சிம்பு - 48 தயாரிப்பிலிருந்து கமல்ஹாசன் விலகல்?
சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!
இருப்பினும், சிம்பு - 48 துவங்காமல், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் மற்றும் நீண்ட தயாரிப்பு திட்டங்களின் குழறுபடிகளால் கமல்ஹாசன் விலகியுள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரம், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தை சிம்புவே தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.