"என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்" - கேட்கிறார் அமைச்சர் வ...
தொகுதி மறுவரையறை:``உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விட திமுக-வின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது" - திருமாவளவன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தியது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்த அமைதிப் பேரணிக்கு விசிக முழு ஆதரவு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும், வன்முறைக்கு எவ்வித இடமும் அளிக்கக் கூடாது, மதவெறி சக்திகளின் ஆதிக்கம் தலைதூக்கக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி கட்சிகள் இப்பேரணியை முன்னெடுத்துள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் இந்த அமைதிப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது.

இந்தத் தீர்ப்பு சாட்சியங்களின் அடிப்படையிலோ, சான்றுகளின் அடிப்படையிலோ வழங்கப்படவில்லை. மாறாக, சங்கபரிவாரங்களின் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் செயலாகவும், மதவெறி சக்திகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இது அமைந்துள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பை இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் ஏற்கவில்லை. இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சரியான வாதங்களையும் அழுத்தத்தையும் முன்வைக்காததால்தான் இத்தகைய தீர்ப்பு வந்தது என்றொரு கருத்து நிலவுகிறது. ஆனால், அது முற்றிலும் தவறான கருத்தாகும். தமிழ்நாடு அரசின் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வழக்கறிஞர்களும் மிகச் சரியாகவே வாதாடி இருக்கிறார்கள். இருப்பினும், நீதிபதிகளே வழக்கறிஞர்களாக மாறி, சங்கபரிவாரங்களின் விருப்பப்படியும், இதை ஒரு ஈகோ பிரச்சனையாகக் கருதியும், தம் விருப்பப்படியும், தமிழ்நாடு அரசை அச்சுறுத்தும் வகையிலும் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
மேலும், கார்த்திகை திருநாள் முடிந்துவிட்ட நிலையில், கார்த்திகை திருநாள் அன்றுதான் தீபம் ஏற்றுவது என்பது நமது மரபாக உள்ளது. ஆனால், அந்த மரபையே சிதைக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
சர்ச்சைக்குரிய அந்தத் தூண் நில அளவைக் கல்லா அல்லது தீபம் ஏற்றும் தூணா என்பதை முதலில் முடிவு செய்யாமலேயே, அங்கு தீபம் ஏற்ற உத்தரவிட்டது தவறு. அது திட்டமிட்ட சதிச் செயல் என்று கருதுகிறோம். மூல வழக்கையும், முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவையும் விசாரணைக்கு எடுத்து முடித்த பிறகே தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் அவசர அவசரமாக விசாரித்துத் தீர்ப்பளித்தது வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
நாட்டில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் நிலவும் சூழலில், தீபம் தொடர்பாகப் பிரதமர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது, இதில் ஒரு சூழ்ச்சி மற்றும் அரசியல் வலைப்பின்னல் இருப்பதையே காட்டுகிறது. பிரதமர் எதை விரும்புகிறாரோ, அதையே தீர்ப்பாக வழங்கியுள்ளனர் என்பதை அவரது பதிவின் வாயிலாக உணர முடிகிறது. மலையின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எஃப் முழுமையாகக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இங்குள்ளது என்பதையே புறக்கணிக்கும் செயலாகும். இது மாநில அரசை அவமதிப்பதாகவும், மாநில உரிமையை நசுக்குவதாகவும் உள்ளது.

மேலும், அறங்காவலர் குழுவைக் கலைத்துவிட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்ததையும் மக்கள் விரோத நடவடிக்கையாகக் கருதி கடுமையாக எதிர்க்கிறோம்.
தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பைப் பதிவு செய்து, செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பான மசோதாவிற்கு தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ள நிலைப்பாடு, இந்தத் தீர்ப்பை விடவும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றால், தி.மு.க-வின் இந்த நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி' என்ற சதித் திட்டத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb












