செய்திகள் :

திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் இருக்கும் பயணிகள்

post image

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகில் ஜலகம்பாறை பகுதியை நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், தற்போது கடுமையாகச் சேதமடைந்திருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக அப்பகுதிக்குச் சென்று பார்க்கும்போது, உள்ளூரின் முக்கிய போக்குவரத்து மையமாகச் செயல்பட்டு வரும் இந்தப் பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து, பாராமரிப்பின்றி அசுத்தமாகக் காணப்படுவதோடு, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையிலே இருக்கிறது.

குறிப்பாக கோவிலூர், கிருஷ்ணாபுரம், புதுக்கோட்டை எனச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பல்வேறு மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் தினசரி இப்பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் பேருந்து நிறுத்தமானது கடந்த 10 முதல் 15 ஆண்டுகளாக இதே மோசமான நிலையில்தான் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் சுவர்கள் உடைந்து, மேல்சுவர் பலவீனமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்குச் சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் அதிகரிக்கிறது.

மோசமான சுவர்
மோசமான சுவர்

சுற்றுப்புறத்தில் குப்பைகள் தேங்கியுள்ளதால் சுகாதாரப் பிரச்னைகளும் உருவாகி வருகின்றன. உட்காரும் வசதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதால் முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு தூய நெஞ்சக் கல்லூரிக்கு அருகே இருந்த இதேபோன்ற ஒரு பேருந்து நிறுத்தம் இடிந்து விழுந்த சம்பவம், இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் காட்டுகிறது. அதேபோன்ற விபத்து இங்கும் நடைபெறலாம் என்ற அச்சத்தில் மக்கள் தினசரி உயிர் பயத்துடனே அப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் வெங்கடேஷ் நம்மிடம் பேசும் போது,

“நான் தினமும் கிருஷ்ணாபுரம் போறதுக்காக இந்தப் பஸ் ஸ்டாப்லதான் நிக்கிறேன். இங்க நிக்கறதுக்கே ரொம்ப பயமா இருக்கு. மேல இருக்குற சுவர் எப்போ வேண்டுமானாலும் விழுற மாதிரி இருக்கு. மழை வந்தா நிலைமை இன்னும் மோசமாகுது.

நாங்க எல்லாரும் உயிர் பயத்துலதான் காத்திருக்கறோம். அருகிலேயே ஒரு பஸ் ஸ்டாப் இடிஞ்சி விழுந்ததுக்கப்புறமும் இங்க எந்த மாற்றமும் இல்லை. உடனே புதிய பஸ் ஸ்டாப் கட்டணும் இல்லனா பெரிய விபத்து கூட நடக்க நிச்சயமாக வாய்ப்பிருக்கு” என்கிறார்.

மோசமான சுவர்
மோசமான சுவர்

அதேபோல், திருப்பத்தூரைச் சேர்ந்த மற்றொரு பட்டதாரி இளைஞர் கோபிநாத்திடம் பேசிய, “நான் பெரும்பாலும் போக்குவரத்துக்கு பஸ்ஸை நம்பி இருப்பதில்லை. இருந்தாலும் இங்க பக்கத்திலேயே பல கல்லூரியும், நிறுவனங்களும் இருக்கறதுனால நிறைய இளைஞர்கள், பெண்கள், அலுவலர்கள், தினக்கூலிகள்னு எல்லா தரப்பினரும் அவங்க போக்குவரத்து வசதிக்கு அரசுப் பேருந்தைத்தான் நம்பி இருக்காங்க.

பெரும்பாலும் இந்தப் பஸ் ஸ்டாப்பைத்தான் பயன்படுத்துறாங்க. இந்தப் பஸ் ஸ்டாப் நிலைமை ரொம்ப வருஷமா இப்படித்தான் இருக்கு. நாளுக்கு நாள் மோசமாகிட்டுதான் இருக்கு. தினமும் மக்கள் பயன்படுத்துற இடம் இவ்வளவு மோசமா இருக்கக் கூடாது. அதிகாரிகள் கவனிக்காமல் இருந்தா இன்னும் இது ஒரு பெரிய பிரச்னையா மாறும். இதுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கனும்” என வலியுறுத்துகிறார்.

மோசமான சுவர்
மோசமான சுவர்

இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம், பழைய மற்றும் சேதமடைந்த கட்டிடத்தை உடனடியாக அகற்றி, புதிய பாதுகாப்பான பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்; சுற்றுப்புறச் சுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, விபத்து நடக்காமல் தடுக்க அதிகாரிகள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது நடவடிக்கை எடுத்தால் கூட, எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரிய விபத்துகளைத் தவிர்த்து, பல உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பது அப்பகுதி மக்களின் தீர்க்கமான கோரிக்கையாக உள்ளது. நடவடிக்கை எடுக்குமா அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க