மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்!...
திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், `புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப்போல் ஆகிவிடும் என்பதால்... இந்தப் புத்தகத்தை விற்கக் கூடாது என அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தைப் பறிமுதல் செய்து விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ``களங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன. இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ``மிகவும் அவதூறான, களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?" என நீதிபதிகள், தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

``மிகவும் தீவிரமான இந்த விவகாரம் தொடர்பான புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது. மேலும், அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இதுமாதிரியான செயல்களுக்கு அனுமதி வழங்க முடியாது" என்றனர்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ``புத்தக காட்சி நாளை முதல்வரால் துவங்கி வைக்கப்பட உள்ளது. இது போன்ற செயல்களை முதல்வரும் விரும்பவில்லை. புத்தக காட்சி அரசால் நடத்தப்படவில்லை. பதிப்பாளர்களால் நடத்தப்படுகிறது. இந்தப் புத்தக கண்காட்சியில் இந்தப் புத்தகம் விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். அதற்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி தெரிவித்தார்.

இதையடுத்து, புத்தக பதிப்பாளர், கீழைக்காற்று பதிப்பகம் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க பதிப்பகத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், புத்தகத்தைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதை உறுதி செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


















