Vowels: "1980-களில் சினிமாவில் நடிப்பது கஷ்டம்; சான்ஸ் கிடைக்காது, ஆனால் இன்று.!...
`தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்கவில்லை' - குமுறும் அரசுப்பள்ளி மாணவர்கள்; கவனிக்குமா அரசு?
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பல்வேறு திறனறித் தேர்வுகளை நடத்துகின்றன. அவற்றில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன.
8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு 'தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி உதவித்தொகைத் தேர்வு' (National Means-cum-Merit Scholarship Scheme - NMMS) என்ற தேர்வை நடத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ₹3,50,000 வரை உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாதந்தோறும் ₹1,000 (ஆண்டுக்கு ₹12,000) உதவித்தொகை வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஊரகப்பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு, 'ஊரகத் திறனாய்வுத் தேர்வு' (Tamil Nadu Rural Students Talent Search Examination - TRUST Exam) என்ற தேர்வை நடத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ₹1,50,000-க்கு கீழ் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ம் வகுப்பு வரைக்கும் ஆண்டுக்கு ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இவை தவிர, 10ம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு 'தேசிய திறனறித் தேர்வு' (National Talent Search Examination - NTSE) ஒன்றை நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 11, 12ஆம் வகுப்பில் மாதம் ₹1,250; பட்டப்படிப்பில் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை PhD வரை தொடரும் என்பது முக்கியமானது. இந்தத் தேர்வுகள் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போதைய அரசு பொறுப்பேற்றதும், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு (Tamil Language Literary Aptitude Test - TTSE) என்ற பெயரில் ஒரு தேர்வை அறிமுகம் செய்தது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளி மாணவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். அரசுப்பள்ளியில் இருந்து 750 பேர், தனியார் பள்ளிகளில் இருந்து 750 என இந்தத் தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ₹1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த அரசு அறிமுகம் செய்த மற்றுமொரு தேர்வு, தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (Tamil Nadu Chief Minister's Talent Search Examination - TNCMTSE). இந்தத் தேர்வை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். 500 மாணவர்கள், 500 மாணவிகள் என 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகைகள் மாணவர்கள் பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது உண்மை. சில பள்ளிகள் மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் மாணவர்களை இந்தத் தேர்வுக்குத் தயார்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை சரிவர சென்று சேர்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மேலும் மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளுக்கே இந்தத் தேர்வு குறித்து தெளிவு இல்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள்.

"தமிழக அரசு நடத்தும் தமிழ்த் திறனறித் தேர்வு தொடர்ந்து நான்காண்டுகளாக நடந்துகொண்டு இருக்கிறது. 11ம் வகுப்பு படித்தபோது என் மகள் அதில் தேர்ச்சி பெற்றார். ஓராண்டுக்கு உதவித்தொகை வந்தது. அடுத்த ஆண்டுக்கு வரவில்லை. சில மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் கொடுத்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரவில்லை. அதேபோல் முதலமைச்சர் திறனறித் தேர்விலும் தேர்ச்சி பெற்ற பல மாணவர்களுக்கு உதவித்தொகை வந்து சேரவில்லை. ஆர்வத்தோடு தேர்வை எழுதும் மாணவர்கள் உதவித்தொகை கிடைக்காததால் சோர்ந்து விடுகிறார்கள். அவர்களின் ஆர்வம் குறைந்து விடுகிறது. அது அவர்களின் கல்வியைப் பாதிக்கிறது.
இந்தத் தேர்வுகளில் பள்ளி ஆசிரியர்க்கும் சரி, மாவட்ட அளவில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சரி தெளிவே இல்லை. நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. 9ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் தமிழக அரசின் ஊரகத் திறனாய்வுத் தேர்வு பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. ஊரகத் திறனறித் தேர்வு என்பதால் இந்தத்தேர்வை நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வை எழுதமுடியாது என்று அரசாணையில் தெளிவாகத் தந்திருக்கிறார்கள். பேராவூரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பேரூராட்சி பகுதியில் வருகிறது.
