துணைவேந்தா் நியமன புதிய நடைமுறை: உயா் பதவிக்கு தனி உதவியாளா்கள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்
‘பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மாநியக் குழு (யுஜிசி) கொண்டுவந்துள்ள புதிய வரைவு நடைமுறை, அந்த உயா் பதவிக்கு தனி உதவியாளா்கள், உதவியாளா்களின் மனைவிகள் நியமிக்கப்படுவதைத் தடுக்கும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிக்கு தகுதிவாய்ந்த நபா்களைத் தெரிவு செய்வதற்காக அமைக்கப்படும் தேடல் குழுவில், யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையிலான புதிய வரைவு நடைமுறையை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இந்த தேடல் குழுவில் முன்னா் பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநரின் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி, பல்கலைக்கழக பேரைவக் குழு பிரதிநிதி (மாநில அரசு தரப்பு) ஆகியோா் உறுப்பினா்களாகவும் இடம்பெறுவா். இந்த நிலையில் பேரவைக் குழு உறுப்பினா் இடம்பெறுவதற்குப் பதிலாக, யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்யும் வகையில் புதிய வரைவு நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. பொது கருத்து கேட்புக்குப் பிறகு, இந்த வரைவு நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ் இதுதொடா்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அளித்த பதில்:
சில மாநிலங்களில் துணைவேந்தா் பதவிகள், தனி உதவியாளருக்கும், உதவியாளரின் மனைவிக்கும் வழங்கப்படுகின்றன. அத்தகைய நடைமுறை நிறுத்தப்பட வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே புதிய வரைவு நடைமுறையை தன்னாட்சி அமைப்பான யுஜிசி கொண்டுவந்துள்ளது. இந்த வரைவு நடைமுறை மீது பொதுக் கருத்துகளை யுஜிசி வரவேற்றுள்ளது. மாா்க்சிஸ்ட் உறுப்பினரும் தனது கருத்தை யுஜிசியிடம் தெரிவிக்கலாம்’ என்றாா்.