செய்திகள் :

தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி, சிறுமிகளுக்கு நாப்கின் வழங்கவோ சட்டப் போராட்டம்!

post image

குடும்ப அமைப்பு முதல் வாகன அமைப்பு வரை, இந்த உலகம் எல்லா வகையிலும் ஆண்களின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டது. இங்கு, பெண்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நீண்ட போராட்டங்களுக்குப் பிறகே பெற வேண்டியுள்ளது. ‘அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்களை வழங்க வேண்டும்’ என்று தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அப்படி ஒரு வரலாற்றுத் தருணம்.

2019 -2021 தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 15 - 24 வயதுக்குட்பட்ட கிராமப்புறப் பெண்களில் 64% பேர்தான் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துபவர்கள். 15 வயதுக்குள் இருக்கும் பருவமடைந்த பெண்கள், 24 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆகியோரிடையே சர்வேகூட எடுக்கப்படவில்லை. அவ்வளவுதான், இங்கு பெண்களுக்கும் அவர்களின் மாதவிடாய் சுகாதாரத்துக்கும் அரசு கொடுக்கும் முக்கியத்துவம். நாட்டில் கிட்டத்தட்ட 50% பெண்கள் இன்னும் துணி உள்ளிட்டவற்றைத்தான் மாதவிடாய் நாள்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது துயரம்.

எளிய குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் ஆடம்பரமாக இருப்பதால், அவற்றிலிருந்து விலகி நிற்கும் அக்குழந்தைகள் எதிர் கொள்ளும் சிரமங்கள் சொல்லி மாளாது. இந்தச் சூழலில்தான், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்களை வழங்க உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர் 2022-ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இப்போது விடியல் பிறந்திருக்கிறது.

நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு, ‘அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு மட்கும் தன்மை கொண்ட நாப்கின் வழங்கப்பட வேண்டும், தண்ணீர், சோப்பு வசதியுடன் கூடிய கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான அமைப்பு உள்ளிட்ட மாதவிடாய் நல மேலாண்மை கட்டாயம்’ என்று உத்தரவிட்டுள்ளது.

மாதவிடாயை சுகாதாரமற்ற வகையில் எதிர்கொள்ள நேர்வதால் சிறுநீர்ப்பாதை தொற்று, இனப்பெருக்கப்பாதை தொற்று, பாக்டீரியா தொற்று, சருமப் பிரச்னை எனப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பல. வளர்ந்த பெண்களுக்கே வாதையான மாதவிடாய் நாள்களில், சிறுமிகளின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

கடந்த ஆறு ஆண்டுக்காலத்தில், டாப் தொழிலதிபர்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நாட்டில், கிராமப்புற, ஏழைச் சிறுமிகளின் மாதவிடாய் சுகாதாரத்துக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்புப் பெற வேண்டியிருப்பது அவமானம்.

இத்தீர்ப்பை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் அக்கறையுடன் அமல்படுத்த வைப்பதில் இருக்கிறது அடுத்த போராட்டம். அதற்கும் தயாராவோம். மாதவிடாய் சுகாதாரம் சிறுமிகள் மட்டுமல்லாது, அனைத்துப் பெண்களுக்கும் அடிப்படை உரிமையாகும் நாளை நோக்கி நகர்வோம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

பட்ஜெட்டில் கனிம வழித்தடங்கள் அறிவிப்பு... இயற்கை வளங்களை சுரண்டி கார்ப்பரேட்களுக்கு விற்பதற்கா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!மத்திய பட்ஜெட் 2026-ல் வேளாண்மை மற்றும் சூழல் சார்ந்த பல அறிவிப்புகள் வெளிவரும் என்று விவசாயிகளும், சூழல் ஆர்வலர்களும் எதிர்பார்த்திருந்தனர்.குறிப்பாக, காலநிலை மாற்றத்தின் த... மேலும் பார்க்க

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஊடக உலகில் ஓர் இயக்கம்...!

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.comமொபைலில் விண்ணப்பிக்க உங்கள்ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கமான தருணம்... இதோ!சமூக ... மேலும் பார்க்க

விகடன் சம்பவம்!

ஐந்து தலைமுறையா நம்ம வீட்டுப் பிள்ளையா, முறுக்குக் காட்டும் மாப்பிள்ளையா, பல நேரம் நண்பனா இருந்த விகடன் இப்போ ‘செஞ்சுரி’ அடிக்கிறான்! இந்த 100 வருஷத்துல எத்தனையோ முறை எங்களை நீங்க கொண்டாடுனீங்க... இப்... மேலும் பார்க்க