BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விர...
சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி - எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10
1989-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது, சேலம் மாவட்டத்தின் ஒரு சிறிய ஊரிலிருந்து ஒருவர் தேர்தல் களத்தில் குதித்தார். அவர் பெயர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பெரும்பாலானோருக்கு அவர் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அந்தத் தேர்தலில், எடப்பாடி தொகுதியில் அவருக்கு கிடைத்த வெற்றி, திராவிட அரசியல் வரலாற்றில் மிகவும் எதிர்பாராத ஒரு அத்தியாயத்துக்கான தொடக்கமாக அமைந்து, முதலமைச்சர் பதவியிலும் அவரை அமர வைத்தது.
தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் மக்களை ஈர்க்கும் கவர்ச்சியும், உரத்த பேச்சும், ஆளுமையும்தான் பெரும்பாலும் ஒருவரை தலைவராக உயர்த்தும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த உயர்வு, ஒரு வித்தியாசமான எளிமையால் தனித்து நிற்கிறது.
இன்று அதிமுக பொதுச் செயலாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கான தொடக்க புள்ளி, அவரது முதல் தேர்தல் வெற்றியிலிருந்துதான் துவங்கியது.

1954-ல் சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகேயுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த பழனிசாமி, சாதாரண வெல்லமண்டி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி
அதிமுக-வில் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து சிலுவம்பாளையம் அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர், எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக உடைந்தபோது, ஜெயலலிதா அணியில் செங்கோட்டையனுடன் இருந்தார். ஒரு வகையில் சொல்லப்போனால், செங்கோட்டையன்தான் பழனிசாமியின் அரசியல் தொடக்கத்தை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். எடப்பாடி முதல் சேலம் மாவட்டம் வரையிலான அமைப்பு பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார் செங்கோட்டையன். அந்தப் பணிகளை எல்லாம் அமைதியாகவும், துல்லியமாகவும், முழுமையாகவும் செய்து முடிக்கும் திறன்தான், பின்னாளில் அவரது அடையாளச் சின்னமாக மாறியது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா ஆதரவு அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமே, பழனிசாமியைத் தேர்தல் அரசியலுக்குள் இழுத்தது. கட்சி பிளவுபட்டபோது அவர் ஜெயலலிதா பக்கமே நின்றார். அந்த விசுவாசத்துக்கு பலனாக, 1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதிக்கான அதிமுக சீட் அவருக்கே கிடைத்தது.
அதிமுகவில் அடிமட்டத் தொண்டராக, கிளைக்கழகச் செயலாளராக பல ஆண்டுகள் உழைத்த எடப்பாடிக்கு, அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி, சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான் கிடைத்தது. வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்திலேயே, அவர் திமுக வேட்பாளர் கே.ஆர். நடராஜனை வீழ்த்தினார். இருப்பினும், முதல் முறை போட்டியிட்டு, பெரிதாக அறியப்படாத பின்னணியிலிருந்து வந்த ஒருவருக்கு, அது சாதாரண வெற்றி அல்ல. அதைவிட முக்கியம், எடப்பாடி தொகுதி அன்று முதல், பழனிசாமியின் கோட்டையாக மாறியது.
முதல் வெற்றிக்குப் பிறகு அவர் திரும்பவும் 1991-ல் அதே எடப்பாடி தொகுதியில் வென்றார்.1996 தேர்தலின்போது காணப்பட்ட்ட மாநிலம் தழுவிய அதிமுக எதிர்ப்பு அலையில் தோற்றாலும், 2011-ல் மிகப் பெரிய வித்தியாசத்துடனும், 2016-ல் இன்னும் பெரிய வெற்றியுடனும் திரும்பி வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது உரத்த பிரசாரங்களோ திரைப்பட நட்சத்திரக் கவர்ச்சியோ அல்ல. தொகுதிக்குள்ளேயே தங்கி, மக்களோடு மக்களாக நடத்திய அமைதியான அரசியல்தான்.

