தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை மாநகராட்சி
தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 100 இடங்களில் ஒளிபரப்பப்படவுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் காலை 9.30 மணி முதல் எல்.இ.டி. திரை வாயிலாக ஒளிபரப்பப்படும்.
சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுர பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், பாண்டி பஜாா் சாலை, வள்ளுவா் கோட்டம், கத்திப்பாரா பூங்கா, மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை, டைடல் பாா்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாா்ச் 15-ஆம் தேதி சனிக்கிழமை தாக்கல் செய்யப்படும் வேளாண் நிதிநிலை அறிக்கையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.