செய்திகள் :

சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்: கஷ்டங்கள் தீரும்; குருவருள் திருவருள் ஸித்திக்கும் தலம்!

post image

சென்னை சித்தர்கள் பூமி. இங்கே அநேக சித்தர்கள் வாழ்ந்து ஜீவன் முக்தி அடைந்துள்ளனர். அவர்களின் ஜீவ சமாதிகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.

அதேபோன்று மகான்கள் பலரும் வாழ்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கிய இடமும் சென்னையே. திருவான்மியூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பாம்பன் சுவாமிகள் கோயில். அதற்கு அருகிலேயே அமைந்திருக்கிறது ஒரு பெண் சித்தரின் ஜீவ சமாதி.

இங்கு வந்து வழிபட்டால் நோய்கள் தீர்கின்றன என்கிறார்கள். பணக் கஷ்டம், மனக் கஷ்டம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட உடனே தீரும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்ல... இதுவரை மனம் கூடவில்லை... தியானம் ஸித்தியாகவில்லை என்று வருந்துகிறவர்கள்கூட இந்தத் தலத்துக்கு வந்தால் அனைத்தும் கூடி ஆன்மிகத்தில் சாதிக்க முடியும் என்கிறார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளையும் உடைய தலம்தான் சக்கரை அம்மா கோயில்.

திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்
திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்

சென்னை திருவான்மியூரில், மருந்தீஸ்வரர் கோயிலிலிருந்து கலா க்ஷேத்ரா செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்கரை அம்மா ஆலயம். இந்த அம்மா ஸ்ரீ சக்கர பூஜை செய்து ஸித்திகள் பல கைகூடிவரப் பெற்றவர். எனவே மக்கள் இவரை சக்கர அம்மாள் என்றுதான் ஆரம்பத்தில் அழைத்தனர். அதுவே பின்னாளில் மருவி சக்கரை அம்மா என்றானது.

1854-ம் வருடம். அப்போதைய வடஆற்காடு மாவட்டம் போளூரில் உள்ள சிற்றூரான தேவிகாபுரத்தில் வசித்துவந்த சேஷ குருக்கள் என்ற சிவாசார்யரின் குடும்பத்தில் பிறந்தார் அனந்தாம்பாள். பிறந்த சில காலத்திலேயே அன்னையை இழக்க நேர்ந்தது. அவரின் சித்தி சுப்பம்மாவே அனந்தாம்பாளை வளர்த்து வந்தார்.

சுப்பம்மாவின் சகோதரர் சாம்பசிவ சிவாசார்யர் அப்போது சென்னை கோமளீஸ்வரன்பேட்டை கோமளீஸ்வரன் மடத்தில் அதிபதியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்ததால், அனந்தாம்பாளை அவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்தனர். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது 9. சாம்பசிவ சிவாசார்யருக்கு வயது 24.

அனந்தாம்பாளுக்குச் சிறு வயது என்றாலும் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையைச் செய்துவிட்டு, எந்நேரமும் கோமளீஸ்வரன் ஆலயத்தில் அடியாருடன் அடியாராக வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்.

விதிவசத்தால் சாம்பசிவ சிவாச்சார்யர் தன் 34-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது 20. உறவினர் தடுத்தும் கேளாமல், 11-ஆம் நாள், தலை மழித்து வெள்ளுடை தரித்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள திண்டில் அமர்ந்து மோனத் தவத்தில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள்.

திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்
திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்

பத்து வருடங்கள் நீண்டது அவரின் பெருந்தவம். நிறைவில் ஓர் பரவொளியைக் கண்டார் அனந்தாம்பாள். இந்த ஒளியே... அவரது சித்தத்தை ஈர்த்தது; பரவசம் தந்தது. ஜோதி தரிசனம் கண்ட பின்னே, சித்தம் ஜோதிஸ்வரூபன் மீதே முழுவதும் சென்றது. ஸித்தி நிலை கைவரப்பெற்றார்.

சக்கரை அம்மா அடைந்த ஸித்திகளில் குறிப்பிடத்தக்கது, ‘லஹிமா’ என்ற ஸித்தி. அது, உடலை மிக லேசாக்கி, பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது. அநேகர் அம்மா ஆகாய மார்க்கமாகப் பறந்துவருவதைக் கண்டிருக்கிறார்கள். இவரின் சிறப்புகள் குறித்து திரு.வி.க. தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அடிமுடிப் பரதேசி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா ஆகியோரையும் இவர் சந்தித்து ஆசிபெற்றதாகச் சொல்வர்.

