Ramadoss ஆல் Sasikala Upset? | சர்ச்சையை கிளப்பிய EPS | Vijay -ஐ விமர்சிக்கும் B...
தேர்தல் & போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற `27' நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கு அனுகூலம் குறைவு, ரிஷபம்-மிதுனம்-கடகம் ராசிகளுக்கு அனுகூலம், சிம்மம் - கன்னி நல்ல நிலை, துலாம்-மகரம் மிகச் சிறந்த நிலை, விருச்சிகம் நல்ல பலன், தனுசு உதவிகரமான நிலை, கும்பம் பலம் குறைவு, மீனம் அனுகூலம் என கிரக பலன் செயல்படுகிறது.

இதன் அடிப்படையில் போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்தல்கள், நீதிமன்ற வழக்குகள், கல்வித் தேர்வுகள் போன்றவற்றில் பலன்களில் மாற்றங்கள் காணப்படலாம். இவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றிபெற ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பரிகார வழிபாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதன்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதனுடன் தொடர்புடைய ராசியை அடிப்படையாகக் கொண்டு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன.

அசுவினி
மேஷ ராசியில் இருப்பதால் இக்காலத்தில் அனுகூலம் குறைவாக காணப்படும். தேர்தல், போட்டித்தேர்வு, வழக்குகள் போன்றவற்றில் தாமதமும் மீண்டும் மீண்டும் சோதனைகளும் ஏற்படும். மனஅழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் பொறுமையுடன் நடந்துகொள்வது முக்கியம். அரசியலில் வெற்றி பெற தன்னம்பிக்கை மற்றும் கட்டுப்பாடு அவசியம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்தால் தடைகள் குறையும். ராமாயண பாராயணம் மனவலிமையை உயர்த்தும். பொதுமக்களிடம் நேர்மையும் பணிவும் காட்ட வேண்டும். தானதர்மங்களில் ஈடுபட வேண்டும். இந்த பரிகாரங்கள் அனைத்தும் இணைந்து செயல்பட்டால் தடைகள் நீங்கி தேர்தலில் வெற்றி பெறும் நிலை உருவாகும்.
பரிகாரம் : முதன்மையாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும்; இது அனைத்து விதமான விரோதங்களையும் நீக்கி வெற்றிக்கான பாதையை திறக்கும். தினமும் 'ஓம் கம் கணபதயே நம:' எனக் குறைந்தது 108 முறை ஜபிக்க வேண்டும். ராமாயணம், குறிப்பாக சுந்தர காண்டம் பாராயணம் மன உறுதியையும் தீர்மான சக்தியையும் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்வது துணிச்சலை தரும். சிவன் ஆலயம் தரிசனம் செய்து 'ஓம் நமசிவாய' என ஜபம் செய்ய வேண்டும். சிவப்பு நிற ஆடைகள் அணிவது ஆற்றலை அதிகரிக்கும். ஜனவஷ்ய ஹோமமும் பயன் தரும்.
பரணி
மேஷ ராசி தாக்கம் காரணமாக ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் முயற்சியால் முன்னேற்றம் பெறலாம். தேர்தல் மற்றும் போட்டிகளில் மெதுவாக ஆதரவு அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவு கிடைப்பது வெற்றிக்குத் துணைபுரியும். ஆன்மிக நம்பிக்கை பலன் தரும். நல்ல பழக்கங்கள், பொதுமக்களுக்கு உதவி செய்வது ஆகியன நல்ல பெயரைத் தரும். நேர்மையான செயல்பாடு முக்கியம்.
பரிகாரம் : தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய வழிபாடு மேற்கொள்வது ஆதரவை அதிகரிக்கும். பரிகாரமாக கணபதி ஹோமம் செய்து அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். மேலும் மகாலட்சுமி அருள் பெற லட்சுமி பூஜை செய்ய வேண்டும். வேதபாடசாலை மற்றும் வேதபண்டிதர்களுக்கு தானம் செய்வது அரசியல் செல்வாக்கை உயர்த்தும். இந்த பரிகாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றி மற்றும் ஐஸ்வர்யம் கிடைக்கும். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது மன அமைதியையும் மக்கள் ஆதரவும் தரும். ஏழைகளுக்கு உணவு வழங்குவது வாக்காளர்களின் மனதை வெல்ல உதவும். எருமை தானம் பலம் தரும்.
