``வாக்காளர் அட்டை, ஆதார், பான் கார்டெல்லாம் குடியுரிமைக்கான சான்று அல்ல"- கல்கத்...
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்! - DVAC-ன் குற்றச்சாட்டு என்ன?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நேற்று (ஜூலை 29) லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை...
அரசிடமிருந்து வரப்பெற்ற இணைப்புகளைப் பரிசீலித்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஒரு ரகசிய விசாரணையை மேற்கொண்டது.
அந்த ரகசிய விசாரணையில், கிரிமினல் குற்றங்கள் நடந்திருப்பதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது.

யார் யார் மீது வழக்குப்பதிவு?
இதனையடுத்து, 28-07-2026 அன்று சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்தில், குற்ற எண் 5/2026-ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் (IPC), பாரதிய நியாய சன்ஹிதா (BNS, 2023) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த திரு. எஸ். விசாகன், ஐ.ஏ.எஸ்., டாஸ்மாக் அதிகாரிகள் திரு. ராம துரை முருகன், திரு. பன்னீர் செல்வம், அமைச்சரின் தனி உதவியாளர் திரு. பாஸ்கர்,
திரு. செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான திரு. ரதேஷ் மற்றும் திரு. கார்த்திக் ஆகிய தனிநபர்கள், மதுபானம்/சாராயம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பாட்டில்களில் அடைக்கும் நிறுவனங்கள், மற்றும் பிற அடையாளம் தெரியாத டாஸ்மாக் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது பதியப்பட்டுள்ளது.
சோதனைகள் எங்கே?
இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று (29.07.2026) வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகள், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், பாட்டிலிங் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 45 இடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

என்ன பறிமுதல்?
இந்தச் சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், டாஸ்மாக் தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றத்தை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு இடத்தில், சோதனையின் போது அந்த வீட்டின் உரிமையாளரைக் கண்டறிய முடியவில்லை. எனினும், அந்த வீட்டில் வழக்கிற்குத் தேவையான முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் இருக்கலாம் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில், வருவாய்த்துறை அதிகாரிகளின் முன்னிலையில் அந்த வீட்டிற்குச் சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது". எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தீர்ப்பு
இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். "முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜி மீது பொத்தம் பொதுவாக குற்றச்சாட்டுகள் உள்ளது" என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதாடியது.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ஜிகே. இளந்திரையன், "முறைகேடு நடந்துள்ளது என்பதற்கு, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. இதனால், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது" என்று தீர்ப்பளித்துள்ளார். முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.














