செய்திகள் :

காட்டு யானைக்குக் கண்ணீர் அஞ்சலி: வயநாட்டை நெகிழ வைத்த 'லட்சுமி'யின் மரணம்

post image

கேரளாவின் வனப்பகுதிகளில் மனித-விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில், வயநாடு காட்டு எல்லையில் உள்ள ஒரு சிறிய கிராமம் மனிதநேயத்திற்கும், விலங்கினப் பாசத்திற்கும் ஒரு உன்னதமான சான்றாக மாறி நெகிழ வைத்துள்ளது.

மூன்று பக்கமும் அடர்ந்த காடுகளாலும், ஒரு பக்கம் கபினி நதியாலும் சூழப்பட்ட செகடி, பழங்குடியின மக்கள் வாழும் ஒரு விவசாயக் கிராமம் புல்பள்ளி அருகே உள்ள செகடி. பாரம்பர்ய நெல் ரகங்களை விளைவிப்பதில் இப்பகுதி பிரசித்தி பெற்றது.

பொதுவாக, வனப்பகுதிகள் அருகில் இருக்கும் விவசாய நிலம் என்றால் காட்டு விலங்குகள், குறிப்பாக யானைகள் சேதப்படுத்தும். மனிதர்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

ஆனால், அந்தப் பகுதியில் வசித்த ஒரு காட்டு யானையை செகடி கிராம மக்கள், தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி வளர்த்திருக்கின்றனர். லட்சுமி எனக் கிராம மக்களால் அழைக்கப்படும் அந்தப் பெண் யானை, கடந்த ஒரு மாதமாக கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே மாறிப்போனது.

காட்டு எல்லையோரம் மெதுவாக உலா வரும் லட்சுமி, பழங்குடியின மக்களின் குடியிருப்புகள் வரை வருவாள். ஆனால், ஒருபோதும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களையோ, உழைப்பையோ சேதப்படுத்தியதே இல்லை என்று கிராம மக்கள் நெகிழ்ச்சியோடு கூறுகிறார்கள்.

சந்திரோத் பழங்குடியின குடியிருப்புக்கு அருகில் உள்ள பலா மரங்கள் நிறைந்த பகுதியே லட்சுமியின் விருப்பமான இடமாக இருந்தது. அவளுக்கு மிகவும் பிடித்த பலாப்பழங்கள் அங்கு தாராளமாகக் கிடைத்ததால், அங்கேயே அதிக நேரத்தைச் செலவிட்டாள்.

தினமும் காலையில் காட்டை விட்டு வெளியேறும் லட்சுமி, மாலை வரை கிராம எல்லையிலேயே நின்றுவிட்டு, அந்தி சாயும் வேளையில் அமைதியாகக் காட்டுக்குள் சென்றுவிடுவாள்.

காட்டின் உள்ளே இருக்கும்போது கூட, கிராம மக்களின் குரல் கேட்டால், தனக்குத் தெரிந்தவர்கள் கூப்பிடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு உடனே எல்லையோரத்திற்கு ஓடி வருவாள்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

நாளடைவில், லட்சுமி அந்தப் பகுதியின் செல்லப் பிள்ளையாகவும், ஒரு பிரபலமாகவும் மாறினாள். அவளது சாந்தமான குணத்தைக் கேள்விப்பட்டு புகைப்படக் கலைஞர்களும், Vloggers செகடி கிராமத்திற்குப் படையெடுத்தனர்.

மற்ற காட்டு யானைகளைப் போலன்றி, தன்னை மனிதர்கள் அருகில் இருந்து பார்ப்பதையோ, புகைப்படம் எடுப்பதையோ லட்சுமி கோபமில்லாமல் அனுமதித்தாள். கிராமத்துப் பெண்களும் குழந்தைகளும் தங்களின் பயத்தைப் போக்கிக் கொண்டு, யானை அகழிக்குக் அப்பால் நின்று பலாப்பழம், மாம்பழம் போன்றவற்றை அவளுக்குக் கொடுத்தனர்.

'லட்சுமி' என்று அன்போடு அழைத்தால், எல்லோரையும் அடையாளம் தெரிந்து கொண்டு, மெதுவாக அகழியை நோக்கி நடந்து வந்து உணவை வாங்கி உண்பாள்.