கார்த்திகை
மேஷம் - ரிஷபம் கலப்புப் பலன் காரணமாக ஆரம்பத்தில் சிரமம் இருந்தாலும் பின்னர் முன்னேற்றம் ஏற்படும். தேர்தலில் வெற்றி பெற முயற்சி மற்றும் பொறுமை அவசியம். தொழிலிலும் அரசியலிலும் மெதுவான வளர்ச்சி இருக்கும். உடல்நலம் கவனிக்க வேண்டும். மன உறுதி மிக முக்கியம். சிவ வழிபாடு மிகுந்த பலன் தரும். விரதம் கடைப்பிடிப்பது மன கட்டுப்பாட்டை வளர்க்கும். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். இந்த நட்சத்திரம் முருகப்பெருமான் ஆட்சி உடையதால் தைரியம் மற்றும் வெற்றிக்கான உறுதி இயல்பாகவே இருக்கும். தேர்தலில் வெற்றி பெற, கோபம் மற்றும் அவசர முடிவுகளை தவிர்த்து, திட்டமிட்ட செயல்பாடு அவசியம்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகள் நீக்க வேண்டும். தினமும் சூர்ய பகவானுக்கு அர்க்யம் அளித்து சூரிய நமஸ்காரம் செய்வது புகழையும் ஆதரவையும் உயர்த்தும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாடு செய்து வேல் அர்ச்சனை செய்வது எதிரிகளை சமாளிக்கும் சக்தியை தரும். அத்துடன், சிவாலய தரிசனம் செய்து சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும். ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது மக்கள் ஆதரவை ஈர்க்கும். தினமும் 'ஓம் நமசிவாய' ஜபம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் மற்றும் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் ஆற்றலை அதிகரிக்கும். ருத்ர அபிஷேகம் பலம் தரும்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் இருப்பதால் மிகுந்த அனுகூலம் கிடைக்கும். தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். மக்களிடையே ஈர்ப்பு சக்தி அதிகரிக்கும். நிதி வரவு உயரும். குடும்ப அமைதி நிலவும். தொழிலிலும் வளர்ச்சி ஏற்படும். பொதுமக்களிடம் இனிமையான நடத்தை அவசியம். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். இந்த நட்சத்திரம் சந்திர ஆட்சி உடையதால் பொதுமக்களின் ஆதரவைப் பெறும் சக்தி அதிகமாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெற இந்த இயல்பை நல்ல வழியில் பயன்படுத்தி, மென்மையான பேச்சு மற்றும் நம்பிக்கையை உருவாக்குவது முக்கியம்.
பரிகாரம் : திங்கட்கிழமைகளில் சந்திரபகவானுக்கு பால் அபிஷேகம் செய்து மன அமைதியைப் பெற வேண்டும். கிருஷ்ணர் அல்லது பெருமாளை வழிபாடு செய்வது மக்களின் ஆதரவை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை செய்வது நல்லது. ஏழைகளுக்கு உணவு மற்றும் உடை தானம் செய்வது வாக்காளர்களின் மனதை வெல்ல உதவும். சந்திர பூஜை மன அமைதியை தரும். திங்கட்கிழமை விரதம் நல்லது. துர்கை அம்மன் தரிசனம் பாதுகாப்பை தரும். ஜெய துர்கா ஹோமம் பலனளிக்கும்.
மிருகசீரிடம்
நல்ல முன்னேற்றம் காணப்படும். தேர்தல் மற்றும் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். புதிய வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலை மேம்படும். துணிச்சல் அதிகரிக்கும். சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படலாம். அதனை சமாளிக்க தியானம் உதவும்.
