செய்திகள் :

வேலூர் ஈசன்மலை: ஈ வடிவில் சித்தர்; ஜம்புகேஸ்வரர்; வாரயிறுதி ஆன்மிகப் பயணம் செய்ய ஏற்ற தலம்!

post image

மலைத்தலங்கள் கேளிக்கைகளுக்கானவை மட்டுமல்ல. நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிப்பவை. நமக்கான ஆன்மத் தேடலைத் தொடங்கிவைப்பவை. அதனால்தான் நம் முன்னோர்கள் மலைகளில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தவக்குடில்கள் அமைத்தனர். அப்படிப்பட்ட ஓர் தலம்தான் ஈசன் மலை.

வேலூர் மாவட்டம் - காட்பாடி வட்டத்தில், தெங்கால் கிராமத்தில் அமைந்துள்ளது ஈசன் மலை. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக்கும் மூலிகைகள் நிறைந்த இந்த மலையில் சந்திரகாந்தப் பாறைகள் காணப்படுகின்றன. வாருங்கள் அந்த அற்புதமான மலைத்தலத்தை தரிசிப்போம்.

சென்னை - பெங்களூரு மார்க்கத்தில் ஆற்காடு பைபாஸ் சாலையிலிருந்து, வலப்புறமாகப் பிரிந்து, லாலாபேட்டை வழியாக ராணிப்பேட்டையிலிருந்து சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்தால் ஈசன் மலையை அடையலாம்.

வழியில் பொன்னை ஆறு குறுக்கிடுகிறது. வழி நெடுகிலும் சாலையின் இருபுறமும் பசுமை போர்த்தித் திகழ்ந்தது, மலைப் பகுதி. அடர்த்தியான மரங்கள், சுழன்றடிக்கும் குளிர் காற்று, சலங்கையின் பரல்களாய் சத்தமிடும் நீரோடைகள், பெயர் தெரியாத பல வண்ண பறவைகளின் கூவல்கள் என அந்தச் சூழலை நம்மை மயக்கும்.

மலையின்மீது ஏற, ஏற குளிர்ச்சியும் நம்மைச் சூழ்ந்துகொள்ளும். மலையில் அடிவாரத்திலிருந்து சற்று மேலே அமைந்திருக்கின்றன இறைச் சந்நிதானங்கள்.

பிரசித்திபெற்ற முருகன் தலமான வள்ளி மலை அருகில் அதன் ஈசான்ய மூலையில் அமைந்திருப்பதால், இந்த மலைக்கு ‘ஈசானிய மலை’ என்றும், சித்தர்கள் வழிபடும் ஜம்புகேஸ்வரர், சித்தேஸ்வரர் என்ற லிங்க மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலிக்கும் மலை ஆதலால், 'ஈசன் மலை' என்றும் பெயர் வந்தது என்கிறார்கள்.

`ஈசன் மலை' என்று பெயர்பெற்றிருந்தாலும் தற்போது முருகன் ஆலயமே புகழ் பெற்று விளங்குகிறது. சிறியதொரு ஆலயத்தில் குறமகள் வள்ளியோடும், வானவர்கோன் திருமகளாம் தெய்வானையுடனும் முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். முருகனின் ஆலயத்துக்கு சற்றே பின்புறம் சித்தர் பெருமகன் ஸ்ரீகாளப்ப ஸ்வாமியின் சமாதி உள்ளது.

இந்த மகான் செய்த அற்புத லீலைகள் ஏராளம். இன்றும் இங்கு வந்து அவரை நினைத்து தியானிப்பவர்களுக்கு சித்தர் ஒளி ரூபமாகக் காட்சி அருளி ஆசி வழங்குகிறார் என்கிறார்கள்.

ஈசன் மலையிலோடும் காட்டாற்றின் தடம்
அபூர்வ மூலிகைகள்
அபூர்வ மூலிகைகள்
அபூர்வ மூலிகைகள்
அபூர்வ மூலிகைகள்
ஜம்புலிங்கேஸ்வரர்
ஈசன்மலை
முருகப்பெருமான்
ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி
ஸ்ரீகாளப்ப சித்தர் ஜீவசமாதி
ஈசன்மலை
முருகப்பெருமான்

மலை ஏறும்போது வரும் சுனைக்கு மருந்து சுனை என்று பெயர். வறண்ட கோடையிலும் நீர் இருக்கும் இந்த சுனை நீர் அப்படி ஒரு சுவையுடன் திகழ்கிறது. பயணம் செய்யும்போது எதிர்ப்படும் செடிகொடிகளின் தன்மை என்ன என்பதை அறியாமல் அதைக் கிள்ளவோ அல்லது சுவைக்கவோ வேண்டாம். சில மூலிகைகள் நம் நினைவை மயக்குவதாகவும் தலை சுற்றலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்பதால் பாதுகாப்பாகப் பயணிப்பது அவசியம்.

