Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை க...
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் ஸ்ரீ விண்ணளந்த பெருமாள்: நாக தோஷம் தீர்க்கும் கருடர்; வர ஹஸ்த அனுமன்!
கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற மூன்று விஷ்ணு ஆலயங்கள் உள்ளன. கருவலூர் ஸ்ரீ வீர ராஜேந்திர விண்ணகரப் பெருமாள் மற்றும் விஜயமங்கலம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் கோயில் மற்றும் கொடுவாய் விண்ணளந்த பெருமள் திருக்கோயில் ஆகியன.
திருப்பதிக்கு இணையான பெருமையையும் மகத்துவத்தையும் கொண்ட இந்தத் திருத்தலங்களில் கொடுவாய் விண்ணளந்த பெருமாள் திருகோயில் பெரும் சிறப்பினை உடையது. காரணம் இந்தக் கோயில் பெருமாளின் தசாவதாரத் திருக்கோலத்தை நினைவூட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி தானம் பெற்றார். தானத்துக்கு ஈடாக பூலோகத்தை தன் ஒரு திருவடியாலும் விண்ணை மற்றொரு திருவடியாலும் அளந்தார் என்கின்றன புராணங்கள். அப்படி விண்ணை அளந்த பெருமாளாக திரிவிக்ரமனாக பெருமாள் அருளும் தலங்கள் பல உள்ளன.
அவற்றில் பெருமாள் தன் திருவடி ஒன்றை வானம் நோக்கித் தூக்கியிருப்பதுபோன்ற திருக்கோலத்திலேயே சேவை சாதிப்பார். ஆனால் கொடுவாய் திருத்தலத்தில் பெருமாள் சாதாரணமாக இரு திருவடிகளையும் பூமியில் நிறுத்தி சேவை சாதிக்கிறார். வாருங்கள் பெருமாள் விண்ணளந்தவனாக வேண்டுவோர்க்கும் இரங்கும் தயாபரனாகக் காட்சி அருள் அந்த அற்புதத் தலம் பற்றித் தெரிந்துகொள்வோம்.

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடுவாய் திருத்தலம். இந்தக் கோயில் எப்போது, யாரால் எழுப்பப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை. ஆனால் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்திருப்பதாகத் தெரிய வருகிறது.
அப்படியானால் திருக்கோயில் அதற்கும் பழைமையான ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்கள். மேலும் கி.பி. 1212-ல் வீர ராஜேந்திரன் என்ற சோழ அரசர் இந்தக் கோயிலுக்கு அர்த்த மண்டபம் கட்டித் தந்ததாகக் குறிப்புகள் உள்ளன.
கி.பி. 13-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட கொடுவாயில் இருந்த ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் கோயில் பாண்டிய படைகளால் சிதைக்கப்பட்டது. பின்னர் கி.பி. 1489-ல் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீர நஞ்சராயர்தான் இக்கோயிலை மீட்டெடுத்துக் கட்டிமுடித்தார்.
பெருமாள் இங்கே நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் திகழ, அலர்மேலுமங்கை நாச்சியார் சமேதராக அருள்கிறார். தனிச் சந்நிதியில் அருளும் மகாலட்சுமி தாயாரும் சிறந்த வரப்பிரசாதி.
கோயிலின் மகா மண்டபமும் தசாவதார விமானமும் எழிலுடன் திகழ்கின்றன. பகவானின் தசாவதாரத் திருக்கோலங்கள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும்படித் திகழ்கிறது.

தாமரை பீடத்தில் வராஹர், ஹயக்ரீவர், யோக நரசிம்மர் ஆகிய தெய்வங்களின் சக்தி ஆவாஹனம் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், தனிச் சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். அவரை ஆலிங்கனம் செய்தபடி தாயார் திருக்காட்சி தருகிறார்.
சுவாதி மற்றும் பிரதோஷ தினங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியரின் பிரச்னைகளைக் களைந்து, அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாழ அருள்புரிகிறார். மேலும் தொழிலில் ஏற்பட்ட கடன்கள் தீரவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர், வாலின் நுனியில் மணியுடன், ஒரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியபடியும், ஒரு கரத்தில் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் வர ஹஸ்தமும் காட்டி அருள்கிறார்.
இத்திருக்கோயிலில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பெரிய கருடன் சந்நிதியும் அமைந்திருக்கிறது. 11 நாகங்கள் கருடனின் உடலைச் சூழ்ந்திருக்க, தன் இரண்டு கரங்களால் நாகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய கருடனை, பஞ்சமி தினத்தில் வழிபட்டால் நாகதோஷம் நீங்கி, திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் கிணறு, 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததாகும். வீரசோழன் கலிமூர்க்கன் என்ற அரசன் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க, மிகப் பெரிய இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார். இன்றளவும் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்று நீரைப் புனிதத் தீர்த்தமாகவே பருகி வருகிறார்கள்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி, லட்சார்ச்சனை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, மகர சங்கராந்தி, ஆடிப் பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு போன்ற முக்கிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
ஸ்ரீவிண்ணளந்த பெருமாளைத் தரிசித்து வழிபட்டால், நம் மனதில் இருக்கும் அகந்தையை ஒடுக்கி, பல நன்மைகளை நமக்கு அருள்வார். எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கொடுவாய் சென்று பெருமாளைத் தரிசனம் செய்து வாருங்கள். திருப்பதி பெருமாளை தரிசனம் செய்த பலனையும் புண்ணியத்தையும் பெற்று மகிழுங்கள்.





