பரிகாரம் : சைக்கிள், கறுப்புத் துணி மற்றும் எருமை தானம் செய்வது புண்ணியம் தரும். சுப்ரமண்ய வழிபாடு வெற்றியை அதிகரிக்கும். பொதுமக்களுடன் இணக்கம் பேண வேண்டும். நல்ல ஆலோசனைகளை ஏற்க வேண்டும். இந்த பரிகாரங்கள் மூலம் தேர்தலில் வெற்றி பெறலாம். கணபதி ஹோமம் செய்து தடைகள் நீக்க வேண்டும். முருக பெருமானுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வேல் அர்ச்சனை செய்வது தைரியத்தையும் வெற்றியையும் தரும். ருத்ர அபிஷேகம் செய்து ருத்ரம் ஜபம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும். தினசரி தியானம் மற்றும் நன்னடத்தை கடைபிடிப்பது மக்களின் ஆதரவை ஈர்க்கும். எள்ளுச்சாதம் தானம் செய்வது நன்று.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தினர் ஆழமான சிந்தனை, மாற்றத்தை உருவாக்கும் திறன் மற்றும் வலுவான மனப்பக்குவம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் ராகு மற்றும் சிவ சக்தியுடன் தொடர்புடையதால், வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படலாம். தேர்தலில் வெற்றி பெற மனஅமைதி, கட்டுப்பாடு மற்றும் தெளிவான திட்டம் மிகவும் அவசியம். திடீர் முடிவுகளை தவிர்த்து, மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து ஆரம்பத் தடைகளை நீக்க வேண்டும். ருத்ராபிஷேகம் செய்து, 'ஓம் நம சிவாய' மந்திரத்தை ஜபிப்பது எதிர்மறை சக்திகளை குறைக்கும். ராகு தொடர்பான துஷ்ட பலன்களை நீக்க நாக பூஜை மற்றும் ராகு சாந்தி செய்ய வேண்டும். மேலும் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது மக்களின் ஆதரவை அதிகரிக்கும். அதி ருத்ரம் வெற்றியை தரும்.
புனர்பூசம்
இந்த நட்சத்திரம் பிரகஸ்பதியின் ஆட்சியில் இருப்பதால் நல்ல ஆலோசனை மற்றும் உயர்ந்த சிந்தனை இவர்களுக்கு இயல்பாக அமையும். தேர்தலில் வெற்றி பெற, இந்த நல்ல குணங்களை பயன்படுத்தி மக்கள் சேவையில் ஈடுபடுவது மிக முக்கியம். நேர்மை மற்றும் பொறுமை இவர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் பெருமாளுக்கு வழிபாடு செய்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது மக்கள் ஆதரவை அதிகரிக்கும். மேலும் குரு பகவானுக்கு கடலை பருப்பு, மஞ்சள் போன்றவற்றை தானமாக வழங்குவது கிருபையை அதிகரிக்கும். பெருமாளுக்கு துளசி மாலை சமர்ப்பித்து, ஏழைகளுக்கு உணவு வழங்குவது தர்ம பலனை உயர்த்தும். தினசரி தியானம் மற்றும் நல்ல சிந்தனை வாழ்க்கையை நிலைநிறுத்தும். ராமாயண பாராயணம் செய்ய வைப்பது நல்லது.
பூசம்
பூசம் நட்சத்திரத்தினர் ஒழுக்கம், பொறுப்பு உணர்வு மற்றும் மக்களிடம் நம்பிக்கை பெறும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் குரு ஆட்சியில் இருப்பதால் தர்மம், நெறி மற்றும் உயர்ந்த சிந்தனை இவர்களின் பலமாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெற இவர்களின் அமைதியான அணுகுமுறை மற்றும் சேவை மனப்பான்மை பெரிய ஆதரவாக அமையும். மக்கள் நலப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது வெற்றியை உறுதி செய்யும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து ஆரம்பத் தடைகளை நீக்க வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சனி தோஷங்களை குறைக்கும். மேலும் தூர்கையம்மன் வழிபாடு செய்து தைரியத்தையும் பாதுகாப்பையும் பெறலாம். ஆலமரம் சுற்றுவது மற்றும் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது தர்ம பலனை அதிகரிக்கும். தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் மன அமைதியையும் மக்கள் ஆதரவையும் தரும். சுதர்ஷன ஹோமம் செய்வது சிறப்புப் பலன்களைத் தரும்.
ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தினர் புதன் தொடர்புடையவர்கள் ஆதலால் பேச்சுத் திறன் மற்றும் மனதைக் கவரும் ஆற்றல் அதிகமாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெற இந்தத் திறன்களை நேர்மையாகப் பயன்படுத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெறுவது மிகவும் அவசியம்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். புதன்கிழமைகளில் புத வழிபாடு செய்து விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது அறிவையும் ஆதரவையும் அதிகரிக்கும். நாக தோஷ நிவாரணத்திற்காக நாக தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் செய்து நாக பூஜை செய்வது மிகச் சிறந்தது. மேலும் பெருமாளுக்கு துளசி சமர்ப்பித்து, ஏழைகளுக்கு உணவு மற்றும் உடை தானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும். முருகப்பெருமானுக்குப் பாலபிஷேகம் செய்யவிக்க ஆயில்யம் நட்சத்திரத்தினருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு.

