புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைந...
சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அரசு புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில், " 2024-ஆம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 8,801-ஐ விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம்.
கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது.

இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது.
மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

















