Dhoni: "இதுவரை இருந்ததிலேயே மிகவும் ஆபத்தான அணிகளுள் ஒன்று" - டி20 உலகக்கோப்பை க...
மும்பை டேங்கர் லாரி விபத்து; 12 மணி நேரம் 22 கிமீ தூரம் நின்ற 30 ஆயிரம் லாரிகள்; அரசு பஸ்கள் ரத்து
மும்பை-புனே நெடுஞ்சாலை பொதுவாகவே எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். மும்பையில் இருந்து புனே செல்ல 3 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சில நேரங்களில் நெடுஞ்சாலையில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் பயண நேரம் அதிகரிக்கும்.
இந்தச் சாலையில் புனேயில் இருந்து மும்பை நோக்கி வரும் வழித்தடத்தில் அதோஷி சுரங்கப்பாதை அருகில் டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. புரொபொலினே என்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கேஸை அந்த டேங்கர் லாரி கொச்சியில் இருந்து எடுத்துக்கொண்டு குஜராத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
டேங்கர் விபத்துக்குள்ளாகி சரிந்தவுடன் அதிலிருந்து கேஸ் கசிய ஆரம்பித்தது.
இதனால் புனே-மும்பை நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை நிறுத்தினர். மாலை 5 மணிக்கு இந்த விபத்து நடந்தது. மறுநாள் காலை வரை இந்தப் போக்குவரத்து சரி செய்யப்படவில்லை.

போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மும்பை நோக்கி வந்த லாரிகள், கார்கள் என அனைத்து வாகனங்களும் அப்படியே 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் 163 அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.
டேங்கரில் ஏற்பட்ட கசிவை அடைக்க தீயணைப்புத் துறையினரும், பாரத் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கேஸை வேறு டேங்கர் லாரிகளுக்கு மாற்றினர். இச்சம்பவத்தால் 30 ஆயிரம் லாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ரூ.20 கோடி அளவுக்கு லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 3 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்தை 12 மணி நேரத்தில் கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதிகமானோர் 12 மணி நேரத்திற்கும் மேலாக வாகனத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மும்பையில் மருத்துவமனைக்குச் செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 10 மணி நேரத்திற்கும் மேல் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவித்தனர்.





