அதன் அருகிலிருக்கும் வெண் நாவல் மரத்தினடியில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் காட்சி தருகிறார். ஜம்பு என்றால் நாவல் மரம்தான். இங்கு ஆள் அரவமற்ற இடத்தில், மிக எளிமையாய் எழுந்தருளியிருக்கிறார்.

இங்கு அமைதியாக அமர்ந்திருந்தாலோ அல்லது தியானம் செய்தாலோ அந்த இடத்தின் தெய்வ அதிர்வுகளை நம்மால் உணர முடியும்.

இங்கு வந்து தரிசனம் செய்த பக்தர் ஒருவர் தன் அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொண்டார். "தியானத்தில் அமர்ந்திருந்தோம். நம் தலையைச் சுற்றிச் சுற்றி ஒரு ஈ ரீங்காரமிட்டது. அமைதியான அந்த மலையில் அந்த ஈயின் சத்தம் நம்முள் ஏதோ செய்தது. விர்ரென்று உடலெங்கும் ஒரு அதிர்வு பரவியது. உருவில் வழக்கத்தைவிட பெரிதான அந்த ஈ, ஏதோ ஒரு தொடர்பின் காரணமாக நம்மைச் சுற்றி ரீங்காரமிட்டது.

பெரும்பாலும் இதுபோன்ற இடங்களில் குளிர் அதிகமுள்ள சூழலில் ஈக்கள் இருக்காது. ஆனால் இங்கு இந்த ஒற்றை `ஈ' வருகை தந்து அடியார்களைச் சிலிர்ப்பில் ஆழ்த்துகிறது. இங்கு சூட்சுமமாய் வசிக்கும் சித்தர் பெருமான் ஒருவரே ஈ வடிவில் வருவதாக நம்பிக்கை.

எல்லோருக்கும் இந்த ஈயின் தரிசனம் கிடைப்பதில்லை. தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் தியானம் புரியும் தருணம் மட்டுமே வந்து வலம் புரிந்து ஆசீர்வதிக்கிறார் சித்தர் என்பது இங்குள்ளவர்களின் நம்பிக்கை'' என்றார்.

இந்த இடம் புகழ்பெற்ற பாலைச் சித்தர், மௌனகுரு சாமிகள், வள்ளிமலை சாமிகள், திருப்புகழ்ச் சித்தர் போன்றோர் தவமிருந்த இடம். எனவே நிச்சயம் சாந்நித்தியம் நிறைந்துதான் காணப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மலைமீது, ஆங்காங்கே பாறைகளுக்கு இடையே அபூர்வமான குளிர்ச்சி மிக்க சந்திர காந்தக் கற்கள் காணப்படுகின்றன. அதேபோல், ஏதோ பாறைக் குழம்பு இறுகியதுபோன்ற இரும்பைப் போலான பாறைத்தொடர் ஒன்றும் மலையைச் சுற்றிக் காணப்படுகிறது. இது, இந்த மலையின் தொன்மையைக் கூறுகிறது.

தியானம் செய்த இடத்திலிருந்து மலை உச்சியைக் காணலாம். அங்கேயும் ஒரு சிவ லிங்கம் இருப்பதாகவும், அதுவே சித்தர்கள் வழிபட்ட சித்தேஸ்வரர் மூர்த்தம் என்றும் சொல்கிறார்கள். பாதுகாப்பின் பொருட்டு, தற்போது அங்கு செல்ல அனுமதி இல்லை. மானசீகமாக அவரை வழிபட்டு நம் பயணத்தை முடிக்கலாம்.

ஈசன் மலைக்கு வந்தால் `இயற்கையும் இறைவனும் வேறு வேறு அல்ல; எங்கும் எதிலும் இறைவனே நிறைந்திருக்கிறான்' எனும் பேருண்மை எளிதில் புரியும். சிறுமலைதான் என்றாலும் அதில் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.

நீங்களும் ஒருமுறை ஈசன் மலைக்குச் சென்று வாருங்கள். சிந்தை மகிழ அங்கு குடிகொண் டிருக்கும் சிவனாரையும், அழகன் முருகனையும் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; இறையருளோடு சித்தர்களை மானசீகமாக வணங்கி குருவருளையும் பெற்று வாருங்கள்.

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன்: தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் திருக்கோயில்!

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் அமைந்திருக்கிறது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். கங்கைக்கு நிகராகச் சொல்லப்படும் அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் இந்த ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டம், மேல்கலிங்கப்பட்டி எட்டுக்கை அம்மன் கோயில்: தம்பதி ஒற்றுமை, பிள்ளைவரம் கிடைக்கும்!

வனங்களை ஆள்பவள் அன்னை துர்கை. அவளே வனதுர்கையாகப் பல தலங்களில் காட்சி தருகிறாள். வன வளத்தையும் நில வளத்தையும் பாதுகாப்பவள் அவளே. எங்கு வனம் செழித்துக் காணப்படுகிறதோ அந்தப் பகுதியில் நீர் வளம் நிறைந்திர... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்... மேலும் பார்க்க

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் ... மேலும் பார்க்க

ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album

ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம்ஈரோடு திண்டல் முருகன் கும... மேலும் பார்க்க