செய்திகள் :

`துளுவுக்கு கிடைத்தது என்ன அங்கீகாரம்? எட்டாவது அட்டவணையா, நிர்வாக மொழியா?' – ஓர் முழு விளக்கம்

post image

துளு மொழிக்கு நிர்வாக ரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது கர்நாடகத்தில் மட்டுமல்லாமல், துளு பேசும் மக்களிடையிலும் கவனம் பெற்றுள்ளது.

ஆனால், இங்கே ஒரு முக்கியமான கேள்வி இருக்கிறது.

“துளுவுக்கு அங்கீகாரம்” என்றால், உண்மையில் என்ன அங்கீகாரம்?

ஒரு மொழிக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறது என்றாலே, அது ஒரே வகையான சட்டப்பூர்வ அங்கீகாரம் என்று அர்த்தமல்ல. எட்டாவது அட்டவணையில் இடம்பெறுவது ஒரு வகை; மாநிலத்தின் அலுவல் அல்லது குறிப்பிட்ட நிர்வாகப் பயன்பாட்டில் இடம்பெறுவது வேறு வகை.

அந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள, முதலில் துளு மொழியின் வரலாற்றையும் இலக்கியப் பின்னணியையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.

திராவிட மொழிக்குடும்பத்தில் துளுவுக்கு ஒரு தனி இடம்!

துளு ஒரு திராவிட மொழி

ராபர்ட் கால்டுவெல் தனது “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” (1856) என்ற நூலில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, குடகு ஆகியவற்றைத் திருந்திய திராவிட மொழிகளாகக் குறிப்பிடுகிறார்.

அதாவது, துளு ஒரு வட்டாரப் பேச்சு வழக்கு மட்டுமல்ல; திராவிட மொழிக்குடும்பத்தில் தனித்துவமான இடம் பெற்றுள்ள ஒரு மொழியாகும்.

துளு நாட்டின் வரலாறு

துளு மொழியைப் புரிந்துகொள்ள அதன் நிலப்பரப்பையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மயிலை சீனி. வேங்கடசாமியின் துளுநாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை) (1966) என்ற நூல் துளு நாட்டின் பழைய வரலாற்றைப் புரிந்துகொள்ள முக்கியமான ஆய்வாக உள்ளது.

அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களில் துளு நாடு தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

துளு நாடு, கொங்கண நாடு, போன்ற பெயர்களும் இந்த இலக்கியப் பின்னணியில் காணப்படுகின்றன.

இதனால், துளு நாடு என்ற வரலாற்றுப் பகுதி குறித்த செய்திகள் தமிழ் இலக்கியங்களிலேயே பதிவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

துளு நாட்டின் எல்லை

துளு நாட்டின் எல்லைகளைப் பற்றி மயிலை சீனி. வேங்கடசாமியின் ஆய்வுகள் சில முக்கியமான தகவல்களைத் தருகின்றன.

துளு நாட்டின் எல்லை மயிலை சீனி. வேங்கடசாமியின் துளுநாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை) (1966) நூல்

பழைய துளு நாட்டுடன் இன்றைய தென் கன்னடப் பகுதி தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் மலைப்பகுதியும் அதன் நிலப்பரப்புடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது துளு மொழி முக்கியமாக கர்நாடகத்தின் தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகளிலும், கேரளத்தின் காசர்கோடு பகுதியிலும் பேசப்படுகிறது.

தமிழுக்கும் துளுவுக்கும் உள்ள தொடர்பு

தமிழுக்கும் துளுவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பைப் புரிந்துகொள்ள தமிழ் இலக்கியங்களும் முக்கியமானவை.

அகநானூறு பாடல் 15-ல்,

“தோகைக் காவின துளு நாடு...”

என்ற குறிப்பு இடம்பெறுகிறது.

துளு நாடு என்ற பெயர் பழைய தமிழ் இலக்கியங்களிலேயே இடம்பெற்றிருந்ததற்கான இலக்கியச் சான்றாக இது பார்க்கப்படுகிறது.

