நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை ...
சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்... கறார் காட்டும் திமுக!
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரும் பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் ஒருசில தொகுதிகளை கைபற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் வி.சி.க, கம்யூனிஸ்ட், ம.நீ.ம ஆகிய கட்சிகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை எதிர்பார்ப்பை காத்திருக்கும் சூழலில் தி.மு.க கூட்டணியில் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிவருகிறது காங்கிரஸ் கட்சி. தி.மு.க - காங்கிரஸ் பஞ்சாயத்து ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, தங்களுக்கு தேவையான தொகுதி பட்டியலை தயார் செய்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க-வின் இதர கூட்டணிக் கட்சிகள். அதன்படி வேளச்சேரி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளுக்கு டிமாண்ட் ஏற்பட்டிருக்கின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 33 ஆயிரம் வாக்குகளையும் வேளச்சேரி தொகுதியில் கிட்டதட்ட 25 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது. ம.நீ.ம-வுக்கு கிடைவுள்ள 2 - 3 தொகுதிகளில் இந்த இரண்டில் ஒரு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதிகாட்டுகிறது.
அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம்.
அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சென்னையில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. அவர்களது விருப்ப பட்டியலில் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகள் இருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். வேளச்சேரி வி.சி.க-வுக்கு கிடைக்கவில்லை என்றால் ஆர்.கே நகர் தொகுதியை கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள் சிறுத்தைகள்.

பொதுவாகவே சென்னை சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கூட்டணிக் கட்சிகளை விட்டுதருவதில்லை. அதிலும் விஜய்யின் த.வெ.க நகர்பகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தும் என சர்வே முடிவுகள் சொல்வதால் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க-வே களமிறங்கவே வாய்ப்பு. மேலும் தலைநகர் வேட்பாளர்கள் பட்டியலில் கணிசமாக ஜூனியர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டமும் ஆலோசனையில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.
கூட்டணிக் கட்சிகளை தி.மு.க எப்படி சமாளிக்கப்போகிறதோ? பார்ப்போம்!




















