சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பிய ஈரான்: சீனா - பாகிஸ்தான் கூட்டணி சாதித்த...
தருமபுரி, நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில் : சுயம்புத் திருமேனி; நோய் தீர்க்கும் தலம்!
பெருமாள் நரசிம்மராக அருளும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நெருப்பூர் குகை நரசிம்மர் கோயில். தருமபுரி மாவட்டம், பென்னாகரத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது நெருப்பூர். நரசிம்மர், தவம் புரிந்த இது என்கிறார்கள்.
இரணியனை வதம் செய்த பிறகும் நரசிம்மர் தனது சீற்றம் தணியாமல் இங்குள்ள காட்டில் அலைந்து திரிந்தார். பிறகு கோபம் தணிய நரசிம்மர் இங்குள்ள குகை ஒன்றில் தவத்தில் அமர்ந்து விட்டார் என்கிறார்கள். நெருப்பைப்போன்ற கோபாவேஷத்துடன் சுவாமி இருந்த ஊர் என்பதால் இந்த ஊருக்கு நெருப்பூர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. நெருப்பூரிலிருந்து இடப் பக்கமாகப் பிரியும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது.

நுழைவாயிலின் இருபுறமும் துப்பாக்கியுடன் கம்பீரமாக நிற்கும் காவலாளிகளின் சிலைகள் உள்ளன. சிலைகளுக்கு அருகில் வலப்புறம் விநாயகரும் இடப்புறத்தில் ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டுள்ளனர். விநாயகர் சந்நிதிக்கு முன்னே நூற்றுக்கணக்கில் நாகர் சிலைகள் உள்ளன. வேண்டுதல் நிமித்தம் வைக்கப் பட்ட சிலைகள் அவை என்கிறார் பக்தர் ஒருவர்.
இவற்றை தரிசித்தபடி மேலும் நடந்தால், அழகிய தெப்பக்குளத்தைக் காணலாம். குளம் ததும்ப காட்சி தரும் நீர், குளத்தைத் தாண்டியும் வடிந்தோடுகிறது. வறட்சி மிகுந்த அந்தப் பகுதியில், இப்படி எப்போதும் நீர் நிறைந்திருக்கும் ஒரு குளம் இருப்பது இயற்கையின் அதிசயமே என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
பாறைகளும், அரசமரத்தின் வேர்களும் ஒன்றிணைந்து காணப்படும் இருண்ட குகையே முத்தத்திராயரின் மூலஸ்தானம். இந்தக் குகையில்தான் நரசிம்மர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரையே முத்தத்திராயர், முத்தையன் சாமி என்ற பெயர்களில் வணங்கி வழிபடுகிறார்கள். பஞ்சம் மற்றும் கொடிய மிருகங்களால் இப்பகுதி மக்கள் துன்புற்ற காலத்தில் எல்லோரையும் காக்கும் தெய்வமாக வந்தவராம் இந்த சுவாமி.

சுமார் 20 அடி அகலம்; 6 அடி நீளத்துடன் திகழும் இந்த குகைக்குள் ஒரேநேரத்தில் ஆறுபேர் மட்டுமே சென்று வழிபட முடியும். குகைக்குள் குனிந்தபடியே சென்று பூஜை செய்து வருகிறார் அர்ச்சகர். உள்ளே நீரூற்றும் உள்ளது. அதிலிருந்து பெருகி ஓடும் நீர், ஒரு கால்வாய் மூலம் தெப்பக் குளத்தில் சென்று சேர்கிறது. இந்த நீரைத் தீர்த்தமாக பாவிக்கும் பக்தர்கள், இதில் நீராடுவதாலும் பருகு வதாலும் பிணிகள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
குகையின் மேற்புறச் சுவரில் நிறைய வெளவால் களைக் காணமுடிகிறது. விழா காலங்களில் அதிர் வேட்டுகள் வெடிக்கப்படும்போதும், மேள-தாளங்கள் அதீத ஓசை எழுப்பும்போதும்கூட இந்த வெளவால்கள் குகையைவிட்டு வெளியேறுவது இல்லையாம். அதேநேரம் பக்தர்களுக்கும் தொந்தரவாக இருப்பது இல்லை என்கிறார்கள்.
இவற்றையும் தெய்வ வடிவாகவே பார்க்கிறார்கள் பக்தர்கள். தங்களின் மூதாதையரே இவ்வாறு வெளவால்களின் உருவில் இங்கு வந்து, நரசிம்மரை தியானித்து தவம் இருப்பதாக நம்புகிறார்கள் உள்ளூர் பக்தர்கள். குழந்தைப் பாக்கியம் கிட்டாத தம்பதியர் இங்கு வந்து மனதார வணங்கி வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்.

ஆண்டுதோறும் மார்கழி அமாவாசை தினத்தில் சுவாமி திருவீதியுலா காண்கிறார். அப்போது சுவாமி வரும் பாதையில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தரையில் நெடுஞ் சாண் கிடையாக படுத்துக்கொள்கின்றனர்.
சுவாமியைச் சுமந்து வரும் கோயில் பூசாரி, அவர்களை தாண்டிச்சென்று ஆசி வழங்குகிறார். இதனால் துன்பங்கள், பிரச்னைகள் அனைத்தும் விலகி நன்மைகள் சேரும்; நோய்நொடிகள் நீங்கும்; திருமணம் ஆகாதவர்களுக்குத் தடைகள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதிகம்.
நரசிம்ம பெருமாளை வழிபடுவதே மிகுந்த மன அமைதியைத் தரும். அதுவும் இப்படி இயற்கை சூழல் அழகுறத் திகழும் இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் சுயம்பு நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கை நலமாகும் வளமாகும்.





