துளு மொழியின் பழைய சொற்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை பழைய தமிழ் சொற்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதற்கும் துளு மொழி உதவக்கூடும் என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

மனோன்மணீயத்தில் துளு

பெ. சுந்தரனார் 1891-ஆம் ஆண்டு எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகக் காப்பியத்தின் பாயிரத்தில், “தமிழ்த் தெய்வ வணக்கம்” என்ற தலைப்பில் “நீராருங் கடலுடுத்த” பாடல் அமைந்துள்ளது. தற்போது இது தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக உள்ளது.

அதன் அசல் வடிவத்தில்,

“கன்னடமும் களிதெலுங்கும்

கவின்மலையாளமும் துளுவும்

உன்னுதரத்தே உதித்தெழுந்தே

ஒன்றுபல வாகிடினும்...”

என்று துளு நேரடியாகக் குறிப்பிடப்படுகிறது.

திரையில் உயிர்பெற்ற துளு மரபு!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 2022-ம் ஆண்டு வெளியான காந்தாரா (Kantara) திரைப்படத்தில், கடலோர கர்நாடகாவின் துளு மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடைய பூதாராதனை, கம்பளா, கிராமிய வாழ்க்கை, துளு உணவுப் பண்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, படத்தின் மையத்தில் இடம்பெறும் பூதகோலா மற்றும் கம்பளா போன்றவை துளு பேசும் கடலோர கர்நாடகப் பகுதிகளின் பண்பாட்டு சூழலைப் பிரதிபலிக்கின்றன.

இதன் மூலம், ஒரு பிராந்தியத்தின் மொழியோடு இணைந்திருக்கும் பண்பாட்டு மரபுகள் சினிமா வழியாகவும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய முடிகிறது.

நீண்டகாலமாக நடந்த துளு மொழி அங்கீகாரப் போராட்டம்!

துளுவுக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கை நேற்றோ, இன்றோ தொடங்கியதல்ல. பல ஆண்டுகளாகவே துளு மொழிக்கு உரிய அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று, அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் துளுவைச் சேர்க்க வேண்டும் என்பதாகும்.

“துளுவைப் பேசுபவர்கள் எத்தனை பேர்?” என்ற கேள்விக்கும் அதிகாரப்பூர்வ தரவு உள்ளது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 18,46,427 பேர் துளுவைத் தாய்மொழியாகப் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவரங்களைக் குறிப்பிட்டு, 2018-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி, காசர்கோடு தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி. கருணாகரன், துளுவை எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவையில் முன்வைத்தார்.

இதனால், துளுவுக்கான அங்கீகாரக் கோரிக்கை மொழி அமைப்புகள் மற்றும் சமூக மட்டத்தில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

மோகன் ஆல்வா குழுவின் அறிக்கையிலிருந்து அமைச்சரவை முடிவு வரை!

துளுவுக்கு நிர்வாக ரீதியான அங்கீகாரம் வழங்குவது பற்றிய விவாதம் திடீரென உருவானது அல்ல.

2023-ல் கர்நாடக அரசு துளுவை கர்நாடகத்தின் இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழியாக அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மோகன் ஆல்வா தலைமையிலான குழுவை அமைத்தது.

இந்தக் குழு துளு மொழியின் வரலாறு, பண்பாடு, மக்கள் தொகை, துளு மக்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள், துளு மற்றும் கன்னட மொழிகளுக்கு இடையிலான வரலாற்றுத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தது. பின்னர், 14 பிப்ரவரி 2023 அன்று அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்ததாக அரசுத் தரப்பை மேற்கோள் காட்டிய செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மோகன் ஆல்வா

அதன்பிறகு, துளுவுக்கு நிர்வாக அங்கீகாரம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன.

2026 செப்டம்பர் 18 அன்று மங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில், தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் துளுவை கர்நாடகத்தின் இரண்டாவது கூடுதல் நிர்வாக மொழியாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக மொழிபெயர்ப்பு, பயிற்சி மற்றும் துளு மொழிப் பயன்பாடு தொடர்பான பணிகளுக்காக ஆண்டுக்கு ₹82 லட்சம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் துளு மொழிக்கான நீண்டகால கோரிக்கைகளிலிருந்து நிர்வாக முடிவை நோக்கி வந்துள்ள சமீபத்திய கட்டம்.

ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியை முடிவு செய்வது எப்படி?

ஒரு மாநிலத்தில் எந்த மொழி அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான அரசமைப்புச் சட்ட அடிப்படை என்ன?