மகம்
மகம் நட்சத்திரத்தினர் தலைமைத் தன்மை, கௌரவம் மற்றும் அதிகாரத்தை அடையும் திறன் கொண்டவர்கள். இந்த நட்சத்திரம் பித்ரு தேவதா மற்றும் சூரிய சக்தியுடன் தொடர்புடையதால், மரபு ஆதரவும் மக்கள் மரியாதையும் இவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கும். தேர்தலில் வெற்றி பெறத் தன்னம்பிக்கை, தர்மநிலை மற்றும் பொதுநல சேவை மிகவும் முக்கியம்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்கு அர்க்யம் அளித்து சூரிய நமஸ்காரம் செய்வது புகழையும் அதிகாரத்தையும் உயர்த்தும். பித்ரு தர்ப்பணம் செய்து பித்ருக்களை திருப்தி பெறச் செய்வது வாழ்க்கையில் நிலைத்த வெற்றியை தரும். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது மக்களின் மனதை வெல்ல உதவும். ஐயப்பசாமி வழிபாடு செய்து விரதம் மேற்கொள்வது தைரியத்தையும் வெற்றியையும் அதிகரிக்கும். சனி சாந்தி செய்ய வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும்.
பூரம்
தேர்தல் முயற்சிகளில் ஆதரவு உயரும். போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. நிதி வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். லட்சுமி பூஜை நல்ல பலன் தரும். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மன அமைதி தேவை. இந்த நட்சத்திரம் சுக்ர ஆட்சி உடையதால், செல்வாக்கு மற்றும் மகிழ்ச்சியான அணுகுமுறை இவர்களின் பலமாகும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து ஆரம்பத் தடைகளை நீக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்து தீபம் ஏற்றுவது நிதி வளத்தையும் ஆதரவையும் அதிகரிக்கும். மேலும் சுக்ரக் கிருபை பெற வெள்ளை உடைகள், அன்னதானம் போன்ற தானங்கள் செய்வது நல்ல பலனை தரும். ஏழைகளுக்கு உதவி செய்து, திருமணத்திற்கு உதவி செய்வது போன்ற தர்ம செயல்கள் மக்களின் மனதை வெல்ல உதவும். தினசரி விஷ்ணு அல்லது கிருஷ்ண வழிபாடு மன அமைதியையும் நல்ல பெயரையும் தரும். சுக்ர சாந்தி செய்ய வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு.
உத்திரம்
தேர்தல் மற்றும் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். நிதி நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தன்னம்பிக்கை உயரும். சூரிய பூஜை செய்ய வேண்டும். தானம் மற்றும் தர்மம் செய்ய வேண்டும். பொதுமக்களுடன் நல்ல உறவு பேண வேண்டும். மன உறுதி முக்கியம். இந்த நட்சத்திரம் சூரிய ஆட்சி உடையதால், அதிகாரம், கௌரவம் மற்றும் மக்களின் நம்பிக்கை இவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். தினமும் சூரிய பகவானுக்கு அர்க்யம் அளித்து சூரிய நமஸ்காரம் செய்வது அதிகாரமும் புகழும் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவன் ஆலயத்திற்கு சென்று சிவன் வழிபாடு செய்வது மன உறுதியை அதிகரிக்கும். மேலும் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும். வேதபண்டிதர்களுக்கு உதவி செய்வது நல்ல பெயரையும் ஆதரவையும் தரும். தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் மன அமைதியையும் மக்கள் ஆதரவும் தரும். பானேஷி ஹோமம் என்னும் ஹோமத்தைச் செய்ய் ஆக்ஷர்ண சக்தி அதிகரித்து வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
ஹஸ்தம்
கல்வி, வேலை மற்றும் அரசியல் முன்னேற்றம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி சாத்தியம். சிறிய தடைகள் இருந்தாலும் கடந்து செல்லலாம். திருப்பதி தரிசனம் மிக முக்கியம். சுந்தர காண்ட பாராயணம் செய்ய வேண்டும். தியானம் மன அமைதியைத் தரும். தானம் செய்ய வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். இந்த நட்சத்திரம் சந்திர ஆட்சி உடையதால், மனஅமைதி மற்றும் மக்கள் தொடர்பு இவர்களின் பலமாக இருக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகளை நீக்க வேண்டும். திருப்பதி தரிசனம் செய்து, சுந்தர காண்ட பாராயணம் செய்வது வெற்றியை விரைவாகத் தரும். திங்கட்கிழமைகளில் சந்திர வழிபாடு செய்து மன அமைதியைப் பேண வேண்டும். மேலும் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது மக்களின் மனதை வெல்ல உதவும். ஹஸ்தம் நட்சத்திரத்தினருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்க ஹாரித்ர கணபதி ஹோமம் செய்யவது பலன் தரும்.
