செய்திகள் :

India - US Trade Deal: 'இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy'' - எஸ்.ஜி சூர்யா | களம் 02

post image

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'.

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

உலக அரசியலில் 'டொனால்ட் ட்ரம்ப்' என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. 'AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது.

இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும்


டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான்.

அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.

ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும்.

கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?

இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்:

  1. ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும்.

  2. பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம்.

  3. முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

எஸ்.ஜி.சூர்யா

எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம்

இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் 'அமெரிக்காவிடம் சரணாகதி' என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் 'Strategic Autonomy' எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம்.

வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி.

  1. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, 'என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்' என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது.

  1. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம்.

இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவதற்காக அல்ல; நாளை ஒரு பக்கம் தடைபட்டாலும், மறுபக்கம் நம் தேவைகள் பூர்த்தியாகும் என்பதை உறுதி செய்வதற்காகவே! இது ஒரு விவேகமான முதலீடு.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

காங்கிரஸ் காலத்துத் தவறுகளும், தற்போதைய திருத்தங்களும்

இன்று ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சிக்கு, அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த வர்த்தகத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில், 'Free Trade Agreements' (FTA) என்ற பெயரில் ஆசியான் (ASEAN), கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

  • காங்கிரஸ் ஆட்சியில் அவசர அவசரமாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களால், இந்தியச் சந்தை வெளிநாட்டுப் பொருட்களால் நிரம்பியது. ஆனால் நம் பொருட்களுக்கு அந்த நாடுகளில் சந்தை கிடைக்கவில்லை.

  • இதன் விளைவு? 2010-ல் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) குறைவாக இருந்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, 2020-க்குள் அது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்திய உற்பத்தித் துறை நசுக்கப்பட்டது.

ஆனால் மோடி அரசு அப்படியல்ல. RCEP ஒப்பந்தம் நம் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பாதிக்கும் என்று தெரிந்ததும், கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து துணிச்சலாக வெளியேறியவர் பிரதமர் மோடி. இப்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திலும், நம் விவசாயத் துறை மற்றும் பால்வளத் துறை (Dairy Sector) பாதுகாக்கப்பட்டுள்ளது.

'எங்களுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே கையெழுத்து' என்ற கெத்து, மோடி அரசின் தனித்துவம். விவசாயத்தையும் பால்வளத் துறையையும் அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டார்கள்" என்று கிளப்பப்படும் பீதியில் துளியும் உண்மையில்லை.

பால்வளம் (Dairy) மற்றும் விவசாயம் போன்ற நம் நாட்டின் உணர்வுப்பூர்வமான துறைகள் இந்த ஒப்பந்தத்தில் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. "இது எங்களின் Red Line இதில் சமரசம் கிடையாது" என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து, நமது விவசாயிகளின் நலனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்கப் பொருட்களுக்குக் கதவுகளைத் திறந்துவிடுவதாகச் சொல்வது அப்பட்டமான பொய். எங்கே நமக்குத் தேவையோ, எங்கே நம் தொழில்களுக்குப் பாதிப்பு இல்லையோ, அங்கு மட்டுமே வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மோடி என்னும் 'பிராண்ட்'

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இந்தியா 'ZERO TARIFF' என்று எல்லாவற்றையும் திறந்துவிடவில்லை. எங்கே நமக்குத் தொழில்நுட்பம் தேவையோ, எங்கே நமக்குச் சந்தை தேவையோ அங்கே மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

உலகமே ஆச்சரியப்படும் வகையில், அமெரிக்கா விதித்திருந்த தடைகளை உடைத்து, நமக்கான சாதகமான சூழலை உருவாக்கியது பிரதமர் திரு.மோடி அவர்களின் தனிப்பட்ட ஆளுமைக்கும், உலகத் தலைவர்களுடன் அவர் பேணும் நட்புக்கும் கிடைத்த வெற்றி. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சிக்கொண்டிருந்த நிலை மாறி, இன்று கண்ணியம் குறையாமல், நம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தகம் செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது.

மோடி

சீனாவுக்கு மாற்றாக உலகமே ஒரு உற்பத்தி மையத்தைத் தேடும் வேளையில், அமெரிக்கச் சந்தையில் நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வரிச்சலுகை, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 500 பில்லியன் டாலர் என்பது வெறும் கொள்முதல் அல்ல; அது இந்தியப் பொருளாதாரத்தின் மீதான உலகின் நம்பிக்கை.

காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், இது இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் என்பது புரியும்.!


(தொடரும்..!)

சென்னை: 'அரசுக்கு நன்றி; ஆனால் போராட்டம் தொடரும்!' - தூய்மைப் பணியாளர் போராட்டக்குழு

சென்னையில் தனியார்மயத்தை எதிர்த்து 150 நாள்களுக்கு மேலாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை மீண்டும் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களாகவே சேர்த்திருக்கிறது சென்னை மாநகராட்சி.கு.பாரதிஇது சம்பந்தமாக தூய்... மேலும் பார்க்க

தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணையுமா? - அஜித் பவார் மனைவி, மகன்களை சந்தித்த சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித்பவார் கடந்த மாதம் 28ம் தேதி நடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் துணைமு... மேலும் பார்க்க

'எங்க வீட்டுக்கு வாங்க' என்றழைத்த மோடி; கலைஞரின் எமோஷனல் பதில் - நினைவுக்கூர்ந்த ஜெகத்ரட்சகன்

திருவள்ளூரில் நேற்று (பிப்.5) திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி சந்திப்பின்போது நடந்த விஷயத்தை நினைவுக்கூர்ந்திருக்கிறார்.மேடையில் பேச... மேலும் பார்க்க

`திருச்செந்தூர் தொகுதியை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது' - அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், ”தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் க... மேலும் பார்க்க

"எடப்பாடி பழனிசாமியின் தடுமாற்றமே அதிமுகவின் தோல்வி பயத்தை பறைசாற்றுகிறது" - செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார், “அதிமுக தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு கட்டங்களாக வெளியிட்டுள்ளார். பொதுவாக தேர்... மேலும் பார்க்க

`நிகிதாவையும் அவருடன் பேசிய உயரதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்' - மடப்புரம் அஜித்குமாரின் தாயார்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ... மேலும் பார்க்க