செய்திகள் :

சென்னை பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் கோயில்: நெல்லிக்காய் தீபம் ஏற்றினால் செல்வவளம் சேரும்!

post image

சென்னையில் உள்ள வைணவத்தலங்களில் மிகவும் பழமையானது ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள் திருக்கோயில்.

இந்த ஆலயம் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும், ரிப்பன் மாளிகைக்கும் அருகில் உள்ள `பெரியமேடு' என்ற பகுதியில், தொப்பை தெருவின் முகப்பில் அமைந்துள்ளது. பல்லவர் மற்றும் பாண்டிய மன்னர்கள் திருப்பணி செய்த ஆலயம் இது என்கிறார்கள்.

ஸ்ரீபெரும்புதூருக்கு அடுத்தபடியாக உடையவர் ஸ்ரீராமாநுஜர் இந்தக் கோயிலுக்கு எழுந்தருளி, இங்கே தங்கியிருந்து கைங்கர்யம் செய்ததாக இப்பகுதி அடியவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடையவர் கைங்கர்யம் செய்ததால், `உடையவர் கோயில்' என்று இந்தக் கோயில் அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஒருகாலத்தில், அருள்மிகு பாஷ்யக்காரர் பிரசன்னவேங்கடேசப் பெருமாள் கோயில் எனும் திருப்பெயருடன் திகழ்ந்ததாம் இந்த ஆலயம்.

பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள்
பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள்

இந்தக் கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பில் அருள்மிகு பிரசன்னவேங்கடேசப் பெருமாள் என்ற பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. இதைக் கடந்து உள்ளே சென்றால் தீபஸ்தம்பம், பலிபீடம், சுமார் 40 அடி உயரத்துடன் திகழும் கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கலாம்.

கொடிமரம், மிகுந்த வேலைப்பாட்டுடன் செப்புத் தகடு வேயப்பட்டு, மிகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. அடுத்து மகா மண்டபம். அதன் மேற்புறத்தில் சிறு விமானம் போன்ற அமைப்புகளில் மணவாள மாமுனிகள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீபெருமாள், ஸ்ரீஆண்டாள் மற்றும் உடையவர் ஆகியோரது திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாகத் திகழ்கின்றன.

வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தனிச்சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் ஆஞ்சநேயர். சாந்த சொரூபமாகக் காட்சி தரும் இந்த அனுமன், மிகச்சிறந்த வரப்பிரசாதி. அதேபோல், தனிச் சந்நிதியில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதியை நோக்கி அருள்பாலிக்கிறார் கருடாழ்வார்.

மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலின் வலது புறத்தில் கோதண்டராமர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீராமபிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் அருள்கிறார்.

மூலவர் விக்கிரகம் சுமார் ஏழு அடி உயரத்தில், கிழக்கு நோக்கிய நிலையில், நின்ற திருக்கோலம் காட்டுகிறார் இந்தப் பெருமாள். நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார் இவர். மேல் இரண்டு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ, கீழ் வலக்கரம் திருவடியைக் காட்டி வரமளிக்கும் விதமாகவும், கீழ் இடக்கரம் நம்மை அரவணைக்கும் பாவனையிலும் திகழ்கின்றன. (இத்தலத்தில் இந்த மூலவர் திருமேனி மூன்றாவதாகச் செய்யப்பட்டது என்கிற தகவலும் உண்டு)

ஸ்ரீராமாநுஜர்
ஸ்ரீராமாநுஜர்

பெருமாள் அவ்வளவு அழகு! திருமலை வேங்கடவனைத் தரிசிக்கும்போது உண்டாகும் ஈர்ப்பு இவரைத் தரிசிக்கும்போதும் எழும் என்கிறார்கள் பக்தர்கள்.

கருவறையிலிருந்து வெளியே வரும்போது, வலது மற்றும் இடப்புறத்தில் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். அந்த உற்சவ விக்கிரகங்கள் எல்லாவற்றிலும் தோளின் வலது, இடது புறத்தில் சங்கு மற்றும் சக்கரம் இருப்பதுடன், விக்கிரகங்களின் கீழே அவரவரது திருநாமமும் செதுக்கப்பட்டுள்ளது.

கருவறையை விட்டு வெளியே வருகையில், வலது புறத்தில் தனிச் சந்நிதியில் மூலவர் மற்றும் உற்சவர் அர்ச்சையில் காட்சி தருகிறார், உடையவர் ஸ்ரீராமாநுஜர். உற்சவ விக்கிரகம், உடையவரின் வயதான தோற்றத்தில் அமைந்துள்ளது. முதுகுப்புறத்தில் திகழும் ஆதிசேஷ வடிவம் பிரமிப்பூட்டுகிறது.

இவரின் உற்சவர் அர்ச்சை, பக்தர்கள் அளித்த பொன் முதலான ஐம்பொன்னால் செய்யப்பட்டது என்கிறார்கள். உடையவரின் சாந்தமான திருமுகம் பார்ப்போர் மனதில் நிலைத்திருக்கும்படியாக அமைந்துள்ளது; ஸ்ரீபெரும்புதூரில் உடையவரின் தானுகந்த திருமேனியைத் தரிசிக்கும்போது ஏற்படும் பரவசம் இங்கும் எழும்.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் வலது புறத்தில் தனிச் சந்நிதியில் சக்கரத்தாழ்வார் மற்றும் யோக நரசிம்மர் ஒரே விக்கிரகத்தில் எழுந்தருளியுள்ளனர்.

