தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை! மூவருக்கு தலா ரூ. 60.5 லட்சம் அபராதம்!
தில்லி தேர்தல்: பிரதமர் மோடி, கேஜரிவால், அதிஷி வாழ்த்து!
தில்லி பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி மற்றும் தில்லி முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தலைநகரான தில்லியில் பேரவைத் தேர்தலில் 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயகத் திருவிழாவில் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தருணத்தில், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்!” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் | ரூ.5 லட்சத்துடன் தில்லி முதல்வர் அலுவலக ஊழியர்கள் இருவர் கைது!
முன்னாள் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ளப் பதிவில், “அன்பான தில்லி மக்களே... இன்று தேர்தல் நாள். உங்கள் வாக்கு வெறும் ஒரு பொத்தான் அல்ல. அது உங்கள் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளம்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறந்த பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் நல்ல வாழ்க்கையை வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு!
இன்று நாம் பொய், வெறுப்பு மற்றும் பயத்தின் அரசியலை தோற்கடித்து உண்மை, வளர்ச்சி மற்றும் நேர்மையை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நீங்கள் வாக்களியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டாரை ஊக்குவிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய தில்லி முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “தில்லியில் இன்று நடைபெறும் தேர்தல் வெறும் தேர்தல் அல்ல.. இது ஒரு மதப் போர். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர். தில்லி மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உண்மை வெல்லும்!” எனப் பதிவிட்டுள்ளார்.