Vote Vibes : ரஜினி `கொடுத்தும்' எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?
`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?' கவுன்சிலர் தேர்வில் மோதல்
மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் வைத்துக்கொண்டது கிடையாது. முதல் முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஆனால் இத்தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மும்பை மாநகராட்சியில் ஆட்சியை இழந்ததோடு 65 இடங்களில் வெற்றி பெற்றது. மும்பை மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் உத்தவ் தாக்கரே கட்சியால் அக்கட்சிக்கு இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3 பேரை நியமன கவுன்சிலர்களாக நியமிக்க முடியும்.

இது தவிர பா.ஜ.க தரப்பில் 4 பேரையும், காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் சார்பாக தலா ஒருவரையும் நியமிக்க முடியும். இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைத்துள்ள 3 பேரில் ஒரு கவுன்சிலர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அக்கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்துவிட்டார்.
இதனால் தாக்கரே சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. அதோடு உத்தவ் தாக்கரேயின் பரம அரசியல் எதிரியாக கருதப்படும் ஏக்நாத் ஷிண்டேயை ராஜ் தாக்கரே சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரேயிக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர்கள், "இதயம் அதில் இல்லாதபோது ஏன் அன்பைப் பற்றி கவலைப்பட வேண்டும்?" என்றும் "குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மற்றவர்களை அரவணைக்க முடியாது" போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து ராஜ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் அவினாஷ் அபயான்கர் அளித்த பேட்டியில், ''ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளிடையே கூட்டணி இருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைக்கும் நியமன உறுப்பினர்களில் ஒன்றை கேட்பது குறித்து ராஜ் தாக்கரேதான் முடிவு செய்வார். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை''என்றார்.

இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் துபே கூறுகையில், ''உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைவர்கள். அவர்கள் இருவரும் மிகச் சிறிய விஷயங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்பவர்கள் அல்ல. மராத்திய பெருமையை நிலைநாட்டுவதில் இருவரும் உறுதியாக இருப்பார்கள். சில இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துக்களோ அல்லது சமூக ஊடகப் பதிவுகளோ இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது. இந்தக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று குறிப்பிட்டார்.
தாக்கரே சகோதரர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஒன்றிணைந்தாலும் மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. அதோடு ஒரு சில மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், இரு தலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

















