கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை" – தவெக அரசு மீது எஸ்.பி. ...
கோவை சிறுமி கொலை: சாக்லேட் தந்து சிறுமியை அழைத்து சென்று கொலை; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அச்சிறுமியை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்றதாகத் தெரியவந்தது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
பின்னர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்த்தி காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தாகக் கூறப்படுகிறது.
இதில் வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியைக் கொலை செய்த கார்த்தி, அச்சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் என்பதும், சாக்லேட் வாங்கி தந்து அழைத்து சென்று கொலை செய்தததும், இது தெரியாமல் இருக்க சிறுமியின் தந்தை உடன் சேர்ந்து தேடுவது போல நாடகமாடியதும் தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூராய்வு முடிவிலேயே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காவல் துறை தலைவர் சந்தீப் ராய் ராத்தோர், சிறுமியைக் கொலை செய்த தென்னந்தோப்பில் நேரில் ஆய்வு செய்தார். மேலும் சூலூர் காவல் நிலையத்தில் காவல் துறை உயரதிகாரிகளிடம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நடைபெற்று வந்த சிறுமியின் உடற்கூராய்வு இன்று மதியம் நிறைவடைந்தது. கொலையாளிகளுக்குத் தண்டனை வழங்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனச் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



