பிரம்மாண்டமில்லாமல் வாக்குகளைத் திரட்டும் அவரது திறமை, ஜெயலலிதாவின் கண்களில் படத் தொடங்கியது. 2000-களின் தொடக்கத்திலேயே மேற்கு மாவட்டங்களின் கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்புக்கு அவர் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். கட்சிக்குள் சத்தமில்லாமல் வேலையை முடிக்கும் திறன் அவருக்கு அமைச்சரவையிலும் இடத்தைப் பெற்றுத் தந்தது. 2001-ல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். அந்தப் பொறுப்பையும் சர்ச்சையோ சத்தமோ இல்லாமல் நிர்வகித்தார். அந்த அமைதியான நம்பகத்தன்மைதான் அவரை ஜெயலலிதாவுக்கு அருகில் நெருக்கமாக்கியது. கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் ஐவர் குழுவில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணத்தில் அடுத்த பெரிய பாய்ச்சல் 2011-ல் வந்தது. அதிமுக மாபெரும் வெற்றியுடன் ஆட்சிக்கு வந்தபோது, ஜெயலலிதா அவரை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக நியமித்தார். அந்தப் பொறுப்பு அவரது அரசியல் பிம்பத்தின் மையமாக மாறியது. எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளும், அவரை ஜெயலலிதாவின் மிகவும் நம்பகமான அமைச்சர்களில் ஒருவராக்கின.
மாவட்ட அளவிலான உத்தி, தேர்தல் திட்டமிடல் போன்றவற்றில் அவர் கையாளும் பொறுப்புகள் படிப்படியாக அதிகரித்தன. 2016-ல் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பின்னர், பொதுப்பணித் துறை உட்பட முக்கிய இலாகாக்களுக்கான அமைச்சராக பொறுப்புகளை ஏற்றபோது, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நான்காவது இடம் அவருடையதாக மாறியது. மேலும் மேலிடத்துக்கான 'ஸ்வீட் பாக்ஸ்' சப்ளையில், ஒழுங்கான கணக்கு வழக்குகளுடன் மிக நேர்மையாக(?) நடந்துகொண்டார் எனவும், இதில் பிற அமைச்சர்களைக் காட்டிலும் எடப்பாடிக்கு மிக நல்ல பெயர் என்கிற பேச்சும் அப்போது கட்சி மட்டத்தில் நிலவியது. இதுவே அவரை ஜெயலலிதாவின் உள் வட்டத்திற்குள் நிரந்தரமாக இழுத்துச் சென்றது.

2016 டிசம்பர் 5 அன்று ஜெயலலிதா மறைந்தபோது, அதிமுக முழுக்க குழப்பமும் பிளவும் சூழ்ந்தன. கட்சியின் கட்டுப்பாட்டை ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏற்ற நிலையில், சில மாதங்களிலேயே முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலா குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, கூவத்தூரில் நடைபெற்ற பரபரப்பான அத்தியாயத்துக்குப் பின்னர்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பினால் சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் உருவான நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்களிடம் பேசி புதிய அதிமுக சட்டசபைத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தார் சசிகலா. சொல்லப்போனால், முதலில் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டவர் செங்கோட்டையன்தான். ஆனால், பின்னர் நடந்த பல அரசியல் ஆட்டங்களை தொடர்ந்து அந்த வாய்ப்பு எடப்பாடிக்குப் போனது. அந்தத் தேர்வு அதிமுக வட்டாரத்திலேயே ஏராளமானோருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
2017 பிப்ரவரி 14 அன்று அவர் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். பிப்ரவரி 18 அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் வென்றார்.
அதன்பின்னர், ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் சமாதானப்படுத்தி, எஞ்சிய நான்கு ஆண்டுக்கால ஆட்சியையும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு இடையேதான் கொண்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. இன்னொருபுறம் அதுவரை அதிமுக கட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் மறைமுக அதிகார மையமாக கோலோச்சிய சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களை முற்றிலும் ஓரங்கட்டினார். அடுத்ததாக 2021 தேர்தலுக்குப் பின்னர், தனக்கு அச்சுறுத்தலாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தையும் கட்சியிலிருந்து சாமர்த்தியமாக வெளியேற்றி, அதிமுகவை முற்றிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். இன்றுவரை இந்த இருதரப்பும், மீண்டும் அதிமுகவுக்குள் நுழைய டெல்லி பாஜக மூலம் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும், அசைந்து கொடுக்காமல், கட்சியின் தலைமை பீடத்தில் வலுவுடன் அமர்ந்திருக்கிறார் எடப்பாடி.
அந்த வகையில், 1989-தேர்தலில், வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்தில் தொடங்கிய ஒரு சிறிய வெற்றிதான் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்ற உறுப்பினராக்கியது மட்டுமல்ல, முதலமைச்சராகவும், அதிமுகவின் ஒரே ஆளுமையாகவும் உயர்த்தியது. சிலுவம்பாளையத்து அடிமட்ட அதிமுக தொண்டனுக்கு அன்று திறந்த கதவு இன்று வரை மூடப்படவே இல்லை!