1901 பிப்ரவரி 28-ம் தேதி, ஜீவன் முக்தி அடைந்தார் சக்கரை அம்மா. அவர் சுட்டிக் காட்டிய இடத்திலேயே அவருடைய சீடரான நஞ்சுண்டராவின் இடத்தில் சமாதி உள்ளது. இதன் மேல் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது.

1948 ஜனவரியில் காஞ்சி மகா பெரியவர் ஐந்து நாள்கள் இங்கே தங்கி தியானம் செய்தாராம்.

திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்
திருவான்மியூர் சக்கரை அம்மா கோயில்

இன்றும் அந்த ஜீவசமாதி மிகவும் நல்லதிர்வுகளோடு திகழ்கிறது. பக்தர்கள் வேண்டிவரும் வரங்கள் கிடைக்கின்றன. நல்ல குரு வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள் ஒருமுறை சக்கரை அம்மா ஆலயத்துக்குச் சென்று அம்மாவை வழிபட்டு வாருங்கள். உங்கள் பக்குவ நிலைக்கு ஏற்ப ஒரு குரு கிடைக்க அம்மா அருள் செய்வார்.

குருவருளும் திருவருளும் பெற விரும்பும் அன்பர்கள், சக்கரை அம்மா ஆலயத்துக்குக் குடும்பத்துடன் சென்று தரிசித்து வாருங்கள்; அங்கே அம்மாவின் அருள்சாந்நித்தியம் நிறைந்திருப்பதை உணர்வீர்கள். அவரின் ஆசியால் மன நிம்மதியையும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வையும் வரமாகப் பெற்று வாருங்கள்.

புதுக்கோட்டை, அறந்தாங்கி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில்: மாவிளக்கு ஏற்றினால் மங்கலம் பெருகும்!

அன்னை பராசக்தி கோயில்கொள்ளாத ஊர் என்று ஒன்று தமிழகத்தில் இல்லை என்றே சொல்லலாம். மாரியம்மனாக காளியம்மனாக, பொன்னியம்மனாக, கங்கையம்மனாக, பேச்சியம்மனாக இன்னும் பல்வேறு நாமங்களுடன் அவள் கோயில் கொண்டு அருளு... மேலும் பார்க்க

தேனி மாவட்டம், தாமரைக்குளம் அழகுமலையான் திருக்கோயில் : பித்ரு தோஷம் தீரும்... பொருளாதாரம் சிறக்கும்!

பெரியகுளத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது தாமரைக்குளம் என்னும் ஊர். இங்குள்ள அழகுமலையான் திருக்கோயில் மிகவும் சிறப்பானது. இந்த ஆலயத்தின் தலவரலாறு சொல்லும் தகவல்கள் மி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டம், கீழக்கோட்டை ஆதினமிளகி ஐயனார் கோயில்: கவலைகள் தீரும்... உணவுப் பஞ்சம் ஏற்படாது

தமிழகமெங்கும் ஐயனார் கோயில்கள் இல்லாத ஊர்களே இல்லை எனலாம். ஐயன், ஐயனார், சாஸ்தா என்றெல்லாம் கொண்டாடப்படும் இவர் பூரணா புஷ்கலா என்னும் தன் தேவியருடன் காட்சி தரும் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தர்மத... மேலும் பார்க்க

தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் திருக்கோயில்: நாக தோஷம் தீர்க்கும் சந்நிதி!

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தீர்த்தத்தொட்டி எனும் பேருந்து நிறுத்தம். இதன் அருகிலேயே கொட்டக்குடி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ‘வி... மேலும் பார்க்க

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா | Photo Album

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் 520-வது ஆனிப் பெருந்தேர்த்திருவிழா.!திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! மேலும் பார்க்க

திருநெல்வேலி: தேரோட்டத்திற்குத் தயாரான நெல்லையப்பர் தேர்; அமைச்சர் நேரில் ஆய்வு | Photo Album

திருநெல்வேலி: தேரோட்டத்திற்கு தயாரான நெல்லையப்பர் தேர்! நேரில் ஆய்வு செய்த அமைச்சர்.!திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சம்பத்கிரி ஸ்ரீநரசிம்மமூர்த்தி: நோய்கள் தீர்க்கும் பானகம்! மேலும் பார்க்க