செய்திகள் :

தேர்தல் வந்தா மட்டும் வர்றீங்களே... இது நியாயமா?! - `பாச' அரசியல் ஒரு பார்வை!

post image

தமிழகத்தில் இந்த ஆண்டு மழை இருக்குமா என்று தெரியாது... ஆனால், தேர்தல் காலம் வந்துவிட்டதால் நம் தெருவெங்கும் வழுக்கி விழும் அளவுக்கு பாச மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

நேற்று வரை தெருவில் சாக்கடை அடைப்பு என்றாலோ, தெரு விளக்கு எரியவில்லை என்றாலோ நாம் கொடுத்த மனுவை வைத்து `வடை' சுட்டுக் கொண்டிருந்தவர்கள், இன்று திடீரென நம் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறார்கள்.

ஏஐ படம்
ஏஐ படம்

`யார் நீங்க?' மொமன்ட்

வருடம் முழுக்க நம்மைக் கண்டு கொள்ளாதவர், இன்று நாம் குப்பை கொட்டப் போகும் வழியில் மறித்து, "எப்படி இருக்கீங்க தம்பி? உடம்பு தேறிடுச்சு போல?" என்று கேட்கும்போது நமக்குத் தூக்கி வாரிப்போடுகிறது.

"சார்.. நான் போன மாசம் வரைக்கும் 90 கிலோ இருந்தேன், இப்பதான் 70-க்கு வந்திருக்கேன்" என்று நாம் சொன்னால் கூட, "அதான் தம்பி.. அந்த முகம் அப்படியே உங்க தாத்தா ஜாடை!" என்று இல்லவே இல்லாத தாத்தாவை இழுத்து ஒரு சென்டிமென்ட் கனெக்ஷன் கொடுப்பார்கள் பாருங்கள்... அங்கேயே அவர்கள் ஆஸ்கர் விருதைத் தட்டிச் செல்கிறார்கள்.

திண்ணை அரசியலும், `கஞ்சி' கலாசாரமும்

எப்போதும் ஏசி காரை விட்டு இறங்காத வேட்பாளர்கள், இப்போது திடீரென நம் வீட்டுத் திண்ணையில் `டொக்'கென அமர்கிறார்கள். "பழைய கஞ்சி இருந்தா கொடுங்கம்மா" என்று கேட்டு வாங்கி, அதை ஒரு ஸ்பூன் குடித்துவிட்டு, "ஆஹா.. இதுவல்லவோ அமிர்தம்!" என்று அவர்கள் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கிறதே...

அதைத் தியேட்டரில் ஓட்டிப் பார்த்தால் `விசில்' பறக்கும். தெருவில் விளையாடும் குழந்தையைத் தூக்கி கொஞ்சுவார்கள். அந்தக் குழந்தை பயந்து போய் கத்தினாலும், "பாத்தீங்களா... குழந்தை என் மேல இருக்கிற பாசத்துல எவ்ளோ சத்தமா சிரிக்குது!" என்று ஜால்ரா போட ஒரு தனி பட்டாளமே கூட வரும்.

ஏஐ படம்
ஏஐ படம்

`ஆல்-இன்-ஆல்' அழகுராஜா

தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் வெறும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல; அவர்கள் சிறந்த சமையல் கலைஞர், சிறந்த விவசாயி! தெருவோரம் யாராவது துணி துவைத்துக் கொண்டிருந்தால், சட்டெனப் போய் சோப்பை வாங்கி நாலு தேய் தேய்ப்பார்கள். டீக்கடையில் வடை சுட்டுக் கொண்டிருந்தால், கரண்டியை வாங்கி ஒரு திருப்பு திருப்புவார்கள். அந்த வடை வேகுதோ இல்லையோ, கேமரா சரியாக ஃபோக்கஸ் ஆகிவிட்டதா என்பதை மட்டும் மிகச்சரியாகப் பார்த்துக் கொள்வார்கள். புரோட்டா போடுவதிலும் கெட்டிக்காரர்கள் நம்மவர்கள்.

டிஜிட்டல் அன்பு

நேரில்தான் இப்படி என்றால், போனில் வரும் மெசேஜ்கள் இன்னும் கொடுமை.

"அன்பு வாக்காளரே, உங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பேசுகிறேன்..." என்று வரும் வாய்ஸ் மெசேஜைக் கேட்டால், "போன மாசம் கரண்ட் கட் ஆனப்ப போன் பண்ணா 'நாட் ரீச்சபிள்'னு வந்தியேப்பா!" என்று நமக்கே தோன்றும். ஆனால் அவர்கள் விடமாட்டார்கள்.

சமூக வலைத்தளங்களிலும் யூட்யூபிலும், அவர்கள் நம் தெரு நாயுடன் கைகுலுக்குவது போன்ற புகைப்படங்களைக் கூட `உயிரினங்கள் மேல் அன்பு காட்டும் உத்தமர்' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்து அதிர வைப்பார்கள்.

ஏஐ படம்
ஏஐ படம்

இத்தனை அக்கறை, இத்தனை பாசம், இத்தனை விசாரிப்புகள் எல்லாம் அந்த ஒரு சின்ன பெட்டியில் இருக்கும் பட்டனை அழுத்தும் வரைதான். ஓட்டுப் போட்ட அடுத்த நிமிடம், அதே வேட்பாளர் கார் நம் தெருவில் போகும்போது நாம் கை காட்டினால், "யாருப்பா அது? வண்டிய வேகமா ஓட்டு!" என்று பிஸியாகி விடுவார்கள்.

தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் `நடிப்புத் திருவிழா'. இந்த 30 நாட்கள் அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள், அடுத்த 1800 நாட்கள் நாம் அவர்களைத் தேடி அலையப் போகிறோம் என்பது தெரிந்தும், இந்த `கஞ்சி குடித்தல்' மற்றும் `குழந்தை கொஞ்சல்' நாடகத்தைப் பார்த்து ரசிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

வாக்காளர்களே... இந்த `திடீர் பாசத்தை' அனுபவியுங்கள், ஆனால் பட்டனை அழுத்துவதற்கு முன்பு நன்கு யோசியுங்கள்!

என்னை தோற்கடிக்க முடியாது! - கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MP ராகவ் கட்சி மாறுகிறாரா?

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சதா மாநிலங்களவையில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஆனால் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி விடுவித்துள்ளது. துணைத் தலைவர் பதவி... மேலும் பார்க்க