செய்திகள் :

கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்!

post image

தமிழக மலைத்தலங்கள் சித்தர்கள் வாழும் பூமி. பெரும்பாலும் அதில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பார். சித்தர்கள் அந்த முருகனை வழிபடுவதோடு மக்களுக்கும் தங்களால் ஆன மருத்துவச் சிகிச்சைகளை வழங்கிவந்தனர்.

அப்படி சித்தர் ஒருவர் அபூர்வ மூலிகை கொண்டு சர்வரோக நிவாரணி தயாரித்து வழங்கிய மலைதான் ஊதி மலை.

ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது `பொன்னூதி’ எனும் ஊதி மலை. இங்கே மலைக்குக் கீழே பழைமையான சிவாலயம் அமைந்திருக்க, மலைக்கு மேலே உத்தண்ட வேலாயுத ஸ்வாமியாக முருகன் கோயில் கொண்டிருக்கிறார்.

கொங்கணவர் சித்தர் சந்நிதி
கொங்கணவர் சித்தர் சந்நிதி

அந்தக் காலத்தில் காங்கேயத்துக்கு அருகில் இருந்த சுந்தரபுரி எனும் தேசத்தின் இளவரசன் சிவபாலன். ஒருமுறை இவன் ஊதி மலைக் காட்டுப்பகுதியில் வேட்டையை முடித்துக்கொண்டு, உச்சியில் இருந்த சுனையில் தன் உடைவாளைக் கழுவினான்.

யதேச்சையாக அந்த நீரானது, அருகில் கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகளின் மீது பட, அவை உயிர்ப்பெற்று எழுந்தன. `சிவோ ஹம்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’ என்று வணங்கிக் கூவியபடி, காட்டுக்குள் ஓடி மறைந்தன.

சிவபாலன் வியந்தான். யார் அந்தச் சித்தன் என்று தேட முயன்றான். விளைவு போகரின் தரிசனம் கிடைத்தது. `நீயே அந்தச் சித்தன்; உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்’ என்று உரைத்தார் போகர். சிவபாலன் அங்கேயே அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினார். அதன் மூலம் அவருக்குப் பல ஸித்திகள் கைவரப் பெற்றன.

அதோமட்டுமல்லாமல் சொர்ணாகர்ஷண பைரவரின் அருளால், தொட்டது யாவும் தங்கமாகும் எனும் வரமும் கிடைத்தது. இப்படிக் கிடைத்த வரம் கொண்டு ஏழைகளுக்குப் பொன்னைக் கொடுத்து மகிழ்ந்தான் சிவபாலன். இதனால் அவருக்கு சிறு கர்வம் உண்டானது. ஆனால் அதையும் ஈசன் போக்கினார்.

அவருக்கு கொங்கணர் என்கிற பெயரும் உண்டானது. தங்கம் வரவழைக்கும் மந்திரத்தை உபயோகிப்பதில்லை என்று முடிவெடுத்தார். மீண்டும் ஊதி மலை சென்று தவமியற்றினார். 800 ஆண்டுகள் கழிந்தன.

பெரும் பஞ்சம் தோன்ற மக்கள் தவித்தார்கள். வேறு வழியின்றி இந்த முறை மூலிகைகளைக் கொண்டு ரசவாதம் செய்து, சாதாரண உலோகங்களைத் தங்கம் ஆக்கி அளித்தார். போகர் தோன்றி தடுத்தும் கொங்கணவர் கேட்கவில்லை. அவர், மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால், அந்த மலை பொன்னூதி மலையானது.

ஊதி மலை சொர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி
ஊதி மலை சொர்ணாகர்ஷண பைரவர் சந்நிதி

மக்கள் அதிகம் பொன் வேண்டும் என்று அவரைத் தேடி வர கொங்கணர் அந்த இடத்தை விட்டு அகன்றார். ஒரு கட்டத்தில் `போதும் இந்தப் பிறவி’ என்று எண்ணிய கொங்கணவர், மீண்டும் ஊதி மலைக்குச் சென்று தவமியற்றினார்.

போகர் பழநியில் பிரஷ்டை செய்த நவபாஷாணச் சிலையைப்போல தானும் மூலிகைகளால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையை மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார். பிறகு, ஈசனின் கட்டளைப்படி திருமலை திருப்பதிக்குச் சென்று சமாதிநிலை கொண்டார் கொங்கணவர்.

இன்றைக்கும் ஊதி மலையில் தாம் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் கொங்கணவர் சுயம்புவாகக் காட்சியளிப்பதைத் தரிசிக்கலாம். அவர் அருள்பாலிக்கும் கொங்கணவ குகை அபூர்வமானது.

உள்ளே நுழைந்தால் 50 பேர் அமர்ந்து தியானிக்கும் அளவு இடம் உள்ளது. இந்தக் குகையிலிருந்து பழநி, அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்ததாம்.

கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டன. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டதாம்.

முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்ப்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலிலிருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது.

இந்தக் கோயிலுக்கு இடப்புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ. பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப் பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். உச்சியில் கொங்கணவர் கோயிலில், கருவறையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சித்தர்பெருமான்.

கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை’ உள்ளது.

ஊதி மலை சித்தர் வழிபட்ட பாறை
ஊதி மலை சித்தர் வழிபட்ட பாறை

சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி ஆகிய நாள்கள் சித்தரைத் தரிசிக்க விசேஷமானவை.

பௌர்ணமி நாள்களில் 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தருகிறார்கள்.

இனிப்பைத் தவிர ஐந்து வகை ருசியுடன் திகழும் இந்தத் தீர்த்தம் அற்புத மருந்து; இது, முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானது, தற்போது அந்த அளவுக்கு மூலிகைகள் கிடைப்ப தில்லை என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகினாலும் ஒட்டுமொத்தகளைப்பும் நீங்கிவிடுமாம். பக்தர்களுக்குப் பசியாற பச்சைப்பயிறு சாதம் வழங்கப்படுகிறது.

இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். தைப்பூச நன்னாளில் இந்த மலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பது விசேஷம்.

வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை ஊதிமலை சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். முருகன் அருளும் கொங்கணவரின் குருவருளும் கைகூடி, மலை போல் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!

பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் வ... மேலும் பார்க்க

கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய தலம் மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் தலத்தி... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!

நம் தேசத்தின் ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கே வழிபாடு செய்தால் சகல வரங்களும் கிடைக்கும். மேலும் இத்தலங்கள் சித்தர்களும் முனிவர்களும் வழிபட்ட தலங்கள் என்பதால் இத்தலத்தின் சாந்நித... மேலும் பார்க்க

புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில்: பயமில்லாத வாழ்வு அருளும் வெள்ளைக்காரப் பிள்ளையார்!

அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே,தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,மணக்குள விநாயகா! வான்மறைத் தலைவா!தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிர... மேலும் பார்க்க

திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!

கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற மூன்று விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. கருவலூர் ஸ்ரீ வீர ராஜேந்திர விண்ணகரப் பெருமாள் மற்றும் விஜயமங்கலம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் கொடுவாய் விண்ணளந்த பெருமள் திருக... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி அமைந்த ஓர் அற்புதக் கோயில்தான் கழுகுமலை. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தின் மகிமைகள் ஏராளம். வா... மேலும் பார்க்க