`மாப்பிள்ளை' அன்பில் ஸ்கெட்ச்; செ.பா அழுத்தம்; ஸ்டாலின் போன்! - தயங்கிய வைத்தி, ...
தூத்துக்குடி தொகுதி: முட்டிமோதும் நிர்வாகிகள்; கூட்டணி முடிவில் அதிமுக? - ஜாலியில் அமைச்சர் தரப்பு!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அமைச்சர் கீதா ஜீவன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். தூத்துக்குடி தி.மு.கவின் முகமாகவும், மக்கள் மத்தியில் நன்கு பரிட்சியமானவர் என்பதால் வரும் தேர்தலில் மீண்டும் தி.மு.க சார்பில் மீண்டும் கீதா ஜீவனே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் உள்ளுர் உடன்பிறப்புகள்.

தூத்துக்குடி தொகுதிக்குள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளும் அடங்குவதால், அமைச்சரின் தம்பியும் மாநகராட்சி மேயருமான ஜெகனின் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்பு உள்ளிட்டவைகளும் கீதாஜீவனுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., த.மா.கா., ஐ.ஜே.கே., புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அ.தி.மு.க சார்பில் இத்தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களிடம் நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது.
முந்தைய தேர்தலில், தி.மு.க வேட்பாளரான கீதா ஜீவனுக்கு எதிராக இத்தொகுதியில் அ.தி.மு.கவின் கூட்டணிக்கட்சியான த.மா.கா சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட தலைவரான எஸ்.டி.ஆர் விஜயசீலன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை தி.மு.க.,.வுக்கு எதிராக அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
தி.மு.கவுக்கு எதிராக அ.தி.மு.கவில் வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

ஆனால், இவருக்கு தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் ஆதரவாளர்கள் சவாலாகவே உள்ளனர். இந்த சவாலை அவரால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.ஆர். ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் மற்றும் கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிவசாமி வேலுமணி உள்ளிட்டோரும் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகின்றனர்.
இவர்களில், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், சுதாகர், பிரபு, ஆண்ட்ரூமணி, சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செல்லப்பாண்டியனுக்கு சீட் கொடுத்தால் சண்முகநாதனின் ஆதரவாளர்கள், வெற்றிக்காக எந்த அளவிற்கு களப்பணி ஆற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் முயன்று வருகிறார்.

அதே நேரத்தில் செல்லப்பாண்டியன் ஆதரவாளர்களும் வெற்றிக்காக களப்பணி ஆற்றுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், வேட்பாளரை தேர்வு செய்வதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் கடந்த முறை போல கூட்டணிக்கட்சிகளான பா.ஜ.க அல்லது த.மா.காவிற்கு ஒதுக்கிவிடலாமா எனவும் யோசிக்கிறார்களாம். அதிமுக கூட்டணியில் நிலவும் இந்த குழப்பங்களில், திமுக நிர்வாகிகள் தொகுதியில் ஜாலியாக வலம் வருகிறார்களாம்.!

