அந்தப்பள்ளியில் தொடர்ந்து தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சில சமயங்களில் உதவித்தொகை வருகிறது, சில சமயம் வருவதில்லை. என் மகளுக்கு ஆரம்பத்தில் வரவில்லை. நான் கல்வி அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, 'உங்கள் மகள் பெயர் பணம் பெறுவோர் பட்டியலில் இருக்கிறதே' என்றார்கள். நான் அதிர்ச்சியடைந்து 'பணம் வரவில்லை' என்றபோது, 'உங்கள் பள்ளி நகரப்புறத்தில் வருகிறது, இந்தத் தேர்வை அங்கு படிக்கும் மாணவர்கள் எழுத முடியாது' என்றார்கள். அரசாணை எல்லாம் காண்பித்து பேசிய பிறகு, சமீபத்தில் மூன்றாண்டுகளுக்குமான உதவித்தொகையை வழங்கினார்கள்.
தமிழ்த்திறனறித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹1500 வீதம் 11ம் வகுப்பிலும் 12ம் வகுப்பிலும் ஆண்டுக்கு ₹18,000 வீதம் தரவேண்டும். அப்படித்தான் அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ₹16,500 மட்டுமே தருகிறார்கள். அதுவும் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று சேரவில்லை. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய திறனறித் தேர்வையும் (National Talent Search Examination - NTSE) சரிவர நடத்துவதில்லை..." என்கிறார் பேராவூரணியைச் சேர்ந்த கல்விச் செயற்பாட்டாளர் பழனிவேல்.
திருமுல்லைவாயிலைச் சேர்ந்த கதிரவனும் இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
"எனது மகன், 2023-ல் அம்பத்தூரில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தபோது, மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் தகுதித் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறுவதற்கான தகுதியையும் அடைந்தார். ஆனால் இப்போதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'ஆதார், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட மாணவர்களின் விவரங்களை உரிய காலத்துக்குள் பள்ளிக் கல்வித்துறையிடம் பள்ளி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை' என்கிறார்கள்.
ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற்ற சில தினங்களிலேயே அந்த ஆவணங்களை பள்ளியில் ஒப்படைத்து விட்டோம். பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'ஆவணங்களை இணையத்தில் ஏற்றமுடியவில்லை' என்றார்கள். கல்வித்துறை அதிகாரிகளோ, 'இணையத்தில் ஏற்ற முடியாவிட்டால் அஞ்சலில் அனுப்பியிருக்கலாமே' என்கிறார்கள். நான் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் அலைந்து அலுத்துவிட்டேன்.
இதுமாதிரியான தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெறும்போது மாணவர்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால் தேர்ச்சி பெற்றும் உதவித்தொகை கிடைக்காதபோது எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
இது தொடர்பான நான் சி.எம் செல் வரைக்குமே புகார் அனுப்பிவிட்டேன். கடைசியில், 'பெற்றோர் உரிய ஆவணங்களை உரிய காலக்கட்டத்துக்குள் வழங்காததால் உதவித்தொகையைப் பெற்று வழங்கமுடியவில்லை' என்று சொல்லி முடித்துவிட்டார்கள். இவர்கள் சொல்வதுபடி பார்த்தால் 'என் மகன் உதவித்தொகை பெற முடியாமல் போனதற்குக் காரணம் எனது மகன் தான்'. அதிகாரிகள் மட்டத்திலும் ஆசிரியர்கள் மட்டத்திலும் இருக்கும் இதுமாதிரியான அலட்சியங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் மாணவர்களை உற்சாகப்படுத்த கொண்டு வந்த இந்தத் திட்டங்களே மாணவர்களைச் சோர்வடைய வைத்துவிடும்" என்கிறார் கதிரவன்.

புதிது புதிதாக திட்டங்களை அறிவிப்பதோடு அரசுக்கு கடமை முடிந்து விடுவதில்லை. அதிகாரிகள் அதை சரிவர பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். தவறிழைக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மீது கவனம் குவிந்து வருகிற இந்தச்சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரடியாக கவனம் காட்ட வேண்டிய விவகாரம் இது.!