சித்திரை
தேர்தல் மற்றும் போட்டிகளில் பெரிய வெற்றி கிடைக்கும். நிதி வரவு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கை உயரும். வேதபிராமணர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தானம் அதிகமாக செய்ய வேண்டும். பெரியோரின் ஆசீர்வாதம் பெற வேண்டும். நேர்மையான செயல்பாடு முக்கியம். இந்த நட்சத்திரம் விஸ்வகர்மா மற்றும் செவ்வாய் சக்தியுடன் தொடர்புடையதால், செயல் வேகம் மற்றும் வெற்றி அடையும் உறுதி இவர்களுக்கு இயல்பாக இருக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகள் நீக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாயின் கிருபையைப் பெற முருகப் பெருமானை வழிபாடு செய்து வேல் அர்ச்சனை செய்ய எதிரிகளை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். மேலும் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும். அத்துடன் ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது மக்களின் ஆதரவை ஈர்க்கும். வேதபிராமணர்களுக்கு தானம் செய்வது நல்ல பெயரையும் ஆதரவையும் தரும்.
சுவாதி
தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி உறுதி. சமூக ஆதரவு அதிகரிக்கும். நிதி வரவு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெரிய அளவில் தானம் செய்ய வேண்டும். வேதபிராமணர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பொதுமக்களுடன் இணக்கம் அவசியம். தன்னம்பிக்கை உயர வேண்டும். இந்த நட்சத்திரம் வாயுபகவான் ஆட்சிக்கு உட்பட்டது என்பதால் இயக்கம், பரவல் மற்றும் பொதுமக்கள் ஆதரவைப் பெறும் சக்தி அதிகமாக இருக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம் லட்சார்ச்சனை செய்வது மக்கள் ஆதரவை பெரிதும் அதிகரிக்கும். மேலும் வாயுபகவான் கிருபையைப் பெற ஹனுமான் வழிபாடு செய்வது துணிச்சலையும் வெற்றியையும் தரும். மேலும் ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் கல்வி உதவி வழங்குவது மக்களின் மனதை வெல்ல உதவும். தர்மச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது நல்ல பெயரையும் ஆதரவையும் தரும். அசாத்திய சாதக ஹனுமான் ஹோமம் மிகுந்த பலன் தரும்.
விசாகம்
தற்போது தேர்தல், போட்டித் தேர்வுகள், கல்வி மற்றும் வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மேம்படும். புதிய அரசியல் வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கை மற்றும் பேச்சுத் திறன் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும். சில நேரங்களில் மனஅழுத்தம் ஏற்படலாம்; அதனை சமாளிக்க ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும்.
பரிகாரம் : விஷ்ணு சஹஸ்ரநாம லட்சார்ச்சனை வீட்டிலோ அல்லது வேதபாடசாலையிலோ நடத்துவது மிகவும் பலனளிக்கும். துளசி மாலை சமர்ப்பிப்பது நல்லது. இந்த நட்சத்திரம் இந்திரன் மற்றும் அக்னி சக்தியுடன் தொடர்புடையதால், ஆற்றல் மற்றும் சாதனை மனப்பான்மை அதிகமாக இருக்கும். கணபதி ஹோமம் செய்து தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். மேலும் ஹோமங்கள் செய்வது செயல்களில் வெற்றியை உறுதி செய்யும். ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது மன உறுதியை அதிகரிக்கும். வெற்றிவாய்ப்புகள் கூடும்.
