கோவை சிறுமி கொலை: "குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்...
தவெக-வுக்கு ஆதரவு: ``ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார்.
அவரின் பேட்டியில், ``தேர்தலுக்கு முந்தைய காலகட்டத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பதற்காகப் பல முனைகளில் இருந்தும் பலதரப்பினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர்.
என்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, எமது உணர்ச்சிகளைத் தூண்டி, அவதூறுகளைப் பரப்பி ஆத்திரம் ஊட்ட முயன்றனர்.

ஆனால், சாதிய-மதவாத சக்திகளின் அந்தச் சதி முயற்சிகளை எல்லாம் முறியடித்து, தி.மு.க கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஒருபோதும் கூட்டணியைப் பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறையில் காட்டினேன்.
இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த அளவுக்கு தி.மு.க தலைவருக்கு என்னால் முடிந்த முழு உறுதுணையையும் வழங்கினேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், இந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அளவுக்கு எனக்கு தனிப்பட்ட ஆளுமையோ, வலிமையோ இல்லை.
காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவையோ, இடதுசாரி (கம்யூனிஸ்ட்) கட்சிகள் எடுத்த முடிவையோ தடுக்கும் வலிமை எனக்கு இல்லை. அதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டில் தலையிட எனக்கு அதிகாரம் இல்லை. நேர்மையாகச் சிந்திக்கும் எவருக்கும் இந்த அரசியல் காட்சிகள் புரியும்.
சூழ்நிலை இவ்வாறிருக்க, தற்போதும் சமூக ஊடகங்களில் என்னை மட்டுமே குறிவைத்து கடுமையான விமர்சனங்களையும் அவதூறுகளையும் ஏவுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அதேபோல, தவெக ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு என்பது எங்களின் அவசர முடிவல்ல. இடதுசாரிகள் எடுத்த முடிவை முன்வைத்து, எங்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக விவாதித்தோம். இந்த முடிவை நாங்கள் மிக மிக நிதானமாகத்தான் எடுத்திருக்கிறோம்.
எங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர், அண்ணன் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு இதைக் கொண்டு சென்று, அவருடைய வாழ்த்துக்களோடு, இசைவோடுதான் த.வெ.க-விற்கான இந்த ஆதரவை நாங்கள் அறிவித்திருக்கிறோம். நாங்கள் வேறு எந்தக் கூட்டணியிலும் இல்லை.
கட்சியின் விதிமுறைகளின்படி முடிவெடுக்க எனக்குரிய கால அவகாசத்தை நான் எடுத்துக்கொண்டேன். 8-ம் தேதி மாலை 4 மணிக்கு இடதுசாரிகள் தங்களின் அறிவிப்பை வெளியிட்டனர். அடுத்த நாள் (9-ம் தேதி) மதியம் 2 மணிக்கே த.வெ.க தரப்பிற்கு நாங்கள் தகவல் கொடுத்து, 3:30 மணிக்குக் கடிதத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்துவிட்டோம்.
நான் செய்தியாளர்களைச் சந்திக்கத் திட்டமிடாமல், அறிக்கையை சமூக ஊடகங்களிலேயே வெளியிட்டிருக்க முடியும். ஆனால், காலை முதலே விசிக தலைமையகத்தில் காத்திருந்த ஊடகவியலாளர்களை அவமதித்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே மாலையில் நேரில் வந்து எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்தேன்.

விசிக-வின் தலைவனாக வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்பதுதான் என் முடிவு. ஆனால், கட்சி என் முடிவை மறுபரிசீலனை செய்யக் கூறியது. அதன் அடிப்படையில், தொண்டர்கள், நிர்வாகிகளின் ஆலோசனையின்படி, அவர்களின் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன்.
எனக்கு இப்போது அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பமில்லை. எங்கள் நேர்மையையோ, அரசியல் தூய்மையையோ கலங்கப்படுத்த யாருக்கும் உரிமையில்லை" என்று திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.















