"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" - டிடிவி தி...
சிங்கக் கூண்டுக்குள் தானே நுழைந்த இளைஞர் - பிரேசிலில் அதிர்ச்சி சம்பவம் | வீடியோ
பிரேசில் நாட்டில் இருக்கும் உயிரியல் பூங்கா ஒன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் தானாகவே சிங்கத்தின் கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர் 30ம் தேதி பிரேசில் நாட்டின் ஜோவோ பெசோவா நகரில் அமைந்துள்ள அறுடா கமரா (Arruda Câmara) எனும் உயிரியல் பூங்காவில் விலங்குகளை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவர் திடீரென, சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருப்பிடத்திற்குள் தானாகவே உள்நுழைந்திருக்கிறார்.

மரம் ஒன்றின் மூலம் பாதுகாப்புச் சுவரைத்தாண்டி சிங்கத்தின் இருப்பிடத்திற்குள் நுழைந்திருக்கிறார் அவர். மரத்தின் மீதாவது பாதுகாப்பாக பிடித்துக் கொண்டிருக்காமல், சிங்கம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டும் மரத்திலிருந்து சிங்கத்தை நோக்கி கீழ் இறங்கியிருக்கிறார்.
சிங்கமும் தானாக வந்த அந்த இளைஞரை, அப்படியே வாயால் கவ்வி தூக்கிச் சென்று தனக்கு இரையாக்கிவிட்டது. அப்பூங்காவில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பலியாகியிருக்கிறார்.
19-year-old in Brazil mauled to death by lion after climbing into zoo enclosure
— MustShareNews (@MustShareNews) December 2, 2025
The late teenager was reportedly diagnosed with schizophrenia and had dreamt of becoming a lion tamer. pic.twitter.com/ktOc9HPHEI
பிரேசில் நாட்டின் செய்தி ஊடகங்களில் கிடைத்த தகவல்படி சிங்கத்திடம் பலியான அந்த 19 வயது இளைஞர் பெயர் மச்சாடோ என்று கூறப்படுகிறது. அவருக்கு நீண்ட காலமாகவே சிங்கத்திடம் பழக வேண்டும், அதனைப் பராமரிக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறதாம். சமூக ஊடகங்களில் சிங்கம் மனிதர்களிடம் பழகுவதைப் பார்த்து, தன்னிடமும் சிங்கம் நன்றாகப் பழகும் என்று சிங்கத்திடம் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம் பிரேசில் சுற்றுலாப் பயணிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரியல் பூங்காக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

