இதற்கு முக்கியமான அரசமைப்புச் சட்ட அடிப்படை 345-வது சரத்து.

இந்த சரத்தின்படி, ஒரு மாநிலத்தின் சட்டமன்றம், அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை, அந்த மாநிலத்தின் அனைத்து அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அதிகாரப்பூர்வப் பயன்பாடுகளுக்கான மொழியாக சட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளலாம்.

இதன் பொருள், ஒரு மொழி எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதுதான், அந்த மொழியை ஒரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பயன்பாட்டுக்காக ஏற்றுக்கொள்வதற்கான ஒரே வழி என்று சொல்ல முடியாது. எட்டாவது அட்டவணையில் இடம்பெறுவது ஒரு தனியான அரசமைப்புச் சட்ட அங்கீகாரம்; ஒரு மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் மொழியை அதிகாரப்பூர்வப் பயன்பாட்டுக்காக ஏற்றுக்கொள்வது வேறொரு சட்ட நடைமுறை.

அப்படியானால் 347-வது சரத்து எதற்காக?

345-வது சரத்து மாநில சட்டமன்றத்தின் அதிகாரத்தைப் பற்றிப் பேசுகிறது. 347-வது சரத்து அதிலிருந்து வேறுபட்ட மற்றொரு வழிமுறையைச் சொல்கிறது.

ஒரு மாநிலத்தின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகிறார்கள் என்றும், அந்த மொழியை மாநிலம் முழுவதிலோ அல்லது அதன் ஒரு பகுதியிலோ குறிப்பிட்ட அலுவல் நோக்கங்களுக்காக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதாகவும் கருதுவோம். அத்தகைய சூழலில், அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து குடியரசுத் தலைவர் தேவையான உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

அதனால், 345-வது சரத்தின் கீழ் மாநிலச் சட்டமன்றம் சட்டம் இயற்றுவது; 347-வது சரத்தின் கீழ் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பது என இரண்டு வெவ்வேறு அரசமைப்புச் சட்ட வழிமுறைகள் உள்ளன.

நீதிமன்றம் என்ன சொல்கிறது?

இதுதொடர்பாக U.P. Hindi Sahitya Sammelan v. State of U.P., (2014) 13 S.C.R. 675 (SC)வழக்கும் குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் இந்தி ஏற்கெனவே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த நிலையில், உருதுவை கூடுதல் அதிகாரப்பூர்வ மொழியாகப் பயன்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது.

இந்த வழக்கில், மாநிலத்தில் ஏற்கெனவே ஒரு மொழி அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், அந்த மாநிலத்தில் பயன்பாட்டில் இருக்கும் மற்றொரு மொழியையும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக ஏற்றுக்கொள்ள மாநிலச் சட்டமன்றத்திற்கு அதிகாரம் இருப்பது விளக்கப்பட்டது.

இதனால், எட்டாவது அட்டவணை அங்கீகாரமும், ஒரு மாநிலத்தின் நிர்வாகப் பயன்பாட்டுக்கான அங்கீகாரமும் ஒன்றல்ல என்பது தெளிவாகிறது.

அப்படியானால்... துளுவுக்கு கிடைத்தது என்ன அங்கீகாரம்?

இங்குதான் துளுவின் தற்போதைய அங்கீகாரத்தைப் பார்க்க வேண்டும்.

2026 செப்டம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவின்படி, தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் துளுவை கூடுதல் நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, இது எட்டாவது அட்டவணையில் துளு சேர்க்கப்பட்டுவிட்டது என்பதல்ல. கர்நாடகா முழுவதற்குமான புதிய அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்தும் அல்ல. குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களில் நிர்வாகப் பயன்பாட்டுக்கான அங்கீகாரம் என்பதுதான் இதன் பொருள்.

மொழிக்கு அரசமைப்புச் சட்டம் தரும் மற்ற பாதுகாப்புகள்

மொழி தொடர்பான விஷயங்களில் 350 மற்றும் 350A சரத்துகளும் முக்கியமானவை.

350-வது சரத்து, ஒன்றியம் அல்லது மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மொழிகளில் குறைகளைத் தெரிவிக்கும் மனுக்களைச் சமர்ப்பிக்க வழிவகுக்கிறது.