அனுஷம்
விருச்சிக ராசியில் அமைந்துள்ளதால் நல்ல பலன் கிடைக்கும் காலம். தேர்தல், போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வித் துறையில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும். குடும்ப ஆதரவு மிக முக்கிய பங்கு வகிக்கும். மன அமைதி மற்றும் தீர்மானம் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும். தினசரி விஷ்ணு சஹஸ்ரநாம ஜபிக்க வேண்டும். தான தர்மங்களில் ஈடுபடுவது புண்ணியத்தை அதிகரிக்கும். இந்த நட்சத்திரம் மித்ர ஆட்சி உடையதால், மக்களிடையே நல்ல உறவு மற்றும் நம்பிக்கை உருவாகும் சக்தி அதிகமாக இருக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் செய்வது மன அமைதியைக்கொடுப்பதோடு மக்கள் ஆதரவையும் தரும். மேலும் சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்து சனி தோஷங்களைக் குறைப்பது முக்கியம். அத்துடன் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும். வெற்றியும் சமீபமாகும்.
கேட்டை
விருச்சிக ராசி ஆதரவு காரணமாக இக்காலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேர்தல் முயற்சிகளில் மக்கள் ஆதரவு கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். நிதி வளர்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆனால் சில நேரங்களில் மனஅழுத்தம் மற்றும் குழப்பம் ஏற்படலாம். அதனை சமாளிக்க தியானம் அவசியம். விஷ்ணு பூஜை மற்றும் ஜபம் செய்ய வேண்டும். தானம் செய்வது நல்ல பலன் தரும். இந்த நட்சத்திரம் இந்திரன் ஆட்சிக்கு உட்பட்டது என்பதால் அதிகாரம் மற்றும் முன்னிலை பெறும் சக்தி இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
பரிகாரம் : சர்வ சித்தி கணபதி ஹோமம் செய்து தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாம லட்சார்ச்சனை செய்வது மன அமைதியையும் மக்கள் ஆதரவையும் அதிகரிக்கும். மேலும் இந்திர கிருபை பெற யாகங்கள் மற்றும் வேத பாராயணம் செய்வது வெற்றியை உறுதி செய்யும். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது மக்களின் மனதை வெல்ல உதவும். வேதபிராமணர்களுக்கு தானம் செய்வது நல்ல பெயரையும் ஆதரவையும் தரும். வெற்றிக்கான கதவுகள் திறக்கும்.
மூலம்
தனுசு ராசியின் உதவி காரணமாக இக்காலத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தேர்தல் மற்றும் அரசியல் செயல்பாடுகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் சில தடைகள் இருந்தாலும் அவை கடந்து செல்லக் கூடியவை. போட்டித் தேர்வுகளில் முன்னேற்றம் காணப்படும். நிதி நிலை சீராக இருக்கும். தன்னம்பிக்கை முக்கியம். சனி பூஜை செய்ய வேண்டும். சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது நல்லது. தான தர்மங்களில் ஈடுபடுவது வெற்றியை உறுதி செய்யும். இந்த நட்சத்திரம் நிருதி தேவதையுடன் தொடர்புடையதால், ஆரம்பத்தில் சிரமங்கள் இருந்தாலும் பின்னர் பெரிய வெற்றி கிடைக்கும் தன்மை உள்ளது.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது கிரகதோஷங்களைக் குறைக்கும். மேலும் ஹனுமான் வழிபாடு செய்து ஹனுமான் சாலிசா ஜபிப்பது தைரியத்தையும் வெற்றியையும் அதிகரிக்கும். மேலும் ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும். சனி தொடர்பான பரிகாரங்கள் மற்றும் விரதங்களைக் கடைப்பிடிப்பது வாழ்க்கையில் நிலைத்த வெற்றியைத் தரும். தியானம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மன உறுதியை அதிகரிக்கும். இவ்வாறு ஆன்மிகப் பரிகாரங்களையும் சமூக சேவையையும் இணைத்தால், மூலம் நட்சத்திரத்தினருக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாகும்.
பூராடம்
தனுசு ராசியின் ஆதரவு காரணமாக நல்ல பலன் கிடைக்கும். தேர்தல் முயற்சிகளில் ஆதரவு அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் முன்னேற்றம் காணப்படும். நிதி வளர்ச்சி ஏற்படும். குடும்ப ஆதரவு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். ஆன்மிக நம்பிக்கை அதிகரிக்கும். சனி பூஜை செய்ய வேண்டும். தானம் செய்வது புண்ணியத்தை அதிகரிக்கும். இந்த நட்சத்திரம் அபா சக்தியுடன் தொடர்புடையதால், சுத்தமான சிந்தனை மற்றும் கூர்மையான ஆற்றல் இவர்களிடம் அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் தாமதங்கள் இருந்தாலும் வெற்றி பெறும் சக்தி இவர்களிடம் உள்ளது.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். சனிக்கிழமைகளில் சனி வழிபாடு செய்து சனி தோஷங்களைக் குறைப்பது முக்கியம். மேலும் பெருமாள் வழிபாடு செய்து விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது மன அமைதியையும் மக்கள் ஆதரவையும் அதிகரிக்கும். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும். நீர் தானம் செய்வது மிகச்சிறந்த பரிகாரம்.
