ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் - ஒரு பா...
தஞ்சை திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில்: சங்கடங்கள் தீர்க்கும் சண்டிகேஸ்வரர்; வினைகள் நீங்கும்!
சிவாலயம் சென்றால் சிவ தரிசனத்துக்குப் பின் கட்டாயம் சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். சண்டிகேஸ்வரர் சந்நிதியில் மெதுவாக கைகளைத் தட்டி ஓம் நமசிவாய என்று சொல்லி, 'சிவ தரிசனத்தின் பலனை எனக்கு அருள்வாய்' என்று வேண்டிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் சிவனை தரிசித்த பலனே நமக்குக் கிடைக்கும். இப்படி சிவாலயத்தின் பொறுப்பாளராக இருந்து அருளும் சண்டிகேஸ்வரர் இந்தப் பூவுலகில் அவதரித்தபோது ஈசனின் தரிசனம் பெற்ற தலம் ஒன்று உண்டு. இங்குள்ள சிவனை தரிசனம் செய்தால் 1008 சிவாலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். வாருங்கள் அந்த அற்புதத்தலத்தை தரிசிப்போம்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருஆய்ப்பாடி. ஜெயங்கொண்டம், அணைக்கரை ஆகிய ஊர்களில் இருந்தும் இந்த ஊருக்குப் பேருந்துகள் உள்ளன. திருஆய்ப்பாடியில் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளது ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் கோயில்.
திருநாவுக்கரசர், இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற இந்தத் தலத்தில் தற்போது இருக்கும் ஆலயமே சுமார் 1,000 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறார்கள்.
விசாரசர்மன் என்பான் சிறுவயதுமுதலே சிவபக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாக இருந்தான். ஒருமுறை அவன் தந்தை சிவ அபிஷேகத்துக்கான பாலைக் காலால் எட்டி உதைத்தார். அப்போது விசாரசர்மன் அருகில் இருந்த ஒரு கோலை எடுத்து அவர் காலில் அடிக்க அதுவே மழுவாக மாறி அவர் கால்களை வெட்டியது. விசாரசர்மன் மீண்டும் சிவதியானத்தில் ஆழ்ந்துவிட்டான். இதைக் கண்ட ஈசன் மனம் கனிந்தார்.
சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, 'இனி நானே உனக்குத் தந்தையாவேன்' என்று கூறி, தன் கழுத்தில் இருந்த கொன்றை மாலையை விசாரசர்மனுக்குச் சூட்டி, சண்டிகேஸ்வரர் என்ற பட்டத்தையும் தந்தார். விசாரசர்மன் செய்த பால் அபிஷேகத்தை ஏற்றதால், 'பால் உகந்தநாதர்' என்ற திருநாமம் சுவாமிக்கும் ஆ (பசு) மேய்த்த தலம் இது என்பதால் தலத்துக்கு, 'ஆப்பாடி' என்றும் பெயர் உண்டானது.

சண்டிகேஸ்வரர் முக்தி பெற்ற திருத்தலம் இதுதான் என்பதால் இங்கே, சிவனாருக்கு அருகிலேயே காட்சி தருகிறார் ஸ்ரீசண்டிகேஸ்வரர்.
இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரைத் தரிசித்தால், 1008 தலங்களுக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். இந்தத் தலத்தின் க்ஷீரகுண்ட தீர்த்தமும் விசேஷம். இதில் தீர்த்த நீராடி சிவ தரிசனம் செய்தால், சகல பாவங்களும் விலகும்; பித்ருக்களின் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
திருஆப்பாடி தற்போது திருவாய்ப்பாடி என்று வழங்கப்படுகிறது. இங்கே இறைவன் பாலுகந்தநாதர் என்றால் அம்மனோ பெரியநாயகி, பிரகன்நாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சம் அத்தி மரம். தீர்த்தம் மண்ணியாறு. இது தஞ்சாவூர் மாவட்டதிலே அமைந்திருக்கின்றது. ஆலயத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரும் அற்புதமான மூர்த்தங்களாக அழகு தரிசனம் தருகின்றனர்.
சண்டிகேஸ்வரருக்கு ரிஷபாரூடராக, உமையவளுடன் தரிசனம் தந்து ஆட்கொண்டார் சிவபெருமான். இது நடந்தது, மகாசிவராத்திரி நன்னாளில் என்பார்கள். எனவே, மாசி மாதத்தில் வருகிற மகாசிவராத்திரி நன்னாள் மற்றும் அமாவாசையில் இங்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
மகா சிவராத்திரி நாளில் கும்பகோணம், ஆடுதுறை, பாபநாசம், அணைக்கரை, அரியலூர், ஜெயங் கொண்டம் எனச் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபாலுகந்தீஸ்வரரைத் தரிசிக்க இங்கு வருகின்றனர்.
இந்த ஆலயத்தில் சோழர்கள் காலக் கல்வெட்டுகள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழர்கள், பல்லவர்ஜள், விஜயநகர மன்னர்கள் என வரலாறுமுழுக்க மன்னர்கள் இந்த ஆலயத்தில் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

மகா சிவராத்திரி நாளில் இங்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபெரியநாயகிக்கு அரளிமாலையும் ஸ்ரீபாலுகந்தீஸ்வரருக்கு வில்வமாலையும் சார்த்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால்... பிறவிப் பயனை அடையலாம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியுடன் வாழலாம்; முன் ஜன்மப் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
ஸ்ரீசண்டிகேஸ்வரருக்கு முக்தி அளித்து அவரை ஆட்கொண்ட ஸ்ரீபாலுகந்தீஸ்வரர் தலத்துக்கு வாருங்கள்; சகல தோஷங்களும் விலகி சந்தோஷம் பெருகுவதை உணர்வீர்கள்.
















