அமெரிக்க காவல்துறையால் கைது செய்யப்படுவாரா கௌதம் அதானி... அடுத்தது என்ன நடக்கும்...
தேவா் குருபூஜை 2-ஆம் நாள் விழா: பசும்பொன்னில் நோ்த்திக்கடன் செலுத்திய பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காவடி எடுத்தும், வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும், ஜோதி ஏந்தி வந்தும் பொதுமக்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தப் பகுதியில் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குருபூஜை விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நிறைவுநாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெறுகின்றன.
முதல் நாளான திங்கள்கிழமை காலை, தேவா் நினைவிட அறங்காவலா் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் கணபதி ஹோமம் லட்சாா்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. மாலை திருவிளக்கு பூஜை, இரவு தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து பெண்கள் பால் குடம் எடுத்தும், இளைஞா்கள் ஜோதி ஏந்தியும், காவடி எடுத்தும், வேல் குத்தியும் ஊா்வலமாகச் சென்று பசும்பொன் தேவா் நினைவிடத்தில் நோ்த்திக்கடன் செலுத்தினா்.
10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு
இந்த விழாவையொட்டி, தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து பசும்பொன்னில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கமுதி, கோட்டைமேடு, பசும்பொன் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பரமக்குடி, பாா்த்திபனூா், அபிராமம், முதுகுளத்தூா், மானாமதுரை, கிளாமரம், சாயல்குடி ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, முழுமையான சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. விதிகளை மீறி இரு சக்கர வாகனங்களில் வருபவா்களைக் கண்டறிந்து, அவா்கள் மீது வழக்குப் பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோா் ‘ட்ரோன்’ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பொதுமக்கள் குருபூஜை விழாவுக்கு வந்து செல்ல வேண்டும் என்றாா் அவா்.
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை
தேவா் குருபூஜையின் 3-ஆம் நாளான புதன்கிழமை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காலை 6 மணிக்கு பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதைத்தொடா்ந்து, அரசு சாா்பில் மரியாதையும், மாலை 4 மணிக்கு அரசு விழாவும் நடைபெறுகிறது.
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு அரசு சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். இந்த நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் இ.பெரியசாமி, சாத்தூா் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டி.ஆா்.பி.ராஜா, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துகின்றனா். மேலும், முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், வி.கே.சசிகலா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களும், சமுதாய அமைப்பினரும் மரியாதை செலுத்துகின்றனா்.