செய்திகள் :

தொகுதி மறுவரையறை: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்னென்ன?

post image

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இதற்கான எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.28) நடைபெற்றது. இந்த எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள்

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம்!

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்!

மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் முன்னணிப்படையாகவே இருந்து வருகிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், தமிழினத்தின், தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது கழகம். இப்போது எழுந்துள்ள தொகுதி மறுவரையறை விவகாரத்திலும் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருப்போம்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழியில் கழகத்தை வழிநடத்தும் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் அரசுதான் தொகுதி மறுவரையறை என்ற பேச்சு எழுந்த உடனேயே முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பியது.

 தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைப் பாதிக்கின்ற வகையிலான தொகுதி மறுவரையறைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது மாநிலச்  சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினோம்.

“மக்கள் நலன் கருதி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது” என்றும் அந்தத் தீர்மானம் மூலம் வலியுறுத்தினோம்.

தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மட்டுமல்ல, மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய எந்த மாநிலமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என ஆணித்தரமான நடவடிக்கைகளை ஆட்சியிலிருந்தபோதே முன்னெடுத்ததை, இந்தக் கூட்டம் நினைவுகூர விரும்புகிறது.

தொகுதி மறுவரையறையினால் நம் மாநிலத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு 25.2.2025 அன்று தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை செய்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 5.3.2025 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

கூட்டத்தின் இறுதியில், “நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது” என்பதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம்.

“தொகுதி மறுவரையறைக்குத் தமிழ்நாடு எதிரானதாக இல்லை. அதேசமயம் கடந்த 50 ஆண்டுகளாகச் சமூக, பொருளாதாரத் திட்டங்களை சிறப்புறச் செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக் கூடாது” என அக்கூட்டத்தில் தீர்மான வடிவில் தெளிவுபடுத்தப்பட்டது.

தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 7.3.2025 அன்று தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் 7 மாநில முதலமைச்சர்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார்கள்.

“தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா, கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா, வடக்கில் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்திடவும், அதில் பங்கேற்கவும், ஒருங்கிணைந்து செயல்திட்டத்தை உருவாக்கிடவும் அந்தந்த மாநிலங்கள் தங்கள் பிரதிநிதி ஒருவரின் பெயரைத் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்கள்.

இந்தியாவிலேயே தொகுதி மறுவரையறைப் பாதிப்புக்கு எதிராக முன்கள வீரராக நின்றவர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான். அதுவும் தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த நிலையில், பதவி நோக்கம் எதுவுமின்றித் துணிச்சலாகச் செயல்பட்டார் என்பதை இக்கூட்டம் பெருமிதத்துடன் பதிவு செய்கிறது.

இந்த முயற்சியின் விளைவாக 22.3.2025 அன்று, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு மாநில முதலமைச்சர்கள், பாதிக்கப்படும் மாநிலங்களின் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிய அரசின் பார்வையை தொகுதி மறுவரையறையினால் ஏற்படும் பாதிப்பின் பக்கமாகத் திருப்பியதை நாடறியும்; நாட்டிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் அறிவர்.

அந்தக் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில், “Any delimitation exercise carried out by the Union Government to improve the content and character of democracy should be carried out transparently, enabling political parties of all the States, State Governments and other stakeholders to deliberate, discuss and contribute in it.”

“Given the fact that the legislative intent behind the 42nd, 84th and 87th Constitutional Amendment was to protect/incentive States which have implemented population control measures effectively and goal of national population stabilisation has not yet been achieved, the freeze on Parliamentary constituencies based on 1971 Census Population should be extended by another 25 years.

The States which have effectively implemented the population control program and consequently whose population has come down, should not be penalised. The Union Government must enact necessary constitutional amendments for this purpose” என வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தத் தீர்மானம் மற்றும் கூட்டு நடவடிக்கைக் குழுவில் ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை 24.3.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.

தொகுதி மறுவரையறைப் பாதிப்புகளுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த திராவிட மாடல் அரசின் முதலமைச்சரான எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து, இன்றைக்குக் காங்கிரஸ் கட்சி குறை கூறுவது, கயமைத்தனமும் - கடைந்தெடுத்த அரசியல் அரைவேக்காட்டுத்தனமும் ஆகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்திலிருந்து “Fair delimitation” என்பதை வலியுறுத்தி வருகிறது. அதன் பிறகு நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்திலும் “Fair Delimitation” என்பதையே அடிப்படை நோக்கமாகக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும், “தொகுதி மறுவரையறைக்குத் தமிழ்நாடு எதிரானது அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக சமூக, பொருளாதாரத் திட்டங்களைச் சிறப்புறச் செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுவரையறை அமைந்துவிடக் கூடாது” என்ற வாசகமே தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது.

