தேமுதிக: "எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் மாறலாம்" - கூட்டணி குறித்து பிரேமல...
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைதானவர்களுக்கு மருத்துவ விசாரணை அறிக்கை வழங்க CBI மறுப்பு; காரணம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஊரடங்கு நேரம் தாண்டி அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடையைத் திறந்து வைத்ததாகக் கூறி சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், போலீஸார் தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு, மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பான சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியின் விசாரணை அறிக்கையின் நகல் கேட்டு, சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், ”சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் விசாரணை அறிக்கையில், தந்தையும் மகனும் போலீஸார் தாக்கியதில் உயிரிழக்கவில்லை. சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் நீண்ட நேரம் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இருவருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் உயிருடன் இருந்திருப்பார்கள். இதனால் எங்கள் மீது இ.பி.கோ 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சரியல்ல. இதனை நிரூபிக்க விசாரணை அறிக்கை நகல் வழங்கிட வேண்டும்.

அந்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாக இருப்பதால் வழக்குகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால் அந்த விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி என்.மாலா விசாரித்தார். சி.பி.ஐ தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரர் கோரும் ஆவணங்களை வைத்து அவர் வழக்கில் எந்த விதமாகவும் வாதிட முடியாது. எனவே மனுதாரருக்கு விசாரணை அறிக்கையின் நகல் வழங்க முடியாது” எனக் கூறப்பட்டிருந்தது.
பின்னர், ”மனுதாரரின் விசாரணை அறிக்கை நகல் பெறும் முன்பே சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொன் இசக்கியிடம் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடத்தலாம். விசாரணை அறிக்கை நகல் கிடைத்த பிறகுதான் விசாரணை நடத்த முடியுமா?” என நீதிபதி மாலா கேள்வி எழுப்பினார்.
பின்னர், சி.பி.ஐ தரப்பில், “தந்தை, மகன் மரணம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குழு கொண்டு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிகையில் மருத்துவத்துறை இணை இயக்குநரின் விசாரணை பற்றி குறிப்பிடவில்லை.

இதனால், விசாரணை அறிக்கையின் நகல் கேட்க வேண்டியதில்லை. சட்டப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி மாலா, வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்குத் தள்ளி வைத்தார். இந்த நிலையில், “இந்த வழக்கினை எப்படியெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் கைதானவர்கள் முயற்சிக்கிறார்கள். தீர்ப்பு வழங்கிட பல விதங்களில் தடை போடுகிறார்கள்” என ஜெயராஜின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.



















