India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி...
`அன்புமணி வேட்பாளர்களை டார்கெட் செய்யும் முடிவில் ராமதாஸ்' - அதிமுக கூட்டணி என்ன பிளான்?
`கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களை எதிர்த்து, அவர்களைத் தோற்கடிப்பதுதான் ஒரே இலக்கு என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்து வருவதாக' அவருடைய ஆதரவாளர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் கட்சிக்குள்ளும் எதிரொலித்ததால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியாகவும், அவர் மகன் அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழுவை அங்கீகரித்து அவருடைய தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தேர்தல் ஆணையம் அனுமதித்தது.
அதை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அன்புமணியுடனே இருப்பதை புரிந்துகொண்ட டாக்டர். ராமதாஸ், திமுக-வுடன் கூட்டணி வைக்க விரும்பி நெருங்கி வந்தாலும், திமுக தலைமையோ இதுவரை எந்தச் சிக்னலும் காட்டாமல் உள்ளது.
தவெக-வுடன் கூட்டணி வைக்கவும் டாக்டர். ராமதாஸ் முயற்சித்து வந்தாலும், தவெக தலைமையும் பாசிவ்டிவான பதிலைக் கூறவில்லை.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஏதாவதொரு கூட்டணியில் இணைந்து, தன் பக்கம்தான் பாமக உள்ளது என்பதை நிரூபிக்க நினைக்கும் டாக்டர். ராமதாஸ், கட்சியின் செயல் தலைவரான மகள் ஸ்ரீகாந்தி, கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, சேலம் அருள் ஆகியோர் மூலம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்தி, டாக்டர். ராமதாஸின் அணியை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு, ஓரிரு தொகுதிகளை ஒதுக்கி, வட மாவட்டங்களில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறாராம்.
அதே நேரம், திமுகவோ, தவெக-வோ எந்தக் கூட்டணியாக இருந்தாலும் தங்களுக்கு நியாயமான அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டியிடலாம் என்றும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளாரம்.
அப்படியே தனித்து போட்டியிடும் நிலை வந்தாலும் அன்புமணி தலைமையிலான அணியினர் போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் தன்னுடைய ஆதரவாளர்களைப் போட்டியிட வைத்து அன்புமணி ஆதரவாளர்களைத் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம்.

'டாக்டர் ராமதாஸ் அணி தனித்து போட்டியிட்டால் நமக்கு நல்லதுதான், அவருக்கு இடம் ஒதுக்கத் தேவையில்லை, விசிக தலைவர் திருமாவளவனைச் சமாதானப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை' என்று திமுக தலைமையும் பாஸ்ட்டிவாக பார்க்கிறதாம்.
அதே நேரம், 'டாக்டர் ராமதாஸ் அணி அன்புமணி அணிக்கு எதிராகப் போட்டியிட்டால் நமக்கு சிக்கல்தான், அதனால் அவரை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும்' என்று தேசிய ஜனனாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க டாக்டர் ராமதாஸின் இறுதி நிலைப்பாடு தெரிய வரும், அதனால் ஏற்படும் லாபம், நட்டம் யாருக்கு என்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.!திட்டமிடும் டாக்டர் ராமதாஸ்

















