பக்தவத்சலம்: முதல் தேர்தல் வெற்றியிலேயே ஒரு தலைமுறையின் வரலாற்றைத் தீர்மானித்தவர...
ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
இருவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமண ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை வரை இந்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் நேற்று காலை 4 மணிக்கு இரண்டு சகோதரிகளும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை அவர்களின் பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இரண்டு பேரும் உயிரிழந்திந்தனர்.
அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமண வீடு சோகமயமாக மாறியது. தற்கொலையை போலீஸுக்குத் தெரிவிக்காமல் இருவரது உடலையும் தகனம் செய்ய குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் இது குறித்து கேள்விப்பட்ட போலீஸார் அவர்களது உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களது உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்கொலைக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவரவில்லை என்று தெரிவித்துள்ள போலீஸார், அது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகளின் உறவினர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், ''இச்சம்பவத்திற்கு சகோதரிகளின் தந்தை தீப் சிங் தரப்புதான் காரணம் ஆகும். தீப் சிங்கின் சகோதரர்கள்தான் இரண்டு பேரின் திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் இருவருக்கும் திருமணப் பேச்சு நடந்து வந்தது. ஆனால் அத்திருமணம் நின்று போனது.
முன்பு பேசிய அதே நபர்களுக்கு இரண்டு பேரையும் திருமணம் செய்து கொடுக்கும்படி தீப் சிங் சகோதரர்கள் நிர்ப்பந்தம் செய்து வந்தனர்'' என்றார். இப்புகார் குறித்தும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக வேலை செய்து வருகின்றனர்.



















