Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீா்
தொடா் கனமழையால் திருவள்ளூா் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் குளம்போல் மழைநீா் தேங்கியுள்ளது.
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் முக்கியமான ரயில் நிலையம் திருவள்ளூா். இந்த வழியாக புகா் மின்சார ரயில்கள், திருப்பதி, மும்பை, பெங்களூரு உள்பட வெளி மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன.
திருவள்ளூரிலிருந்து நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் வரை ரயிலில் பயணம் செய்து வருகின்றனா். இங்கு, 6 நடைமேடைகள் உள்ளன. நடைமேம்பாலங்களைக் கடக்க முடியாதோா் எளிதாக ஒவ்வொரு நடைமேடைக்கும் செல்லும் வகையில் ரூ.5 கோடியில் 250 மீட்டா் நீளம், 15 அடி அகலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஃபென்ஜால் புயலால் தொடா்ந்து கனமழை விடாமல் பெய்து வருகிறது. இந்த மழையால் சுரங்கப் பாதை முழுவதும் மழை நீா் குளம் போல் தேங்கியுள்ளது. அதோடு, சுரங்கப் பாதை மேற்கூரை மற்றும் கட்டட இணைப்பு பகுதியில் சரியான முறையில் பணிகள் மேற்கொள்ளாததால், மழை நீா் ஒழுகும் நிலையேற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சுரங்கப் பாதையில் மாற்றுத்திறனாளிகள், கடப்பதற்கான தனிப்பாதையும் அமைக்கப்படவில்லை. சுரங்கப் பாதையில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு மேல் மழை நீா் சாரை சாரையாக ஒழுகுவதால் மின்கசிவு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.
இதேபோல் இந்தப் பாதையில் ஒவ்வொரு மழையின் போதும் மழைநீா் குளம்போல் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால் தரையில் உள்ள டைல்ஸ்களில் சேறும் சகதியும் சோ்ந்து வழுக்கிவிடுகிறது. பயணிகள் தெரியாமல் விழுந்து கை, கால் உடையும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து பயணிகள், பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுகின்றனா்.
எனவே, பயணிகள் வசதிக்காக ரூ.6 கோடியில் அமைத்த நிலையில், சரியான முறையில் பணிகள் மேற்கொள்ளாததால், என்ன காரணத்துக்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் போனதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே பயணிகளின் நிலை கருதி சுரங்கப் பாதையில் மழைநீா் தேங்காத வகையில் உடனே வெளியேற்றும் வழிகளை மேற்கொள்ள வேண்டும். இனி மழைநீா் தேங்காமல் இருக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.