"ஜில்லா-வுல என்னை நம்பி மதுரையையே செட் போட்டு கொடுத்தார்!" - நினைவுகள் பகிரும் 'ஜில்லா' பட இயக்குநர்
கார் விபத்தில் சிக்கி, 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருடைய சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு அவர் சென்றிருந்த நிலையில், அங்கு நேற்று மதியம் நேரிட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
பல்வேறு முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.பி. சௌத்ரிக்கு, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு.

தமிழ் திரைத்துறையினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் 'ஜில்லா' திரைப்படம்தான் சூப்பர் குட் பிலிம்ஸின் 85வது திரைப்படம்.
இப்படத்தின் இயக்குநர் ஆர்.டி.நேசனிடம் தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரி உடனான நினைவுகள் பற்றி கேட்டறிந்தோம்.
ஆர்.டி. நேசன், "ஆர்.பி. சௌத்ரி சார் ஒரு லெஜெண்டரி புரொடியூசர். இந்தியாவிலேயே கிட்டத்தட்ட ஒரு 100 படங்களுக்கு மேல தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவர்.
சொல்லப்போனால், ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தனிநபராக இத்தனை படங்களைத் தயாரித்த ஒரே தயாரிப்பாளர், இந்தியாவிலேயே சௌத்ரி சார்தான். அவருடைய இழப்பு, தமிழ்த் திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.
அவருடைய தயாரிப்புல நான் 'ஜில்லா' திரைப்படத்தை இயக்கியிருக்கேன். வெறுமெனே மேலோட்டமான தயாரிப்புனு இல்லாமல், ஆடியன்ஸோட மனநிலையையும் தெரிந்து வைத்திருக்கும் தயாரிப்பாளர் அவர்.

இல்லையென்றால் ஒரு 100 ஃபிலிம்ஸ் பண்ணியிருக்க முடியாது இல்லையா? இவருடைய இழப்பு, தமிழ்ச் சினிமாவுல மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கும். இந்த மாதிரி இன்னொரு 100 படங்களைத் தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் மறுபடியும் தமிழ்ச் சினிமாவுல வருவாங்களா என்பதும் சந்தேகம்தான். சௌத்ரி சாருடைய இடத்தை மறுபடியும் நிரப்புறது ரொம்பக் கஷ்டம்!
'ஜில்லா' படத்தின் கதையை நான் முதல்ல விஜய் சாருக்குத்தான் சொல்லியிருந்தேன். அவர்தான் என்னை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பி வைச்சார். விஜய் சார் லைஃப்ல சௌத்ரி சார் நிறையச் செய்திருக்கார்.
அதற்கு நன்றிக்கடன் செலுத்துறதுக்காகச் செய்த திரைப்படம்தான் 'ஜில்லா'. எனக்கு சூப்பர் குட் நிறுவனத்துக்குப் போவதற்கு முன்னாடி சில தயக்கங்கள் இருந்துச்சு.
இது கமர்ஷியல் கதை, இதுக்கு சௌத்ரி சார் ஓகே சொல்லுவாராங்கிற கேள்விகள் எனக்குள்ள ஓடுச்சு. ஃபேமிலி ஓரியண்டட் கதை, அதுல கொஞ்சம் காமெடி இருக்கணும்னு அவர் எதிர்பார்ப்பார்.
நான் 'ஜில்லா' கதையைச் சௌத்ரி சாருக்குக் கிட்டத்தட்ட ஒரு ரெண்டு மணி நேரம் 15 மினிட்ஸ் சொன்னேன். சொல்லப்போனால், இந்தக் கதையைக் கேட்டு ரொம்பவே அவர் எக்ஸைட் ஆனார். 'கமர்ஷியல் படத்துல சென்டிமென்ட் அது இதுன்னு சேர்த்து கதை பண்ணியிருக்கீங்க'னு பாராட்டவும் செய்தார்.

முக்கியமா, இந்த நரேஷனுக்குப் பிறகு படத்தினுடைய ஃபர்ஸ்ட் காபிதான் அவர் பார்க்க வந்தார். என்னை முழுமையாக நம்பி, என்னுடைய சுதந்திரத்துக்கு அனைத்தையும் கொடுத்தார்.
'ஜில்லா'வுக்கு முன்னாடி நான் ஒரு படம்தான் செய்திருந்தேன். 'வேலாயுதம்' படத்தின் திரைக்கதையில கொஞ்சம் வேலைகள் பார்த்திருக்கேன்.
ஆனால், இப்படியான என்னை மலை போல் அவர் நம்பினார். 'டைரக்டர் என்ன சொல்றாரோ அதை அப்படியே பண்ணிடுங்க'ன்னு தயாரிப்புலையும் சௌத்ரி சார் சொல்லிட்டாரு" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "விக்ரமன் சார்ல இருந்து கே.எஸ். ரவிக்குமார் சார்னு நிறைய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் சௌத்ரி சார்தான். ஒரு படம் பண்ணின என் மேல் அவர் இத்தனை பெரிய நம்பிக்கை வைச்சது ரொம்பப் பெரிய விஷயம்.
சௌத்ரி சார் தயாரிச்சதுல ஒரு மேஸிவ் கமர்ஷியல் திரைப்படம்னா அது 'ஜில்லா' படமாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன். 'ஜில்லா' படம் நடக்கும்போதே விஜய் சார் பெரிய மாஸ் ஹீரோ ஆகிட்டார்.
'ஜில்லா' கதையை நான் மதுரைப் பின்னணியில அமைத்திருந்தேன். ஆனா, அவரை வைச்சு மதுரையில ஷூட் பண்றதுக்கு வாய்ப்பே கிடையாது.

இங்க சென்னையில ஒரு செட் போட்டுட்டு, விஜய் சார் இல்லாமல் நான் மதுரையில ஷாட்ஸ் எல்லாம் எடுத்துறேன்னு சொல்லிட்டு, ஒரு செட்லேயே நாங்க எல்லாமே பிளான் பண்ணோம்.
ஒரு மதுரை செட்டை நாங்க சென்னையில போட்டோம். அப்போவே பெரும் பொருட்செலவுல 'ஜில்லா' படத்துல வர்ற வீடு, அதுக்கு பின்னாடியே போலீஸ் ஸ்டேஷன், மதுரை சிட்டினு பிரமாண்டமாக ஒரே இடத்துல முழு செட்டும் போட்டோம்.
இப்படித் தமிழ்ச் சினிமாவுக்கும் ஏகப்பட்ட விஷயங்களைச் சௌத்ரி சார் செய்திருக்கார். அவருடைய இழப்பு மிகப்பெரியது!" என மனபாரத்துடன் பேசினார்.

















