செய்திகள் :

'தரிசன நேரம் முதல் பேருந்து நேரம் வரை' - சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு உதவ புதிய இணையதளம்!

post image

தென் இந்தியாவின் புனிதத் தலங்களில் சபரிமலை மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். அதிலும் மண்டலபூஜை, மகரவிளக்கு காலங்களில் பல லட்சம் பக்தர்கள் திரண்டுவருவர்.

அப்படிவரும் பக்தர்களுக்குத் தேவையான தகவல்களை எளிதாகப் பெறும் வகையில், பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் சார்பில் 'சபரி போர்டல்' (Sabari Portal) என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் சிறப்பு என்னவென்றால், இதற்காகத் தனியாக எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. மொபைல் போன் அல்லது கணினியில் இணையதளத்தைத் திறந்தாலே போதும். பக்தர்களுக்குத் தேவையான பல்வேறு தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

சபரிமலை 2026–27 மண்டல-மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்திய சபரி போர்டல் மூலம் தரிசன நேரம், பேருந்து வசதி, மருத்துவ உதவி, தங்குமிடம் உள்ளிட்ட தகவல்களை ஒரே இடத்தில் பெறலாம்.

சபரிமலை சன்னிதானத்தில் தரிசனத்துக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்... இதுவரை எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்... அன்றைய பூஜை நேரங்கள் என்னென்ன என்பன போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அதேபோல், பம்பை திரிவேணி சங்கமத்தில் நீர்மட்டம் எவ்வளவு இருக்கிறது, அங்கு குளிக்க அனுமதி இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி, கழிப்பறை, மருத்துவ உதவி மையம், காவல் நிலையம், ஓய்வறை, ஏ.டி.எம்., வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை எங்கெங்கு இருக்கின்றன என்பதையும் வரைபடத்தின் உதவியுடன் கண்டறியலாம்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை தரிசனத்துக்கான விர்ச்சுவல் கியூ முன்பதிவு, ஸ்பாட் புக்கிங் விவரங்கள், அடுத்த 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்துக்குள் புறப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளின் விவரங்கள், அருகிலுள்ள ரயில் நிலையங்களின் நேர அட்டவணை ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

பக்தர்கள் கூட்டத்தில் தங்களுடன் வந்தவர்கள் காணாமல் போனாலோ அல்லது மொபைல் போன் உள்ளிட்ட பொருள்களைத் தொலைத்துவிட்டாலோ புகைப்படத்துடன் புகார் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது. இந்தப் புகார்கள் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றடையும்.

மேலும், கடைகளில் உணவுப் பொருள்கள், குடிநீர், பூஜைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு அரசு நிர்ணயித்த விலையைச் சரிபார்க்கலாம். கூடுதல் விலை வசூலித்தால் அதுகுறித்துப் புகார் அளிக்கவும் முடியும். யாத்திரையின்போது வாகனங்கள் பழுதடைந்தால் மோட்டார் வாகனத் துறையின் உதவியையும் பெறலாம்.

சபரி போர்ட்டல்
சபரி போர்ட்டல்

வாட்ஸ்அப்பிலும் தகவல்களைப் பெறலாம்!

இணையதளத்தைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள்கூட வாட்ஸ்அப் மூலமாகத் தகவல்களைப் பெறும் வகையில் சாட்பாட் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக +91 94009 67300 என்ற எண்ணுக்கு 'Hi' என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பினால் போதும். தரிசன விவரங்கள், பேருந்து நேரங்கள், தங்குமிட வசதிகள், மருத்துவ உதவி உள்ளிட்ட தகவல்களைப் பெறலாம்.

இந்த இணையதளம் தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஆறு மொழிகளில் செயல்படுகிறது.

யார் உருவாக்கியது?

இந்த இணையதளத்தை உருவாக்குவதற்காகத் தனியார் மென்பொருள் நிறுவனங்களை அணுகாமல், அரசுத் துறை அதிகாரிகளே இணைந்து உருவாக்கியுள்ளனர். பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றும் அஜித் ஸ்ரீனிவாஸ் மற்றும் நில வருவாய் ஆணையரகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் யாகேஷ் பி. இருவரும் இதை உருவாக்கியுள்ளனர்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் பல்வேறு அரசுத் துறைகளைத் தனித்தனியாக அணுக வேண்டிய நிலையைத் தவிர்த்து, தங்களுக்குத் தேவையான தகவல்களையும் உதவிகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கு இந்தச் சபரி போர்டல் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையதள முகவரி:  sabariportaldcpta.in

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகைத் திருவிழா - ரோப் காரில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு!

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பத... மேலும் பார்க்க

நாகூர் தர்காவில் 470-வது கந்தூரி விழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடக்கம்!|Photo Album

ஆன்மிகமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் நாகூர் தர்கா மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நாகூர் ஆண்டவரின் 470-வது உரூஸ் முபாரக் விழா,... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. ஆறு நாட்கள் நடைபெற... மேலும் பார்க்க

திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட... மேலும் பார்க்க