உத்திராடம்
தனுசு – மகர இணைப்பு காரணமாக மிகச் சிறந்த நிலை உருவாகும். தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றிக்கு வாய்ப்பு உண்டு. நிதி வளர்ச்சி அதிகரிக்கும். பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. குடும்ப ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை உயரும். ஜனவஷ்ய ஹோமம் செய்வது மிகவும் பலனளிக்கும். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நேர்மை மற்றும் ஒழுக்கம் முக்கியம். இந்த பரிகாரங்கள் மிகப்பெரிய வெற்றியைத் தரும். இந்த நட்சத்திரம் விஸ்வே தேவதாவுடன் தொடர்புடையதால், பல தரப்பு மக்களின் ஆதரவு இவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய வழிபாடு மேற்கொள்வது புகழையும் அதிகாரத்தையும் உயர்த்தும். சனிக்கிழமைகளில் சனி வழிபாடு செய்வது கிரக தோஷங்களைக் குறைக்கும். மேலும் ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வது மக்களின் மனதை வெல்ல உதவும். வெற்றிக்கு அருகில் உங்களைக் கூட்டிச் செல்லும்.

திருவோணம்
மகரராசியில் இருப்பதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மிகுந்த அனுகூலம் கிடைக்கும். தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு உண்டு. சமூக அந்தஸ்து உயரும். நிதி வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொதுமக்களிடம் கனிவான பேச்சு மற்றும் அன்பு காட்டுவது வெற்றியை உறுதி செய்யும். பெருமாள் வழிபாடு மிகுந்த பலன் தரும். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகளை நீக்க வேண்டும். தினசரி பெருமாள் வழிபாடு செய்து விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிப்பது மக்கள் ஆதரவை வெகுவாக அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வது தோஷங்களைக் குறைக்கும். ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் கல்வி உதவி வழங்குவது புண்ணியத்தை உயர்த்தும். தியானம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மன உறுதியை அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
அவிட்டம்
மகரம் - கும்ப ராசி இணைப்பு காரணமாக இந்த நட்சத்திரக் காரர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். தேர்தலில் வெற்றி பெற அதிக முயற்சி தேவை. போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும். உடல்நலம் கவனிக்க வேண்டும். மன உறுதி மற்றும் துணிச்சல் வெற்றிக்கான அடிப்படை. முருகன் வழிபாடு மிகுந்த பலன் தரும். தானம் அதிகமாகச் செய்ய வேண்டும். பொதுமக்களுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும். இந்த நட்சத்திரம் அஷ்ட வசுக்களுடன் தொடர்புடையதால், செல்வாக்கு மற்றும் வெற்றி இவர்களுக்கு எளிதில் வந்து சேரும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகளை நீக்க வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமான் வழிபாடு செய்து வேல் அர்ச்சனை செய்வது எதிரிகளைச் சமாளிக்கும் சக்தியைத் தரும். சனிக்கிழமைகளில் சனி வழிபாடு செய்வது நல்லது. ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் உடை தானம் செய்வது மக்களின் ஆதரவை ஈர்க்கும்.
சதயம்
கும்ப ராசியில் இருப்பதால் பலம் சற்றே குறைவாகக் காணப்படும். தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் கடும் போட்டி நிலவும். விடாமுயற்சி மற்றும் தெளிவான திட்டம் வெற்றிக்கு அவசியம். நிதி நிலை சீராக இருக்கும். குடும்ப உறவுகளில் கவனம் தேவை. ராகு பூஜை மற்றும் சனி வழிபாடு செய்வது தடைகளைக் குறைக்கும். ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது புண்ணியத்தை உயர்த்தும். தியானம் மன அமைதியைத் தரும். நேர்மையான அரசியல் அணுகுமுறை வெற்றியைத் தரும். இந்த நட்சத்திரம் வருண பகவானுடன் தொடர்புடையதால், இவர்களின் பொறுமை மற்றும் தொலைநோக்குப் பார்வை வெற்றிக்கான பலமாகும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகளை நீக்க வேண்டும். ராகு தோஷ நிவாரணத்திற்காக ராகு சாந்தி மற்றும் நாக வழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவான் வழிபாடு செய்வது கிரக தோஷங்களைக் குறைக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியத்தை உயர்த்தும். வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.
