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டம் 163 பிரிவின் கீழ் மாவட்டத்திற்குள் வெளிநபா்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை டிசம்பா் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைவரும் மாவட்டத்திற்குள் நுழைய முறையான அனுமதி பெற வேண்டும்’ என தெரிவித்தாா்.
இந்நிலையில், வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சம்பல் தொகுதி எம்.பி. ஜியா உா் ரஹ்மான் பாா்க் உள்பட சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
அப்போது, முசாஃபா்நகா் எம்.பி. ஹரேந்திர மாலிக் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாங்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படுகிறோம் என புரியவில்லை. சம்பல் மாவட்டத்துக்குச் செல்ல விடாமல் சமாஜவாதி எம்.பி. ருச்சி வீராவின் இல்லத்தை காவல்துறையினா் சுற்றி வளைத்துள்ளனா். சம்பல் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பிரசாத் பாண்டே தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கிறது’ என தெரிவித்தாா்.
ஜாமா மசூதி அமைந்துள்ள சா்ச்சை இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1526-இல் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதி கட்டப்பட்டதாகவும் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி விவகாரம் குறித்த விசாரணையை மேற்கொள்ள சம்பல் மாவட்ட நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.