கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும்...
`எங்களால் விடமுடியாது'- கொரிய விளையாட்டுக்கு அடிமை; 9வது மாடியிலிருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த சேதன் குமாரின் என்பவரின் மகள்கள் விஷிகா (16), பிராச்சி (14), பாகி(12). இவர்கள் மூவரும் எதைச் செய்தாலும் ஒன்றாகத்தான் செய்வார்கள். மூன்று பேரும் கொரிய ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்தனர். அதில் வரக்கூடிய சவால்களை ஏற்று, அவற்றைச் செய்து முடிப்பதில் தீவிரம் காட்டினர்.

கொரிய மோகம்
அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சிறுமிகள் 3 பேரும் 9-வது மாடியில் உள்ள பால்கனிக்குச் சென்று உள்பக்கமாக பூட்டிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்தனர். அவர்களின் சத்தம் கேட்டு கட்டட வாட்ச்மேன் மற்றும் சிறுமிகளின் பெற்றோர் ஓடிச் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் இறந்து கிடந்தனர். சிறுமிகளின் தாயார் துக்கம் தாளமுடியாமல் கதறி அழுது கொண்டிருந்தார். இது குறித்து போலீஸாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து மூவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Really Sorry, Papa
போலீஸாரின் விசாரணையில் மூன்று சகோதரிகளும் எப்போதும் கொரியன் ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதில் நேரத்தைச் செலவிட்டு வந்தது தெரியவந்தது. இது தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. இதற்காகவே அவர்கள் இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்வதைக்கூட நிறுத்திவிட்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 8 பக்கங்களுக்கு கைப்பட கடிதம் எழுதி வைத்திருந்தனர். அதில் இருக்கும் அனைத்தையும் படிக்கும்படியும், அதில் இருக்கும் அனைத்தும் உண்மை என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு தங்களது தந்தையிடம் 'I'm really sorry. Sorry, Papa' எனக் கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பாக்கெட் டைரியில் எட்டு பக்கத்துக்கு மொபைல் விளையாட்டு மற்றும் மொபைல் போனின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக எழுதியுள்ளனர். இது குறித்து தற்கொலை செய்த சிறுமிகளின் தந்தை சேதன் குமார் கூறுகையில், ''அவர்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது அவர்கள் அனைத்திலும், கொரிய பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர் என்று தெரிகிறது. அவர்கள் கடிதத்தில் `அப்பா, மன்னிக்கவும், கொரியாதான் எங்கள் வாழ்க்கை, கொரியா மீதான எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய காதலை, நீங்கள் என்ன சொன்னாலும், எங்களால் கைவிட முடியாது' என்று குறிப்பிட்டுள்ளனர்.
`கொரியா தான் எங்கள் வாழ்க்கை'
இது போன்ற ஒரு நிலை எந்தப் பெற்றோருக்கும் அல்லது குழந்தைக்கும் நடக்கக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டுகள் விளையாட அனுமதிக்கக் கூடாது. அந்த விளையாட்டைப் பற்றி எனக்குத் தெரிந்திருந்தால், நான் அவர்களை ஒருபோதும் விளையாட அனுமதித்திருக்க மாட்டேன்" எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் அவர்கள் மொபைல் விளையாட்டுக்கு அடிமையானார்கள். அதன் பிறகு அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை நிறுத்தினர். அதன் பிறகு ஒரேடியாக பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர்.
மூன்று சிறுமிகளும் கொரியப் பெயர்களையும் தங்களுக்கு சூட்டிக்கொண்டிருந்தனர். மூன்று சகோதரிகளில் நடுவில் உள்ள பிராச்சிதான் எல்லாவற்றிலும் அவர்களுக்குத் தலைவராக இருந்தார். மேலும் இந்த ஆபத்தான விளையாட்டிலும் அவரே முன்னின்று வழிநடத்தியதாக அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை குறித்து துணை காவல் ஆணையர் நிமிஷ் படேல் கூறுகையில், "இதுவரை நடந்த விசாரணையில் எந்தவொரு குறிப்பிட்ட விளையாட்டின் பெயரும் தெரியவரவில்லை. ஆனால் அந்தப் பெண்கள் கொரிய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டிருந்ததும், அதை தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. கடந்த சில நாள்களாக, அவர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அவர்களைப் பாதித்ததாகத் தெரிகிறது" என்று கூறினார்.
விளையாட்டில் சவாலை ஏற்று ஜன்னல் வழியாக குதித்தார்களா என்று கேட்டதற்கு, அது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
சிறுமிகளின் தற்கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



