இங்கே தாயார் அலமேலு மங்கை என்னும் திருநாமத்தோடு அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் ஒரு கரம் அபயம் அளிக்கும் வண்ணமும், மறு கரம் கீழ் நோக்கியபடியும் திகழ, அருள்கோலம் காட்டுகிறார். சகல செல்வங்களையும், மங்கள வாழ்வையும் அளிக்கும் வரபிரசாதி இவர் என்கிறார்கள்.

அடுத்ததாக ஆண்டாள் சந்நிதி. சற்று சாய்ந்த திருமுக அமைப்புடன் அருளும் ஆண்டாள், மிக்க செளந்தர்யத்துடன் திகழ்கிறாள்.

மூலவர் சந்நிதியின்முன் இடது புறம் தூணில் பக்த அனுமன் அருள்கிறார். இவரின் வால், திருமுடிக்கு மேலாக வளைந்து காட்சியளிப்பது விசேஷ அம்சம். இவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், படிப்பு, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுப்பயணம், திருமணம் மற்றும் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கோயில் விமானங்களும் தெய்வச் சாந்நித்தியத் துடன் திகழ்கின்றன. மூலவர் கருவறை விமானத்தில் திகழும் சயனம் கொண்ட பெருமாள், ஹயக்ரீவர், லட்சுமி நரசிம்மர், திருமால் நின்ற திருக்கோலம், தசாவதாரம், ஆழ்வார்கள், கோபுரம் தாங்கிகள் போன்ற இன்னும் பல சுதைச்சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன.

பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் தாயார்
பெரியமேடு ஸ்ரீபிரசன்ன வேங்கடேசபெருமாள் தாயார்

இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லி மரமாகும். நெல்லிக்கனியில் பசுநெய் இட்டு தீபமேற்றுவது இந்தத் தலத்துக்கே உரிய தனிச் சிறப்பு. ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் எல்லா திங்கட்கிழமைகளிலும், ஏராளமான சுமங்கலிப் பெண்கள் காலை முதல் மாலை வரை இக்கோயிலுக்கு வந்து, நெல்லிக்கனியில் பசுநெய் இட்டு தீபமேற்றி, மஞ்சள் கயிறு கொண்டு மாங்கல்ய பூஜை செய்கின்றனர்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், நெல்லி மரத்தில் தொட்டில் கட்டி, பிரார்த்தனை செய்கின்றனர். கன்னிப்பெண்கள் சீக்கிரம் திருமணம் கைகூடவும், லட்சுமி கடாட்சம் பெறவும் நெல்லி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்தும், நெல்லி மரத்தை ஒன்பது முறை வலம் வந்தும் வழிபடுகின்றனர். கார்த்திகை மாதம் மூன்றாவது திங்கட் கிழமையன்று நெல்லி மரத்துக்கு விசேஷ பூஜையும், அன்றைய நாள் முழுவதும் வனபோஜனமும் வெகு விமர்சையாக நடைபெறும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும்... நலமாகும்.

நாமக்கல் மாவட்டம் தலைமலை சஞ்ஜீவிராயப் பெருமாள் கோயில் : திருப்பதிக்கு நிகரான திருத்தலம்!

திருப்பதிக்கு இணையான தலங்கள் பல நம் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் இயற்கை எழில் சூழ்ந்த மலையில் இருக்கும் அற்புதத்தலம்தான் தலைமலை. இந்த மலை உச்சியில் கோயில் கொண்டு அருள்கிறார் சஞ்ஜீவிராய பெருமாள். இவரை... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் மலைத்தலம்!

அழகர்கோயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரை அழகர்மலையில் அமைந்திருக்கும் கள்ளழகர் திருக்கோயில்தான். அதற்கு நிகரான பெருமையோடும் அழகோடும் திகழ்கிறது ஒரு தலம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த ... மேலும் பார்க்க

தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: கால்நடைகள் பெருக, வேலை கிடைக்க, செல்வம் சேர அருளும் தலம்!

தமிழக கிராமங்கள்தோறும் முறுக்கு மீசையும் மிரட்டும் விழிகளுமாகக் காட்சி அருள்வார் ஐயனார். ஊரைக்காக்கும் கடவுளாக அவர் எழுந்தருள்வதால் அந்தத் திருவடிவம் நமக்கு பயம் தராமல் அபயத்தையே தரும். அப்படிப்பட்ட ஐ... மேலும் பார்க்க

ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவிலில் கம்பம் பிடுங்கும் விழா; மஞ்சள் பூசி மகிழ்ந்த மக்கள் | Photo Album

ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் பிடுங்கும் விழா ஈரோடு பெரிய மாரி... மேலும் பார்க்க

கரூர் மாவட்டம், வெள்ளியணை ஸ்ரீகல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள்: தங்க மோதிரம் தேள் ஆன அதிசயம்!

திருப்பதிக்கு நிகரான தலங்கள் அநேகம் தமிழகத்தில் உண்டு. அதை திருப்பதி பெருமாளே பலமுறை பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் திருப்பதி சென்ற பலனை அடைய விரும்புபவர்கள் த... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டம், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் கோயில்: விளக்கேற்றி வழிபட்டால் பிரச்னைகள் தீரும்!

காஞ்சியில் நடைபெற்ற சிவ - பார்வதி திருமணத்தைத் தரிசிக்க வந்த அகத்தியர், கௌதமர், அத்திரி, பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள், மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக, கல்ப மூலிகைகள் பற்றி... மேலும் பார்க்க