சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூர...
சேலம்: 5 லட்சம் விரல் ரேகைகளில் டாக்டர் அம்பேத்கர் உருவம்; அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்த ஜனநாயகத்தின் உயிர் நாடி வாக்குரிமை. அந்த வாக்குரிமையின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறையிடையே ஆழமாக விதைக்கும் நோக்கில், சேலம் அரசு பொறியியல் கல்லூரி (Government College of Engineering, Salem) மாணவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
கல்லூரியில் செயல்பட்டு வரும் ART OF SPHERE குழுவின் மையக்கருத்து "VIBGIOR 26" மாணவர் அணியின் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு இந்த மாபெரும் முயற்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் மையமாக, 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில், 5 லட்சத்துக்கும் அதிகமான விரல் ரேகைகளை பயன்படுத்தி, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிரமாண்ட கிராண்ட் போர்ட்ரேட்டை உருவாக்கினர்.

இந்த முயற்சி ஒரு கலை நிகழ்வாக மட்டுமல்லாமல், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடான “மக்களே அதிகாரம்” என்ற கருத்தை உயிர்ப்பிக்கும் சமூக விழிப்புணர்வு இயக்கமாக அமைந்தது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உணர்ந்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.

இந்த மாபெரும் போர்ட்ரேட்(portrait )உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் நீல நிற உடை அணிந்து கலந்து கொண்டனர். சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் டாக்டர் அம்பேத்கரின் நீல நிற அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உடைத் தேர்வு செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே சிந்தனையுடன், ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாகவும் ஒத்துழைப்புடனும் செயல்பட்டதே இந்த முயற்சியின் மிகப் பெரிய பலமாக அமைந்தது.
இந்த உலக சாதனை முயற்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் கீதா முழுமையான ஆதரவு, ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார். கல்வி வளாகத்தில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால், இந்த முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பொறுப்பை ரமணன் மற்றும் சங்கீதா ஆகிய செயலாளர்கள் ஏற்றுக் கொண்டு, 500-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்ட முறையில் செயல்படுத்தி, 5 மணி நேரத்துக்கும் மேலான கடின உழைப்பின் மூலம் இந்த மாபெரும் போர்ட்ரேட்டை நிறைவு செய்தனர்.

ஒற்றுமை, கலை, அரசியல் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த உலக சாதனை முயற்சி, இளம் தலைமுறையின் ஜனநாயக நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த அடையாளமாக அமைந்துள்ளது. வாக்குரிமையின் அவசியத்தை கலை வடிவில் மக்களிடம் கொண்டு சென்ற இந்த முயற்சி, கல்வி வளாகத்தைத் தாண்டி பொதுமக்களிடையிலும் பெரும் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.