கூட்டு நடவடிக்கைக் குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்றவர்கள், “25 லட்சம் பேர் உள்ள மக்களவைத் தொகுதிகளில் எப்படி மக்களைச் சந்தித்துக் குறைகளைத் தீர்க்க முடியும்? No delimitation என்பதற்குப் பதில் நாம் Fair Delimitation-தான் கேட்க வேண்டும்” என்றே பேசினார்கள்.

ஆகவேதான், “Any delimitation exercise carried out by the Union Government to improve the content and character of democracy should be carried out transparently” என்ற வாசகமே கூட்டு நடவடிக்கைக் குழுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகவே தொகுதி மறுவரையறையைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வின் கொள்கை நிலையானது!

தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமை ஏற்கெனவே இருக்கும் விகிதாசாரமான 7.18 விழுக்காட்டுக்குக் கீழாகக் குறையக் கூடாது என்பது உறுதியுடனும் ஆட்சியிலிருந்த நேரத்திலேயே நெஞ்சுரத்துடனும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.

ஆனால் கொள்கைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, கள்ளத்தனமாக நள்ளிரவில் கூட்டணியிலிருந்து எகிறிக் குதித்து, பதவிக்காக வேறுபக்கம் தஞ்சம் அடைந்தது காங்கிரஸ் கட்சி. அப்படிப்பட்டவர்கள் இப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இரட்டை நிலைப்பாடு எடுத்துவிட்டதுபோல் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல.

ஆட்சியிலிருந்தபோதே முதலமைச்சரும், கழகத் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் படித்துப் பார்த்தால், “Fair Delimitation” என்று பேசிவிட்டு, இப்போது “No Delimitation” என்று நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல்டி அடித்திருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்பது தெரியும்! பல்டி அடிப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பழக்க தோஷம்!

ஆகவே தி.மு.க.விற்குக் கொள்கை வகுப்பு எடுக்கும் நகைச்சுவையைக் காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலனையும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ உரிமையையும் பாதிக்கச் செய்யும் வகையிலான முயற்சிகளுக்குத் துணை போகும் துரோகத்தனத்தைக் கைவிட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தொகுதி மறுவரையறை இன்று முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. ஏற்கனவே 2002-இல் அரசியல் சட்டத் திருத்தம் மூலம் வழங்கப்பட்ட “25 years freeze” முடிவுக்கு வருகிறது.

அப்படி முடிவுக்கு வந்தால், நடந்து முடிந்துள்ள 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை simple majority அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும்.

அப்படியொரு ஆபத்தான சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின்  எண்ணிக்கை அடியோடு குறையும். அதிலிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. ஆகவேதான் தொடக்கத்திலிருந்தே “Fair Delimitation” என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் எக்காரணத்தைக் கொண்டும் குறையக்கூடாது என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டும் இக்கூட்டம், “தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையக்கூடாது, 1971 மக்கள் தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படக்கூடாது” எனும் தமிழ்நாட்டின் உரிமையை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரிலும் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமையை பாதுகாக்கவும், தென்மாநிலங்களின் நலனை நிலைநாட்டிடவும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்போடு செயல்படுவார்கள் எனத் தீர்மானிக்கிறது.

தொகுதி மறுவரையறை:``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது" - திருமாவளவன்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தியது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்... மேலும் பார்க்க

Delimitation: "உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.!" - ஆதரவு குறித்து ஸ்டாலின்

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. திமுகவின் இந்த ஆதரவிற்கு விசிக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``இதை இவ்வளவுதூரம் கொண்டுவந்திருக்க தேவையில்லை.!" - சீமான்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகவும், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது தொடர்பாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``எம்.எல்.ஏ கைது நடவடிக்கைய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை : திமுக ஓகே; இன்னும 7 உறுப்பினர்கள் தேவை... நாடாளுமன்ற எண்களும் பாஜக கணக்கும்!

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வர இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஏற்கனவே இம்மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியைத் தழுவிய... மேலும் பார்க்க

Delimitation: `` யாருக்கு அதிக அதிகாரம்? என்பதுதான் அடிப்படையான கேள்வி" - எம்.பி ஜோதிமணி

தொகுதிமறுவரையறை இந்தியாவின் அரசியல் மற்றும் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அதிகாரச் சமநிலையையே மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு அடிப்படையான நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்திருக்கிறார். இது தொட... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டது தவெக அரசு" – தமிழிசை சௌந்தரராஜன்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை எதிர்த்துத் தடுக்க முயன்றதால், இன்று தீபம் ஏற்றுவதை உலகமே பார்க்கப்போகிறது என்று தவெக அரசை விமர்சித்து பேசியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜ... மேலும் பார்க்க