"அவன் அடிப்பான்; அவன் அடிப்பான்; அவன் அவன் கதையை முடிப்பான்" - ரெக்கார்ட் சேஸ் ச...
திருவள்ளூர்: ஏசி வாங்கிக் கொடுக்காததால் மனைவி எடுத்த விபரீத முடிவு? கணவரிடம் விசாரணை; என்ன நடந்தது?
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோனிகா (25).
இவர்கள் இருவரும் பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்தனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள துணிக்கடையில் ஆகாஷ் வேலை செய்து வருகிறார். மோனிகா வேலைக்கு எங்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் வெயில் காரணமாக ஆகாஷ் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியதாகத் தெரிகிறது. காலையில் கண் விழித்து வீட்டுக்குள் ஆகாஷ் சென்ற போது மோனிகா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ், கதறி அழுதார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மோனிகாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோனிகா எப்படி இறந்தார் எனப் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகாததால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெயில் காரணமாக வீட்டில் ஏ.சி இல்லாமல் தூங்க முடியவில்லை. அதனால் ஏ.சி வாங்கி தரும்படி மோனிகா, கணவர் ஆகாஷிடம் கேட்டதாகத் தெரிகிறது. குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆகாஷ், ஏசி வாங்கிக் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.
அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மோனிகா இந்த விபரீத முடிவை எடுத்ததாக ஆகாஷ் தரப்பில் போலீஸாரிடம் கூறப்பட்டிருக்கிறது.

மோனிகாவின் குடும்பத்தினரோ தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பிறகும்தான் மோனிகாவின் மரணத்துக்கான காரணம் தெரியும் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

