பூரட்டாதி
கும்ப - மீன ராசி இணைப்பு காரணமாக இந்த நட்சத்திரக் காரர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றம் காணப்படும். தேர்தல் முயற்சிகளில் மக்கள் ஆதரவு படிப்படியாக அதிகரிக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வித் துறையில் சாதகமான முன்னேற்றம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். புதிய அரசியல் வாய்ப்புகள் உருவாகும். தன்னம்பிக்கை மற்றும் தர்ம நெறியில் நிற்பது வெற்றியை உறுதி செய்யும். குரு வழிபாடு மிகுந்த பலன் தரும். தான தர்மங்களில் ஈடுபட வேண்டும். இந்த நட்சத்திரம் அஜைகபாதா தேவதையுடன் தொடர்புடையதால், இவர்களின் மன உறுதி மற்றும் தியாக மனப்பான்மை மற்றவர்களைக் கவரும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு செய்து தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பூக்கள் சமர்ப்பிப்பது ஞானத்தையும் ஆதரவையும் அதிகரிக்கும். பெருமாள் வழிபாடு செய்து விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபிப்பது மன அமைதியைத் தரும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது தர்ம பலனை உயர்த்தும்.
உத்திரட்டாதி
மீன ராசியில் இருப்பதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலத்தில் அனுகூலம் காணப்படும். தேர்தல் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். நிதி நிலை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். புதிய அரசியல் வாய்ப்புகள் தேடி வரும். விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது மிகச் சிறந்த பலனைத் தரும். தான தர்மங்களில் ஈடுபடுவது புண்ணியத்தை உயர்த்தும். இந்த நட்சத்திரம் சனி பகவான் மற்றும் சிவசக்தியுடன் தொடர்புடையதால், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இவர்களின் பலமாகும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து ஆரம்பத் தடைகளை நீக்க வேண்டும். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது சனி தோஷங்களைக் குறைக்கும். தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபம் செய்வது மன அமைதியையும் மக்கள் ஆதரவையும் தரும். ஏழைகளுக்கு உணவு, உடை தானம் செய்வது தர்ம பலனை அதிகரிக்கும். இதனால் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
ரேவதி
மீனராசி அனுகூலம் காரணமாக இவர்களுக்கு இக்காலத்தில் மிகச் சிறந்த முன்னேற்றம் காணப்படும். தேர்தல் முயற்சிகளில் மக்கள் ஆதரவு பெருகும். போட்டித் தேர்வுகள் மற்றும் வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். நிதி வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை மற்றும் இனிமையான பேச்சு வெற்றிக்கான திறவுகோல். விஷ்ணு பூஜை மற்றும் ஜபம் செய்வது பலன் தரும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியத்தை அதிகரிக்கும். இந்த நட்சத்திரம் புதன் பகவான் மற்றும் புஷ தேவதையுடன் தொடர்புடையதால், இவர்களின் பேச்சுத் திறன் மற்றும் அறிவுத்திறன் மக்களை எளிதில் கவரும்.
பரிகாரம் : கணபதி ஹோமம் செய்து தடைகளை நீக்க வேண்டும். புதன்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அறிவையும் ஆற்றலையும் அதிகரிக்கும். நீர் நிலை உள்ள இடங்களில் தானம் செய்வதும், ஏழைகளுக்கு அன்னதானம், உடை தானம் செய்வதும் நல்ல பலனைத் தரும். பிரதமலிங்க ராகு ஹோமம் வெற்றி நிச்சயம் தரும். சர்வ காரிய வெற்றிக்காக ஜய துர்கா ஹோமம் பரிந்துரைக்கப்படுகிறது. 12 லட்சம் மந்திர ஜபம் செய்து, 1.2 லட்சம் ஹோமங்கள், 12,000 தர்ப்பணங்க்ள், 1,200 மார்ஜனம், 120 ஏழை அந்தணர்களுக்கு உணவு ஆகியனவும் செய்விக்க வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும்.





















