"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் ந...
தொடர் குற்றங்களால் `ஜாமீன்’ ரத்து; பிரபல ரௌடி ஜானி வேலூர் சிறையிலடைப்பு
வேலூர் மாவட்டத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக அலறவிடும் `ஏ பிளஸ்’ ரௌடிகளில் ஒருவர் ஜானி என்கிற ஜான் பால்ராஜ். காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜானி மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறிப்பு எனச் சுமார் 64 குற்ற வழக்குகள் இருக்கின்றன.
காட்பாடி காவல் நிலையப் போலீஸாரால் `சரித்திர பதிவேடு’ குற்றவாளியாகவும் கண்காணிக்கப்பட்டு வரும் ஜானி கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது ஜாமீனில் வெளியே இருந்ததால், தி.மு.க-வில் இணைந்து காட்பாடியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்காக வாக்குசேகரிப்பிலும் ஈடுபட்டார்.
இதையடுத்து, தி.மு.க கொடி கட்டிய காரில் வலம் வந்துகொண்டிருந்த ஜானி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்திலும் வீடியோக்களைப் பகிரத் தொடங்கினார். சமீபத்தில், `ஏகே-47’ துப்பாக்கியுடன் வீடியோவைப் பகிர்ந்தும் அச்சுறுத்தலாக விளங்கினார்.

இந்த நிலையில்தான் தொடர் குற்றச் செயல்களில் ஜானி ஈடுபட்டு வருவதை அறிந்த போலீஸார், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணையில், ஜாமீனை ரத்து செய்த நீதிபதி 2 வாரத்துக்குள் ஜானியை போலீஸில் சரணடையவும் உத்தரவுப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஜானி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடியானதையடுத்து, வேலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ரௌடி ஜானி சரணடைந்தார். அவரைச் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார் ரௌடி ஜானி.



