350A சரத்து, மொழிச் சிறுபான்மை குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி நிலையில் தாய்மொழியில் கல்வி வழங்குவதற்கான போதுமான வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

அதனால், அதிகாரப்பூர்வ மொழி, எட்டாவது அட்டவணை அங்கீகாரம், தாய்மொழிக் கல்வி ஆகியவை வெவ்வேறு அரசமைப்புச் சட்ட நிலைகள்.

ஆனால், அரசின் அறிவிப்புடன் இந்தப் பயணம் முடிந்துவிடுகிறதா? நடைமுறையில் இந்த அங்கீகாரம் எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதும் முக்கியமான கேள்வியாகிறது.

துளுவுக்கு நிர்வாக மொழி அங்கீகாரம் கிடைத்துவிட்ட நிலையில், அடுத்த கேள்வி அதை நடைமுறையில் எப்படி கொண்டு வருவது என்பதுதான்.

“அங்கீகாரம் கிடைத்தது தொடக்கம் மட்டுமே. அரசு அலுவலகங்களில் துளு மொழிப் படிவங்கள், மொழிபெயர்ப்புகள், டிஜிட்டல் சேவைகள், அதிகாரப்பூர்வ சொற்களஞ்சியம் ஆகியவை உருவாக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் துளு மொழிப் பயிற்சி வழங்கலாம். அதேபோல், கல்வி, ஆய்வு மற்றும் டிஜிட்டல் தளங்களில் துளுவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டால்தான், நிர்வாக அங்கீகாரம் அடுத்த தலைமுறையிடமும் துளு மொழியைத் தொடர்ந்து கொண்டு செல்ல உதவும்” என்கிறார் மங்களூருவைச் சேர்ந்த முகமது இர்ஃபான்.

கிண்டல்களை கடந்து கலைக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெகன்... இன்று 'குரு' ஜோ குட்டி!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகனுக்கு வயது 29. ஆனால், அவரை ‘ஜெகன்’ என்று அழைப்பவர்களைவிட ‘ஜோ குட்டி’ என்ற பெயரில் அறிந்தவர்கள்தான் அதிகம். 14 வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கிய இவர், இன்று ஒரு... மேலும் பார்க்க

Calligraphy: கையெழுத்துக் கலையில் முத்திரை பதிக்கும் மதுரை இளைஞர்!

கையெழுத்தின் நளினத்தைக் காட்டும் நரேந்திர மூர்த்தி!சித்திரையும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற ஔவையின் கூற்றுக்கிணங்க, மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த 22 ... மேலும் பார்க்க

வைகறையில் தொடங்கும் ஒரு வாசகனின் பயணம் - சூ. ஆரோக்கிய புஷ்பராஜ்

சில புத்தகங்களை நாம் வாசிக்கிறோம். சில புத்தகங்கள் நம்மை வாசிக்க வைக்கின்றன. இன்னும் சில புத்தகங்கள், நாம் எவ்வளவு குறைவாக வாசித்திருக்கிறோம் என்பதை நமக்கே உணர்த்திவிடுகின்றன. டாக்டர் சங்கர சரவணனின் ‘... மேலும் பார்க்க

`லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாளுவோம்.!" - மரபின் அடையாளம் காக்கும் மழையூர் இளைஞர்கள்

லேப்டாப்பையும் களிமண்ணையும் ஒருசேரக் கையாண்டு..!கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏசி அறைகளும், மாதாந்திரச் சம்பள உத்திரவாதமும் சிவப்புக் கார்பெட் விரித்து அழைத்தாலும், "எங்க பரம்பரைத் தொழிலை நாங்க விட்டுக் க... மேலும் பார்க்க

“நூற்கலை முதல் சுவரோவியம் வரை... கைகளே என் மூலதனம்” – சட்டக் கல்லூரி மாணவர் கேசவனின் கலைப் பயணம்!

ஆர்வம், கற்பனை, தொடர் பயிற்சி... இவற்றைத் தனது கைகளோடு இணைத்து ஓவியம், நூற்கலை, சுவரோவியம் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி வருகிறார் கேசவன்.சட்டப் படிப்புக்கு மத்தியில் கலைப் பயணத்தையும் தொடர்ந்து வ... மேலும் பார்க்க