விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்க...
திருப்பரங்குன்றம் : "அவர்களுக்கு அரசியலில் இடமில்லை.!" - பாஜக தலைவராக பதவியேற்ற நிதின் நபின்
பாஜக-வின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிதின் நபின் இன்று (ஜன.20) பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனேயே தமிழ்நாட்டின் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார்.
பிரதமருக்கு நன்றி!
பதவி ஏற்ற பிறகு பேசிய நிதின் நபின், "அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள். இதற்காக உங்கள் முன் தலைவணங்குகிறேன். பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அயராது பாடுபடுவதை நாங்கள் சாதாரண தொண்டராக இருந்து கவனித்து வருகிறோம். இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம்.
இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை. கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் எனது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
அரசியலில் இடம் இல்லை...
இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.




















