Valentino Garavani: ஃபேஷன் உலகமே அஞ்சலி செலுத்தும் ஜாம்பவான் வாலென்டினோ கரவானி -...
`இனி என் தலைவர் நிதின் நபின்' எனக் கூறும் பிரதமர் மோடி; 45வது வயதில் பாஜக தலைவர்! - யார் இவர்?
பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவராக இன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இப்பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ``உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.கவிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட கட்சியின் முன்னாள் தலைவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி நிதின் நபின் தான் எனது தலைவர். நான் சாதாரண கட்சி தொண்டன்''என்று தெரிவித்தார்.
45 வயதில் பா.ஜ.கவுக்கு தலைவராக நிதின் நபின்
பா.ஜ.கவில் தலைவர் பதவியை ஏற்ற இளம் தலைவர் என்ற பெயரை பெறுகிறார்.
இந்த ஆண்டு தமிழ் நாடு உட்பட முக்கிய மாநில சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் நிதின் நபின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் நிதின் நபின் பா.ஜ.க வின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு கட்சியின் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சி தலைவர் பதவிக்கு நிதின் நபின் தவிர்த்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவு கொடுத்தனர்.
கட்சியின் 12-வது தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நபின் பீகாரில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் நபின் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். 2006-ம் ஆண்டு நபின் கிஷோர் காலமானதை தொடர்ந்து நிதின் நபின் அரசியலுக்கு வந்தார்.
தனது தந்தையின் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் கட்சியில் 20 ஆண்டு அனுபவம் கொண்டவர். அதோடு கட்சியின் மூத்த தலைவர்களை அனுசரித்து செல்லகூடியவர். மேலும் நிதின் சத்தீஷ்கர் உட்பட சில மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்து பா.ஜ.கவை வெற்றி பெறவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



