வியாழக்கிழமை காலை பாதிரி காட்டுப் பகுதியில் லட்சுமி உயிரற்றுக் கிடந்தாள். அதற்கு முந்தைய நாள் அவளைப் பார்த்தபோதே மிகவும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருந்ததாகக் கிராம மக்கள் கண்ணீருடன் கூறினர். வயநாடு வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் நடத்திய பிரேதப் பரிசோதனையில், லட்சுமி முதுமை மற்றும் அது சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் இயற்கை மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது.

அவளுக்கு 70 வயதுக்கு மேல் இருக்கும் என்றும், முதுமை காரணமாகவே அவளால் நீண்ட தூரம் உணவு தேடிப் பயணிக்க முடியாமல், தண்ணீர் மற்றும் பழங்கள் தாராளமாகக் கிடைக்கும் செகடி கிராம எல்லையிலேயே தங்கியிருந்திருக்கலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செகடி காட்டு யானை லட்சுமி
செகடி காட்டு யானை லட்சுமி

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, வனத்துறை விதிமுறைகளின்படி லட்சுமியின் உடல் காட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது. காலையிலிருந்தே தங்களின் அன்பிற்குரிய யானைத் தோழியைப் பார்க்கப் பழங்குடியின மக்களும், கிராமத்தினரும் எல்லையோரக் காட்டில் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தினர்.

லட்சுமியின் இந்த மறைவு, புல்பள்ளி-சுல்தான் பத்தேரி நெடுஞ்சாலையில் பயணிகளின் செல்லப் பிள்ளையாக வாழ்ந்து, கடந்த 2019-ல் மற்றொரு காட்டு யானையுடனான சண்டையில் உயிரிழந்த 'மணியன்' என்ற சாதுவான யானையின் நினைவுகளை மீண்டும் அப்பகுதி மக்களிடையே கிளப்பியுள்ளது.

மனிதர்களும் விலங்குகளும் அன்பால் மட்டுமே பிணைக்கப்பட முடியும் என்பதற்கு லட்சுமியின் வாழ்வும், அவளுக்காகச் சிந்தப்பட்ட செகடி கிராமத்து மக்களின் கண்ணீருமே சாட்சி!

நெரிசலில் தவித்த உயிர்... ஓடும் பேருந்திலிருந்து குதித்து காப்பாற்றிய தேவதைகளின் நெகிழ்ச்சி சம்பவம்!

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது நமக்கு எரிச்சலையும் தாமதத்தையுமே தந்து பழகியிருக்கிறது. ஆனால், அதே நெரிசலில் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தபோது, இரண்டு செவிலியர்கள் காட்டிய அசாத்திய துண... மேலும் பார்க்க

மதுரை: காதல் கோட்டை க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்; ரீல்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டான ரயில் நிலையம்!

மதுரை ரயில்வே நிலையத்தில் நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில... மேலும் பார்க்க

MTC பேருந்தில் பயணிக்கு வந்த வலிப்பு; துரிதமாகச் செயல்பட்ட நடத்துநர்; சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!

சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் - திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந... மேலும் பார்க்க

Madhavan: `10 வாட்ச் மட்டுமே தயாரிப்பு; விலை.? - நடிகர் மாதவன் கட்டியிருந்த அரிதான வாட்ச்!

இந்திய திரையுலகின் முன்னணி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவரான மாதவனுக்கு, நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. கடந்த 23-ம் தேதி நடந்த இந்த நிகழ்வில... மேலும் பார்க்க

Larry Cat: 7-வது பிரதமருக்காகக் காத்திருக்கும் இங்கிலாந்துப் பூனை; சமூக ஊடகங்களில் வைரலாகும் லேர்ரி!

பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமர... மேலும் பார்க்க

`சிவனைப் தரிசிக்க வேண்டும்" - ஆண்டு கணக்கில் நின்றுகொண்டே இருக்கும் சாமியார் | Viral Video

இந்தியாவைச் சேர்ந்த துலால் கிரி ஜி மகாராஜ் என்ற இந்து சாமியார் ஒருவர், தனது ஆன்மீக நேர்த்திக்கடனுக்காகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நின்றுகொண்டே இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெள... மேலும் பார்க்க