Dada: "அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்!" - 'தாதா' போஸ்டர் ட்ரால்கள் பற்றி ...
சேத்துப்பட்டு: விடுதி வார்டன் போக்சோவில் கைது; மாணவனின் பாலியல் புகாரில் திடீர் திருப்பம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள ஒரு தனியார் விடுதியில் 110 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவனும் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பயில்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறைக்காக அந்த மாணவன் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். விடுமுறை முடிந்த பின்னரும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, பெற்றோர் கேட்டும் மாணவன் எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் அவரை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவன் அழுதபடி இருந்துள்ளார். இதைக் கவனித்த அங்கிருந்த சிலர், மாணவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது, விடுதி வார்டன் தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் சைல்டு லைன் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மாணவன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சேத்துப்பட்டு போலீஸார் விடுதியில் வார்டனாகப் பணிபுரிந்து வந்த சந்தவாசல் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் (25) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஜூலை மாதம் விடுதியில் 9-ம் வகுப்பு மாணவனுடன் இந்த 10-ம் வகுப்பு மாணவன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டபோது, வார்டனிடம் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, இரு மாணவர்களும் மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். வார்டன் இடையூறாக இருப்பதால், அவர்மீது பழிபோட்டபடி மாணவர்கள் இருவரும் குற்றம் சுமத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனாலும் விசாரணைக்கு முன்னதாகவே, மாணவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வார்டன் இம்மானுவேல் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுவிட்டார். இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உயரதிகாரிகளுடன் சேத்துப்பட்டு போலீஸார் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



















