`வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும்.!' அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்...
விழுப்புரம் மாவட்டம், பொன்பரப்பி ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்: தேன் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும்!
நம் தேசத்தின் ஆலயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அங்கே வழிபாடு செய்தால் சகல வரங்களும் கிடைக்கும். மேலும் இத்தலங்கள் சித்தர்களும் முனிவர்களும் வழிபட்ட தலங்கள் என்பதால் இத்தலத்தின் சாந்நித்தியம் அளவிடற்கரியதாக விளங்குகின்றன.
அப்படி ஒரு தலம்தான் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் - ஆத்தூர் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் பொன்பரப்பி கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்.
இயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் தமிழர்களின் கட்டடக் கலைக்கும், புராதனச் சிறப்புக்கும் சான்று என்றே சொல்லலாம். சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு வானகோவராயன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது.
ஒருகாலத்தில் இவனது ஆட்சியில் இவ்வூரில் செல்வம் கொழித்து பொன்னும் பொருளும் அளவற்றுப் புழங்கியதால் இவ்வூருக்கு `பொன்பரப்பி' என்று பெயர் சூட்டி அழைத்திருக்கிறார்கள்.

இக்கோயிலைப் பற்றிய சுற்றுச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன. காசி போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று ஆயிரம் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்குவதன் மூலம் பெறும் பலன்களை, இக்கோயிலுக்குச் செய்யும் ஏதேனும் சிறிய அளவிலான திருப்பணியின் மூலமும், ஈசனின் தரிசனத்தின் மூலமும் பெறலாம் என்கின்றன கல்வெட்டுகள். மேலும் இங்கே சிவ தரிசனம் செய்ய வேண்டிய முறையையும் வெளிப்படுத்துகின்றன.
காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்த ஷோடசலிங்கம்
இங்கு அருளாட்சி செய்யும் சொர்ணபுரீஸ்வரர் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கிறார். நவபாஷாணத்துக்கு நிகரான, காந்தத் தன்மையும் கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட இந்த லிங்கத் திருமேனி சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் விஷ்ணு மற்றும் பிரம்ம பீடங்களின் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஷோடசலிங்கம் பல சிவாலயங்களில் இருந்தாலும், இங்கு லிங்கம் மட்டுமின்றி, விஷ்ணு பிரம்ம பீடங்களும் 16 முகங்கள் கொண்டதாகவும் வடிவமைக்கப்ட்டுள்ளதால், உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காகபுஜண்டர் சிவ தரிசனம் வேண்டி 16 ஆண்டுகள் கடுமையாக தவம் மேற்கொண்டிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சிவபெருமான் பிரதோஷ நேரத்தில் 16 முகங்களைக் கொண்ட ஷோடசலிங்கமாக அவருக்கு இங்கே காட்சி தந்தாராம்.
அதனாலேயே காக புஜண்டர் இங்கே சிவலிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், தற்போது ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள பகுதியிலேயே ஈசானத்தில் அவர் ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, இக்கோயில் ஈசானத்தில் அமைந்துள்ள சித்தரின் ஜீவ சமாதியை 16 முறை வலம் வந்து, 2 முதல் 16 தேங்காய் வரை உடைத்து வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவ தோஷங்கள், தீராத மனக் கவலைகள் நீங்கி சிவ புண்ணியம் பெறலாம் என்பது நம்பிக்கை.
மேலும் இக்கோயிலின் நந்தியானது இளங்கன்றாகவும், சொர்ணபுரீஸ்வரருக்கு நேர்கோட்டில் இருக்கு மாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரதான நிலைப்படியில் இருந்து சிவ தரிசனம் செய்வதற்கு வசதியான அமைப்பில் இருப்பது சிறப்பாகும்.
இந்த நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் நீல நிறமாக மாறி வழிந்தோடுவது குறிப்பிடத்தக்கது.
வெளிப்பிராகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் ஆசனம் இட்டு அமர்ந்திருக்கும் முருகப்பெருமான், சுமார் 8 அடி உயரத்துடன் மிக பிரமாண்டமாகக் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இது தவிர சண்டிகேஸ்வரர், கன்னிமூல விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய தெய்வ மூர்த்திகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறார்கள்.

பரிகார சிறப்புகள்
ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ராகு காலங்கள் மற்றும் திங்கட்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மற்றும் அவரவர் ஜன்ம நட்சத்திர தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து தேனபிஷேகம் செய்து வழிபட உகந்த நாள்களாகும்.
நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து ஈசனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுவதுடன், தொடர்ந்து 16 பிரதோஷ தினங்களில் வந்திருந்து ஈசனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடை நீங்கும்.
மேலும் ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திர தோஷம் முதலான தோஷங்கள் கொண்டவர்களும், பிள்ளை பாக்கியம் இல்லாதவர்களும், தீராத மனக்கவலை கொண்டவர்களும் சொர்ணபுரீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்து, பிரதோஷ காலங்களில் தொடர்ந்து வழிபட்டால் பிரச்னைகள் யாவும் அடியோடு நீங்கும் என்பது நம்பிக்கை.
தோஷம் உள்ளவர்கள், ஸ்வாமிக்கு தேன் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தரப்பட்ட தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
இந்தத் தலத்தில் சிவபெருமான் முனிவருக்குக் காட்சியளித்தது பிரதோஷ வேளை என்பதால், இந்த ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷ நாள்கள் மட்டுமின்றி பௌர்ணமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் திங்கட் கிழமைகளில் வரும் சோமவார பூஜை, தமிழ் வருடப்பிறப்பு, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை, கார்த்திகை தீபம் போன்றவையும் இங்கு வெகு விசேஷமாக நடைபெறுகின்றன.




















