`அம்மா ஆட்சி வேண்டுமா? உதயநிதி ஸ்டாலின் முதல்வராக வேண்டுமா?' - பியூஸ் கோயல் பிரச...
கை, கால்களில் மறைத்து 29 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 26 கென்ய பெண்கள் - மும்பை விமான நிலையத்தில் கைது
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுகிறது. மும்பை விமான நிலையம் தங்கம் கடத்தி வருவதற்கு முக்கியமான ஒரு வழித்தடமாக இருக்கிறது.
மும்பை விமான நிலையத்தில் நேற்று திடீரென கென்யாவை சேர்ந்த வயதான பெண்கள் 26 பேர் வந்து இறங்கினர். அவர்கள் தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து இருந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கென்ய பெண்கள் 26 பேரும் விமானத்தில் இருந்து இறங்கியதும் கிரீன் சேனல் எனப்படும் வழியாக வெளியில் வந்தனர். அவர்கள் லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு வந்தபோது அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ஒரு பெண் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மற்ற 25 பேரும் தாங்கள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் கொண்டு வரவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், இரண்டு பயணிகளைச் சோதனையிட்டபோது, அவர்களின் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒரு விரிவான சோதனைக்கு வழிவகுத்தது. அனைவரையும் சோதனை செய்ய ஆரம்பித்தவுடன் அவர்களில் சிலர் தங்களிடம் இருந்த தங்கத்தை எடுத்து வீசத்தொடங்கினர். அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பைகளில் உருக்கிய தங்க கட்டிகள் இருந்தது.

எனினும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. அதோடு அவர்கள் யாரும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
26 பேரிடம் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.38 கோடியாகும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் வெறும் 40 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது என்று குறிப்பிட்டார். ஆனாலும் அவர்களிடம் விரிவான விசாரணை நடத்த கோர்ட் அவர்களை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.


















