With Love: "இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.." - அபிஷன் ஜீவி...
இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?
இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை குறித்து, இரண்டு நாடுகளின் அரசு தரப்புகளிலிருந்து வெளிப்படையான விளக்கம் இல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும். அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகளை பூஜ்ஜியமாக்கும்’ என்று அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுகளுக்கு இந்திய அரசு மௌனம் காப்பது, நமக்கு எழும் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இதுவரை ‘பல்தரப்பு கொள்முதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. மலிவான ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்த உதவியது. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் சுயாதீனக் கோணத்திலும் கேள்விக்குறியாகும். அமெரிக்காவிடமிருந்து மட்டும்தான் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைக்குச் சென்றால், அதுவே நாளை நமக்குப் பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.
அதேபோல், பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம் மற்றும் பால் பொருள்கள் போன்ற துறைகளில் அமெரிக்காவின் பொருள்களுக்குச் சந்தை வாய்ப்புகளை அனுமதிப்பது, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். ‘விவசாயிகளின் நலனில் சமரசமில்லை’ என்ற மோடி அரசின் அறிவிப்பும், நடப்பவையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.
மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரிகளை அமெரிக்கா விதிக்கும் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி விதிப்பது, சமநிலை இல்லாத ஒப்பந்தமாக மாற்றும் அபாயமும் உள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதுதான். ஆனால், எந்த ஓர் ஒப்பந்தமும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார நலன், மக்களின் நலன், நாட்டின் சுயாதீன நிலை, விவசாயம் போன்ற ஆதாரமான துறைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. அரசும் அதிகாரிகளும் இதை மனதில் வைத்து ஒப்பந்தங்களை வகுக்க வேண்டும்.
‘அமெரிக்காவிடம் இந்தியா அடிபணிந்து விட்டதா?’ என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளிவரும்போது, மக்களின் கேள்விக்கான விடை கிடைக்கும்.
- ஆசிரியர்



















